மனநிலை பாதிக்கப்படும் மாணவர்கள்
மனநிலை பாதிக்கப்படும் மாணவர்கள்
தேவதானப்பட்டிப் பகுதியில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளினால் மாணவர்கள் மனநிலை பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேவதானப்பட்டிப் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இயங்கும்; அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கவேண்டும் என்றும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களைக் கசக்கிப்பிழிகின்றனர். இவ்வாறு தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களைக் கசக்கிப்பிழிவதன் மூலம் மாநில அளவில் மதிப்பெண் எடுப்பதோடு தங்கள் பள்ளியில் அதிகமான மாணவர்கள் சேருவார்கள் என்று நம்புகிறார்கள்.
9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்குப் பத்தாம் வகுப்பு படிக்கும் பாடப்புத்தகத்தையே நடத்துகின்றனர். மறுபடியும் பத்தாம் வகுப்பு சென்ற பின்பு பத்தாம் வகுப்பு படிக்க வைக்கிறார்கள். இதே போல 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு பாடத்தை படிக்க வைக்கிறார்கள். மறுபடியும் 12 ஆம் வகுப்பு பாடத்தை 12 ஆம் வகுப்பு படிக்கும்போது நடத்துகிறார்கள்.
இவ்வாறு ஒரு மாணவன் இரண்டு வருடம் 10 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளைப் படிக்கிறான். இதற்காகக் கால்ஆண்டு, அரையாண்டுத் தேர்வுகள் முடிந்தபிறகு கூட விடுமுறை விடப்படுவதில்லை. மேலும் சனி, ஞாயிறுகளில் சிறப்பு வகுப்பு என நடத்தி மாணவர்களின் உரிமைகளைப் பறிப்பதோடு அளவிற்கு அதிகமான மனஅழுத்தம் கொடுக்கின்றனர்.
இவ்வாறாக அதிக மனஅழுத்தம் கொடுப்பதன் மூலம் சில மாணவர்கள் சலிப்பும வெறுப்புமடைந்து படிப்பைப் பாதியில் விட்டுவிடுகின்றனர். சில மாணவர்கள் மனநிலை பாதிப்படைவதுடன் பிற மாணவர்களையும், ஆசிரியர்களையும் கொலை செய்யும் அளவிற்குத் துணிந்துவிடுகிறார்கள்.
எனவே மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளை ஆய்வு மேற்கொண்டு விடுமுறைக் காலங்களிலும், அரசு அறிவித்த நாட்களில் இயங்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உரிய முறைப்படி வகுப்புகள் நடத்தப்பட ஆவனச் செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
எதிர்கால அறிஞர்களான நிகழ்கால மாணாக்கர்களைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்குமல்லவா?
Leave a Reply