அருவினைகள் படைக்கும் மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரிக்கு

மாகாணக் கல்வி அமைச்சர்

வே.இராதாகிருட்டிணன் திடீர்  வருகை

  மலையகத்தில் காணப்படும் தேசியக் கல்லூரிகளில் நிலவும் நிருவாகச் சீர்கேடுகளினால் மலையத்திற்கான தேசியக் கல்வியற் கல்லூரிகளின் எதிர்காலம் குறித்துக் கவலை அடைய வேண்டிய நிலை யாவரும் அறிந்ததே! இதற்குக் காரணம் கல்லூரியின்  முதன்மை குறித்து அக்கரை இன்றிச் செயலாட்சியர் செயற்பட்டமையாகும் என்று  அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.  இப்போது இந்தக் கல்வியற் கல்லூரியின் செயற்பாடுகள் ஒரளவு மாற்றத்தைக் கொண்டிருந்தாலும் இன்றும்  சில மாதங்களில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு  மாகாணக்கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் நடவடிக்கை எடுத்து இருப்பது பாராட்டதக்க ஒன்றாகும்.

  கல்விக்கு இனம், மதம், மொழி, சாதி தேவையில்லை என்று இருந்தாலும்  ஓர் இனத்தின் அடையாளத்தைக் கட்டிக் காக்க வேண்டிய இயல்புகளைக் கொண்டு பாதுகாப்பது கட்டாயமானதாகும். இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு தேசியக் கல்வியற் கல்லூரிக்கு  மாகாணக்கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் அண்மையில்  வருகை மேற்கொண்டிருந்தார்.  இதன்போது கல்லூரியில் காணப்பட்ட நிறை குறைகள்பற்றிக் கல்லூரியின்  செயலாட்சியர்களுடன் கலந்துரையாடப்பட்டது. அதனை உடனடியாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற் கொள்ளபட்டு வருகின்றன. குறிப்பாக மலையகத்தில் வடகாடு-பாறைக்காடு ஆகிய நோர்வுடு ரொக்வுடு தோட்டத்தில் பிறந்த  திருவாளர் எசு. இராசேந்திரன் இதன் பீடாதிபதியாகக் கடமையாற்றி வருகின்றார். இவரின்  பெரு முயற்சியால் கல்லூரி பல  அருவினைகளை நிறைவேற்றி வருகின்றது. இதன் சுற்றுபுறச் சூழல் மிகவும் இதமாகவும் கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் காணப்பபடுவது வரவேற்கத்தக்கதாகும்.

   இலங்கை ஆசிரியர் சேவையில் தரம் 3.1 க்கு  பணியமர்த்தம் பெறவிருக்கும் ஆசிரியர்களுக்கான  சேவை-முன்பயிற்சியை வழங்கும் நிலையங்களாகத் தேசியக் கல்விக் கல்லூரிகள் காணப்படுகின்றன. இலங்கையில் பத்தொன்பது தேசியக் கல்விக் கல்லூரிகள் இந்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றன. கடந்த காலத்தில் வருடந்தோறும் மூவாயிரம் பேருக்குக் கற்பித்தலில் தேசிய  பட்டயப் பட்டத்துக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவ்வருடம்  ஏறத்தாழ நாலாயிரம் பயிலுநர்கள் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் காணப்படும் மட்டக்களப்பு தேசியக் கல்விக்கல்லூரிக்கு இருநூறு பயிலுநர்கள்  இசைவளிக்கப்பட்டுள்ளனர். 1995ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இக்கல்லூரி  பல்வேறு  இயல்புகளில் தனித்துவமான தன்மைகளை வெளிப்படுத்தி வருகின்றது.

   இலங்கை ஆசிரியக் கல்வியியலாளர் சேவையின் தரம் ஒன்றுக்கு 2010.01.01 முதல் பதவி உயர்த்தப்பட்ட மலையகத்தின் வடகாடு-பாறைக்காடு ஆகிய நோர்வுடு ரொக்வுடு தோட்டத்தில் பிறந்த  திருவாளர் எசு. இராசேந்திரன் 2013ஆம் ஆண்டு இக்கல்லூரிக்குப் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார் இவரது தலைமையில் இருபத்து மூன்று ஆசிரியக் கல்வியிலாளர்களும் நாற்பத்து நான்கு கல்வி சாராப் பணியாளர்களும் ஒற்றுமையுடன் செயலாற்றுவதன் மூலம் பயிலுநர் ஆசிரியர்களின் பல்துறை  ஆற்றல்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கல்விசார் செயற்பாடுகள், பாட இணைச் செயற்பாடுகள் சுற்றாடல் சுத்தம் டெங்கு நோய் பரப்பும் நுளம்புகளின் கட்டுப்பாடுபோன்ற நடவடிக்கைகளில் முன் மாதிரியாக திகழும் இக்கல்லூரியின் எதிர்கால வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 தேர்வுப் பெறுபேறுகளில் இக்கல்லூரி சிறந்த அடைவை வெளிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  கடந்த காலங்களில் இடம் பெற்ற வெளிவாரித்  தேர்வுகளில் சித்தி எய்தத் தவறியமையால் நியமனம் பெறத் தகுதியற்றவர்கள் என்ற வகையில் பலர் வாய்ப்புகளை இழந்துள்ளனர். எனினும் 1995 முதல் இயங்கி வரும் மட்டக்களப்பு தேசியக் கல்விக்கல்லூரி, இவ்வாறு  தேர்வில் தோல்வியடைந்து இடை நீங்கியவர்கள் ஒருவரும் இல்லை என்ற பெருமிதத்தைக் கொண்டுள்ளது. இக்கல்லூரியில் தற்போது ஏழு பாட நெறிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.  கட்டமைப்பு(நிருமாண)த் தொழில்நுட்பம், இயந்திரத் தொழிநுட்பம், மின்சாரம் மற்றும்  மின்னணுவியல் தொழில் நுட்பம் ஆகிய பாடங்களுக்கான பயிற்சிகள் தமிழ் மொழி மூலம்  வழங்கப்படுகின்ற ஒரேயொரு கல்லூரி இதுவாகும்.

  மனித வளம் மற்றும்இயைபு(பௌதீக) வளக் குறைபாடுகள் பலவற்றைக் கொண்டுள்ள போதிலும் அனைவரினதும் கூட்டு உழைப்பின் மூலம் பல  அருந்திறல்கள் நிலை நாட்டப்பட்டுள்ளன கல்லூரிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் கடந்த இரு வருடங்களில் முறையே நான்காம் ஐந்தாம் இடங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தை வென்ற பெருமை இக்கல்லூரி பயிலுநர்களைச் சாரும்.

  சுற்றூழியர்கள் இல்லாத போதிலும் வார இறுதிநாட்களில் மேற்கொள்ளப்படும்  உழைப்புதானம் மூலமும் நாள் தோறும்  ஒரு வகுப்பினர் துப்பரவு செய்வதன் மூலமும் கல்லூரி வளவு  தூய்மைப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும். ஊழியர்களும் இப்பணியில் ஆர்வமுடன் ஈடுபடுகின்றமை பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. அண்மையில் இக்கல்லூரிக்கு  வருகை புரிந்த மாகாணக் கல்வி அமைச்சர் நேரடியாகப் பார்வையிட்டு அனைவரையும் பாராட்டியமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் போது இங்கு நிலவும் குறைபாடுகள் குறித்து அமைச்சருக்கு  முறையீடு ஒன்றும் அளிக்கப்பட்டது. இதனைச் சரி செய்ய அமைச்சு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றது.

  தற்போதைய பீடாதிபதி கல்லூரியின் தேவைகளைக் கல்வியமைச்சுக்கு எடுத்துக் காட்டியதன் அடிப்படையில் பதினாறு வகுப்புகளுக்கான புதிய கட்டடம் அமைக்கப்பட்டு வருகின்றது. மேலும் நூறு பயிலுநர்களுக்கான புதிய விடுதியொன்றை அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆண் ஆசிரியப் பயிலுநர்களுக்கான தற்காலிகக் கழிப்பறை அமைக்கப்பட்டு வருகின்றது. நீண்ட காலமாக நிலவி வந்த புறாக்களின் தொல்லை பழுது பார்த்தல் நடவடிக்கை மூலம் நீக்கப்பட்டுள்ளமையைப் பயிலுநர்கள் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  வெவ்வேறு ஒவ்வொரு பாட நெறியைச் சேர்ந்த பயிலுநராசிரியர்கள் வருடந் தோறும் நடத்தி வருகின்ற கண்காட்சி நிகழ்வுகள் பலராலும் பாராட்டப்படுககின்றன. மேலும் பாடசாலையும் சமூகமும் என்ற வேலைத்திட்டத்தின் மூலம் அயலிலுள்ள  பாடசாலைகள்  மேம்பாடு செய்யப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும். இதனை முறையாகச் செயற்படுத்திவரும் மலையகத்தில் வடகாடு-பாறைக்காடு ஆகிய நோர்வுடு ரொக்வுடு தோட்டத்தில் பிறந்த  திருவாளர் எசு. இராசேந்திரன் அவர்களை நாம் அனைவரும் பாராட்டுவோம். தற்போது இவரது சேவை மீண்டும் மலையகத்திற்குக் கிடைக்க இருப்பது பாராட்டதக்க ஒன்றாகும். இவரை மலையகம் மீண்டும் வரவேற்கும் அதே வேலை தனது சேவையைத் தொடர்ந்து அங்கு போல் இங்கும் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

[படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.]

 

பெயர்-பா.திருஞானம் : peyar_paa.thirugnanam02