55varumai_ozhippu_sangam

பூட்டியே கிடக்கும் வறுமை ஒழிப்புச் சங்கங்கள்

தேவதானப்பட்டி பகுதியில் சிற்றூர் வறுமை ஒழிப்புச் சங்கங்கள் செயல்படாமல்பூட்டியபடியே கிடக்கின்றன.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இச்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் உள்ளனர். இச்சங்கம் திறக்கப்படாமல் இருக்கும்பொழுதே சம்பளம் எடுத்துக்கொள்கின்றனர். இவைதவிரப் போலி ஆவணம் தயார் செய்து அரசுப்பணத்தை மோசடி செய்கின்றனர்.

மேலும் சங்கத்திற்கு வருகின்ற ஐம்பதாயிரத்தைச் செயலாளர் இசைவில்லாமல் கணக்காளர் மற்றும் தலைவர்கள் இணைந்து பணத்தை எடுத்துப் போலி ஆவணம் தயார் செய்து அரசிற்குக் கணக்கு காட்டி வருகின்றனர்.

இதன் தொடர்பாக உதவித் திட்ட அலுவலர், ஊராட்சித்தலைவர்களிடம் முறையீடு அளித்தாலும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. மேலும் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றால் அதனைக் கண்டுபிடித்து முறையீடு தருபவர்களை நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் விலக்கிவிட்டு வேறுஆள்களை நியமிப்பது வாடிக்கையாக உள்ளது.  மேலும் போலி ஆவணம் தயார் செய்வதற்கு உடந்தையாகக், கணக்காளர், உ.தி.அ., நிதி நிருவாகிகள், திட்டப்பணியாளர் ஆகியோர் உள்ளனர்.

எனவே சிற்றூர் வறுமை ஒழிப்புச்சங்கத்தில் இதுவரை பணம் வழங்கிய விவரத்தை ஆய்வு மேற்கொண்டால் பல மோசடிகள் அம்பலமாகும். இதன் தொடர்பாக மாவட்ட ஆட்சியகத்தில் ஒவ்வொரு சங்கத்தின் மீதும் முறையீடு நிலுவையில் உள்ளது.

எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் சிற்றூர் வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மீது ஆய்வு மேற்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியகத்திற்கு புகார் மேல் புகார் அளித்து வருகிறார்கள்.

55vaikai aneesu