மந்தை இல்லை! திருமணமும் இல்லை! – வைகை அனிசு
தேனிப் பகுதியில் மந்தை இல்லாமல்
தடைப்படும் திருமணங்கள்
தேனிமாவட்டம் அருகே உள்ள கதிரப்பன்பட்டி, தண்ணீர்ப்பந்தல், அ.வாடிப்பட்டி, கோட்டார்பட்டி முதலான சில சிற்றூர்களில் இன்றும் பழமை மாறாமல் ஊர்மந்தையில் வைத்து திருமணங்கள் நடைபெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தற்பொழுது மாறிவரும் காலச்சூழலுக்கேற்ப மந்தைகள் பிற பயன்பாடுகளுக்கு வலிந்து உள்ளாக்கப்பட்டமையினாலும் மந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமையாலும் திருமணங்கள் தடைப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எந்தச் சமூகமாக இருந்தாலும் பந்தல்கால்/கொட்டகைக்கால் நடும் பழக்கம் இன்றளவும் உள்ளது. வசதிபடைத்தவர்கள் திருமணம், மண்டபத்தில் நடத்தினாலும் பந்தல்கால்/கொட்டகைக்கால் நடும் பழக்கம் இன்று வரை வழக்கத்தில் உள்ளது.
திருமணம் நடைபெறும் குறிப்பிட்ட நாள்களுக்கு முன்னர் மணமனையின் முற்றத்தில் கன்னி மூலையில் தரையில் குழி ஒன்று தோண்டி அதைச்சுற்றி மாப்பொடி மஞ்சள் பொடிகொண்டு சதுரவடிவில் கோலமிடுவார்கள். அதன் அருகில் பெரிய வாழையிலை ஒன்றின் மீது சிறிய பூசை விளக்கு, மஞ்சள் பிள்ளையார், நிறைநாழி, வழிபாட்டிற்குரிய பொருள்களுடன் பால்கிண்ணம் ஒன்றும் வைத்து ஒரு கிளையுடன் கூடிய தேக்கு மரக்கால் 9 அடி அளவில் ஒன்றில் அடுத்தடுத்து செம்மண் காவிப்பட்டையும் சுண்ணாம்புப் பட்டையும் தீட்டுவார்கள். காலின் உச்சியில் மாங்குலை, சிவப்பு நிறத்துணி, மஞ்சள் தேய்த்த சிறிய நுனியில் ஒன்பான்கூலம்(நவதானியம்) இட்டுப் பொதிந்த சிறிய மூட்டை ஆகியவற்றை மஞ்சள் கயிற்றால் கட்டிவிடுவார்கள். முகூர்த்தக்காலிற்கு மஞ்சள் குங்குமப்பொட்டிட்டு குடும்பப் பெரியவர்கள் தலைமையில் குழியின் அருகே ஒன்பான்கூலம்(நவதானியம்), சந்தனம், மாழை(உலோக) நாணயம் ஆகியவற்றை இட்டுப் பாலூற்றி வழிபாட்டுத் திருவுருவங்களுக்குத் தூபதீபம் காட்டிய பின் பந்தல்காரருக்குச் சந்தனம், குங்குமம், நன்கொடை வழங்கிவிட்டு குடும்பப்பெரியவர்கள் ஒன்று சேர்ந்து முகூர்த்தக்காலினை தூக்கிக் குழியில் நடுவது வழக்கமாகவும் மரபாகவும் வைத்துள்ளார்கள்.
ஆனால் கதிரப்பன்பட்டிப் பகுதியில் யார்வீட்டில் திருமணம் நடைபெற்றாலும் அவர்கள் மந்தையில்தான் திருமணம் நடத்தவேண்டும். மேலும் முகூர்த்தக் கால் நடுதல் போன்ற பழக்கம் இல்லாமல் மந்தையில் பாலக்கம்பு நான்கு புறமும் நட்டு அதன் மேல் உசிலக்குலை, பாலக்குலை ஆகியவற்றைப் பரப்பித் திருணத்தை மூன்று நாள்கள் நடத்துவர். திருமணத்தின்போது மணமகனைக் குதிரையில் அழைத்து வந்து குடைபிடித்து அழைத்து வரும் வழக்கமும் உள்ளது.
தற்பொழுது கதிரப்பன்பட்டியில் மந்தையைச் சாலை விரிவாக்கத்திற்காக அரசு கையகப்படுத்திக்கொண்டது. இதற்காக ஊரின் மேல்பகுதியில் 35சிறுகாணி(சென்ட்)அளவில் உள்ள நிலத்தை மந்தையாகப் பயன்படுத்தித் திருமணம் நடத்திவந்தார்கள். தற்பொழுது அந்த மந்தையையும் தனியார்கள் கவர்ந்துள்ளதால் இப்போது மந்தையில்லாமல் திருமணம் நடத்த இயலாத சூழ்நிலை உள்ளது.
இதன் தொடர்பாக இப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் வரை முறையிட்டும் எந்த வகை நடவடிக்கையும் இல்லை. பல திருமணங்கள் தடைப்பட்டு இருப்பதாகவும், தங்கள் வழக்கப்படி திருமணம் நடத்த மந்தை ஒன்றை அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிருவாகம் கதிரப்பன்பட்டி முதலான ஊர்களில் வன்கவர்வுகள் செய்யப்பட்ட மந்தைகளை மீட்டுத் திருமணம் நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Leave a Reply