பிரித்தானியத் தமிழர் பேரவை அறிக்கை
முந்தைய செய்தி
சட்ட மன்றத் தீர்மானம் அவலப்பட்ட ஈழத்தமிழ் மக்களிற்குப் புதிய நம்பிக்கையை ஊட்டுகின்றது: பிரித்தானியத் தமிழர் பேரவை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் செயலலிதா அம்மையார் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை வரவேற்பதாக அறிவித்துள்ள பிரித்தானியத் தமிழர் பேரவை, இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி ஈழத்தமிழ் மக்களின் இன்னல் தீர அம்மையார் தொடர்ந்தும் குரல்கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கை:
சிறீலங்கா அரசாங்கத்தைப் போர்க்குற்றம், மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்த அரசாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் அவையை இந்தியா வலியுறுத்த வேண்டும் எனவும், சிறீலங்கா அரசாங்கம் மீது பொருண்மியத் தடை ஏற்படுத்தி அடிபணிய வைக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா அம்மையார் கொண்டுவந்து, ஒரு மனமாக நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை பிரித்தானிய தமிழ் மக்கள் சார்பில் வரவேற்கிறோம்.
ஈழத் தமிழர்கள், சிங்கள மக்கள் போன்று சம உரிமையுடன் வாழ வழிசெய்ய வேண்டும் எனவும், இடம்பெயர்ந்த மக்கள் உடனடியாகத் தமது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றப்பட வேண்டும் என்றும் தங்களின் தீர்மானத்தில் கூறியுள்ளதையும் வரவேற்கிறோம்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனமாக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையை ஆறரைக்கோடி தமிழ்நாட்டு உறவுகளின் தீர்மானமாக நாம் பார்க்கின்றோம்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரும், தேர்தலில் வெற்றிபெற்ற பின்னரும் தாங்கள் வெளியிட்ட கருத்துகள் எமக்கு நம்பிக்கையூட்டுவதாக இருப்பதாகக் கடந்த எமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருந்தோம்.
தற்பொழுது தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாங்கள் நிறைவேற்றியுள்ள தீர்மானமானது, அவலப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்குப் புதிய நம்பிக்கையை ஊட்டுவதாக அமைந்துள்ளது.
ஈழத்தில் பல்லாயிரக் கணக்கில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர், போர்க்குற்றம் இடம்பெற்றுள்ளது, மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன, ஊடகங்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டுள்ளது போன்ற அவலங்களைத் தங்களின் தீர்மானம் வலியுறுத்தி நிற்கின்றது.
இவை அனைத்தும் தமிழின அழிப்பின் கட்டங்கள் என்பதால், இன அழிப்பு இடம்பெறுகின்றது என்பதை அனைத்துலகக் குமுகாயம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கடப்பாடு இருக்கின்றது.
தங்களது அதிகார எல்லைக்கு உட்பட்டு இந்திய அரசை வலியுறுத்துவேன் எனக் கூறியதுபோன்று, தாங்கள் மேற்கொண்டுவரும் இந்த முயற்சிகளுக்கு உலகத் தமிழர்கள் நிச்சயம் துணை நிற்பர் என நம்புகின்றோம்.
அத்துடன், தங்களின் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளித்து, ஈழத்தமிழ் மக்களின் மீது தமது அன்பையும், பரிவினையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ள தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளுக்கும் நாம் எமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி அகில இந்திய மட்டத்தில் ஈழத்தமிழ் மக்களின் சிக்கலை முன்னகர்த்தி, அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கத் தாங்கள் துணை நிற்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
பேச்சுடன் நின்று விடாத தங்களின் செயல்வீரத்திற்கு எமது மனம் நிறைந்த நன்றியையும், பாராட்டுகளையும் மீண்டும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
நன்றி
பிரித்தானியத் தமிழர் பேரவை
Leave a Reply