பொது(நீட்)தேர்வை எப்பாடுபட்டாவது விரட்டியடிக்க வேண்டியது நமது கடமை – இராமதாசு
பொது(நீட்)தேர்வை எப்பாடுபட்டாவது
விரட்டியடிக்க வேண்டியது நமது கடமை
பணம் இருந்தால்தான் மருத்துவக்கல்வியா? – இராமதாசு கேள்வி
பணம் இருந்தால் மட்டும்தான் மருத்துவக் கல்வியைப்பற்றி நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலை உருவாகி வருவது மன்பதைக்கு நல்லதல்ல என்று பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு (நீட்) அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதல்ல. சிற்றூர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக்கல்வி வாய்ப்புகளைப் பறிப்பதுதான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் புள்ளி விவரங்கள் வெளியாகி வருகின்றன. பணம் இருந்தால் மட்டும்தான் மருத்துவக் கல்வியைப்பற்றி நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலை உருவாகி வருவது மன்பதைக்கு நல்லதல்ல.
தமிழகத்தில் நடப்பாண்டில் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்ட 3534 அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 1220 இடங்கள் மத்தியக்கல்விவாரியம் உட்படப் பிற பாடத்திட்ட மாணவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன. மாநிலப் பாடத்திட்ட மாணவர்களைக் கொண்டு 2314 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை மத்தியப் பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் பொதுத்தேர்வு (நீட்) எவ்வாறு பறிக்கிறது என்பது குறித்து ஏற்கெனவே விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. பொதுத்தேர்வு (நீட்) மாநிலப் பாடத் திட்ட மாணவர்களிலேயே வசதி படைத்த மாணவர்களுக்கு சாதகமாக உள்ளது என்பதுதான் தமிழக அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களில் இருந்து மெய்ப்பிக்கப்பட்டிருக்கும் வருத்தமளிக்கும் உண்மை.
மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் 2314 பேரில் 1004 மாணவர்கள் பழைய மாணவர்கள் ஆவர். அதேபோல் மருத்துவம் சேர்ந்துள்ள மத்திய வாரிய(சி.பி.எசு.இ.) மாணவர்கள் 1220 பேரில் 351 பேர் பழைய மாணவர்கள் ஆவர். இவர்கள் அனைவருமே 2016-ஆம் ஆண்டில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். கடந்த ஓராண்டாக வேறு எதுவும் செய்யாமல் ஆந்திரா, தெலுங்கானா, இராசசுதான், மராட்டியம், கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற பயிற்சி மையங்களுக்கு சென்று பொதுத்தேர்வுக்காகச் சிறப்புப் பயிற்சி பெற்று வந்தவர்கள் ஆவர். பொதுத்தேர்வு (நீட்) சிறப்புப் பயிற்சிக்காக ஒவ்வொரு மாணவரும் செலவிட்ட தொகை உரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.
இந்தியா முழுவதும் பல்வேறு வகையானப் பாடத்திட்டங்கள் இருப்பதால் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகத் தான் பொதுத்தேர்வு (நீட்) நடத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், மத்திய வாரிய(சி.பி.எசு.இ.)பாடத்திட்டத்தின் அடிப்படையில் பொதுத்தேர்வு (நீட்) நடத்தப்பட்டது சமவாய்ப்புக் கொள்கைக்கு எதிரான முதல் வஞ்சகமாகும். அடுத்ததாக சிற்றூர்ப்புற ஏழை மாணவர்கள் ஒரே நேரத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கும், எந்த வசதியும் இல்லாமல் சொந்த முயற்சியில் பொதுத்தேர்வு(நீட்தேர்வு)க்கும் தயாராகும் போது, வசதி படைத்த ஒரு தரப்பினர் மட்டும் 12-ஆம் வகுப்பை முடித்து விட்டு, பொதுத்தேர்வு (நீட்டு)க்காக மட்டும் ஓராண்டு படித்து மருத்துவ இடங்களை கைப்பற்றிச் செல்வது எந்த வகையில் சமவாய்ப்பும், குமுகாய நீதியும் ஆகும்.
12-ஆம் வகுப்புத் தேர்வுக்கு ஓராண்டும், பொதுத்(நீட்)தேர்வுக்கு இன்னோராண்டும் தயாராவது என்பது பணம் கொட்டிக் கிடக்கும் வசதி படைத்த குடும்பத்து மாணவர்களுக்கு மட்டுமே சாத்தியமானதாகும். அன்றாடம் வேலைக்கு சென்று அரை வயிற்றை நிறைக்கும் ஏழைக் குடும்பத்து மாணவர்களுக்கு இது சாத்தியமல்ல. இப்படியாக நன்றாகப் படிக்கும் ஏழை மாணவர்களின் வாய்ப்புகளையெல்லாம் பறித்து பணக்கார மாணவர்களுக்குத் தாரை வார்ப்பதற்காகத் தான் பொதுத்தேர்வு (நீட்) கொண்டு வரப்பட்டிருக்கிறது என்பதற்கு
இதை விடச் சிறந்த எடுத்துக்காட்டு இல்லை. மன்பதைநீதியை இதைவிடக் கொடூரமாகக் கொலை செய்ய முடியாது.
இதனால் தான் பொதுத்தேர்வு (நீட்) முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவக் குழு வலியுறுத்திய போதிலும், அதை மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாசு கடுமையாக எதிர்த்தார். அதன்பின்னர் 2010-ஆம் ஆண்டு பொதுத்தேர்வு (நீட்) அறிமுகப்படுத்தப் பட்ட பின்னரும் அதை பாட்டாளி மக்கள் கட்சி மிகக்கடுமையாக எதிர்த்ததற்குக் காரணம் இது தான். பொதுத்தேர்வு(நீட்) மன்பதைஅநீதியை ஊக்குவிக்கும் என்ற பா.ம.க.வின் குற்றச்சாற்று மெய்ய்ப்பிக்கப்பட்டுவிட்டது.
எனவே, பொது(நீட்)தேர்வை எப்பாடுபட்டாவது விரட்டியடிக்க வேண்டியது நமது கடமையாகும்.
இவ்வாறு மரு.இராமதாசு பொதுத்தேர்வு மூலம் நமக்க இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
Leave a Reply