பெண்கள் உடல்நலம் பேணுவது எப்படி?
பெண்கள் உடல்நலம் பேணுவது எப்படி?
பள்ளி மாணவிகளுக்கு மருத்துவர் வழி காட்டுதல்
தேவகோட்டை- தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான மருத்துவ அறிவுரைக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆ.கா.க.(எல்.ஐ.சி.)க் கிளை சார்பாக நடைபெற்றது.
இப்பள்ளியில் மாணவிகளுக்கு தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த விழிப்புணர்வு மருத்துவ அறிவுரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
வழிகாட்டுதல் முகாமிற்கு வந்தவர்களை ஆசிரியை சாந்தி வரவேற்றார். தேவகோட்டை ஆ.கா.க. கிளையின் மேலாளர் மோகனசுந்தரம் தலைமை தாங்கிப் பேசினார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். கண்ணங்குடி அரசு தொடக்க நல்வாழ்வு நிலையப் பொது மருத்துவர் பாண்டி பிரியா, பல் மருத்துவர் மல்லிகை செண்பகவல்லி ஆகியோர் பள்ளி மாணவிகளிடம் தற்தூய்மை பேணுதல் குறித்து விளக்கமாகக் கூறினார்கள்.
படர் தாமரை நோய் வரக் காரணம் என்ன ?
மருத்துவர்கள் மாணவர்களிடம் பேசும்போது, அன்றாடம் நன்றாகக் குளிக்க வேண்டும்; பல் தேய்க்க வேண்டும். எந்த ஒரு செயல் செய்தாலும் 48 நாட்கள் தொடர்ந்து செய்தால் அது உங்கள் பழக்கமாகி விடும். தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். சிறுநீரை எக்காரணம் கொண்டும் அடக்கக் கூடாது. அதனால் பல்வேறு நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. கிருமித் தொற்று ஏற்படும். எனவே சிறுநீர் வந்தால் உடனே சென்று விடவேண்டும். வீட்டில் ஒரே வழலை(சோப்பு), ஒரே துண்டு என அனைவருக்கும் ஒன்று என்று பயன்படுத்தக் கூடாது. ஒரே துண்டு பயன்படுத்துவதால் படர் தாமரை என்ற பூஞ்சை அதிகமாகப் பரவ வாய்ப்புள்ளது. அனைத்துத் துணிகளையும் நன்றாகத் துவைத்து வெயிலில் காயப்போட்டுப் பயன்படுத்த வேண்டும்.
கையில் சில பேருக்கு பொரி பொரியாக வருவதற்குக் காரணம் மண்ணில் விளையாடுதல். தண்ணீர் சரியாகக்குடிக்காமல் இருந்தாலும் அவ்வாறு வரும். புற்று நோய் அப்பாவுக்கு இருந்தால் மரபு வழியாகப் பிள்ளைகளுக்கும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நகங்களைக் குறிப்பிட்ட கால அளவுக்குள் வெட்டி விடவேண்டும். நகங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மலம் கழித்த பின்பும், சிறுநீர் இருந்த பின்பும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். கால்களுக்குச் செருப்பு கண்டிப்பாகப் போட வேண்டும். அப்போதுதான் பல்வேறு நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மாத விடாய்க் காலத்தில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
பெண்கள் பொதுவாக வயதுக்கு வருவதை ஏதோ என்று நினைத்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு உடம்பும், மனமும் வேறுபட்டுக் காணப்படும். பெண்கள் வயதுக்கு வருவது தொடர்பாக நீங்கள் அனைவரும் இந்த வயதில் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறர் நம்மைத் தொடுவதில் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் எது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். உறவினர்கள் யாரேனும் தவறான தொடுதல் செய்தால் அதனை ஆசிரியரிடமோ அம்மாவிடமோ கட்டாயம் சொல்ல வேண்டும். பெண்கள் பருவமடையும்போது சில உடல் உறுப்புகள் வளர்ச்சி அடையும். உடலில் சில இடங்களில் முடிகள் அதிகமாகும். இவற்றைக் கண்டு பயம் வேண்டா. இது தானாக இயற்கையில் வளர்ச்சி அடையும்போது நடைபெறுபவை ஆகும். இதற்காகப் பயம் வேண்டா. பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் தேவையில்லாத சிந்தனைகள், தலைவலி வரலாம். யாரைப் பார்த்தாலும் கோபம் கூட சமயங்களில் அதிகமாக வரலாம். கெட்ட எண்ணங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இது போன்ற சமயங்களில் தண்ணீர் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாக குடித்தால் உடல் நலம் ஓரளவு உங்கள் கட்டுக்குள் வரும். தண்ணீர் அதிகம் குடித்தால் மாதவிடாய்க் காலங்களில் பல்வேறு நோய்த் தொற்றுகளைச் சரி செய்து கொள்ளலாம்.
கறிக் கோழி (பிராய்லர்) உண்பதால் பெண்கள் பருவம் அடைதல் பாதிப்பு
கறிக்கோழி யாரும் சாப்பிடவேண்டா. அதனைச் சாப்பிடுவதனால் உடம்பு எடை அதிகமாகிறது. மிகக் குறைந்த வயதில் பெண்கள் பருவம் அடைகின்றனர். மாதவிடாய் நேரங்கள் சரியாக வருவதில்லை.அதாவது குறிப்பிட்ட கால அளவுக்குள் சரியாக வருவது கிடையாது. இதனால் பல்வேறு உடல் சார் சிக்கல்களைப் பெண்கள் சந்திக்க வேண்டி உள்ளது. மிகக் குறைந்த வயதில் கருப்பைச்சிக்கல்களைப் பெண்கள் சந்திக்க வேண்டி உள்ளது. எனவே மாணவிகளான நீங்கள் சிறு வயதிலேயே (பிராய்லர்) கறிக்கோழி சாப்பிடுவதைத் தவிர்த்து விடுங்கள். உங்கள் உடம்புக்கு நல்லது. உணவில் நல்ல அதிக அளவு காய்கறி எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இரும்புச் சத்துள்ள முருங்கைக்கீரை, உளுந்துக் கஞ்சி, மாதுளம் பழம், எல்லாச் சத்தும் நிறைந்த பழமான கொய்யாப் பழம் போன்றவற்றை உணவில் அதிக அளவு எடுத்துக்கொள்ளுங்கள். நவாப்பழம் (நாகற்பழம்) சாப்பிடுவது உடல் சூட்டை நன்றாகக் குறைக்கும். பெற்றோர்கள் குழந்தைகள் முன்பு சண்டையிட்டுக் கொள்ள வேண்டா. அவ்வாறு சண்டையிட்டுக் கொள்வதால் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் போவது, கை சூப்புவது போன்ற பழக்கங்கள் ஏற்படுகின்றன. இது நாளடைவில் தீவிரமடைந்து பல்வேறு சிக்கல்களை உண்டாக்குகிறது. எனவே பெற்றோர் எந்தச் சிக்கலாக இருந்தாலும் குழந்தைகள் முன்பு சண்டை போடவேண்டா.
இவ்வாறு மருத்துவர்கள் மாணவிகளிடமும்,பெற்றோர்களிடமும் பேசினார்கள் .மாணவிகள் தனலெட்சுமி, இராசேசுவரி, பரமேசுவரி, சந்தியா முதலான மாணாக்கியர் பலரும் கேள்விகள் கேட்டுத் தெளிவு பெற்றனர். மாணவிகளின் பெற்றோரும் அதிக அளவில் இந்த முகாமில் கலந்து கொண்டு கேள்விகள் கேட்டுத் தெளிவுகள் பெற்றனர்.
நிறைவாக ஆ.கா.க. வட்டார வளர்ச்சி அதிகாரி முத்துக்குமார் நன்றி கூறினார்.
Leave a Reply