மிதியூர்தி(ஆட்டோ) சங்கத்தினர் அடாவடித் தண்டல்
காவல்துறை அதிகாரிகள் பெயரைக்கூறி
மிதியூர்தி(ஆட்டோ) சங்கத்தினர் அடாவடித் தண்டல்
தேவதானப்பட்டியில் காவல்துறை அதிகாரிகள் பெயரைக்கூறி மிதியூர்தி(ஆட்டோ) சங்கத்தினர் அடாவடியாகப் பணம் பெறுகின்றனர்.
தேவதானப்பட்டியில் அரிசிக்கடை, வைகை அணைப் பிரிவு, பேருந்துநிலையம் முதலான பகுதிகளில் மிதியூர்தி(ஆட்டோ) நிறுத்தங்கள் உள்ளன. இப்பகுதியைச்சுற்றிச் சிற்றூர்கள் உள்ளமையாலும், புகழ்பெற்ற அருள்மிகு காமாட்சியம்மன் கோவில் உள்ளதாலும் ஏராளமான வெளியூர்ப் பயணிகள் நாள்தோறும் வருகை புரிகின்றனர். உட்கிடை ஊர்களுக்கும், காமாட்சியம்மன் கோவிலுக்கும் போதிய பேருந்து வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மிதியூர்தி, பங்கீட்டு மிதியூர்திகளில் பயணம் செய்கின்றனர். இதில் போதிய வருமானம் கிடைப்பதால் மிதியூர்திகள் பெருகி வருகின்றன. இந்நிலையில் புதிதாக மிதியூர்தி(ஆட்டோ) வாங்கினால் மிதியூர்தி(ஆட்டோ) சங்கத்தில் இணைந்து செயல்படவேண்டும் என்றும் அவ்வாறு உறுப்பினர் ஆனவர்கள் ஒவ்வொரு மிதியூர்திச் சங்கத்தினரிடம் உரூ.40,000 கொடுக்கவேண்டும் என்றும் எழுதப்படாத விதி உள்ளது. இந்த 40,000 உரூபாய் காவல்துறை அதிகாரிகளுக்கும், வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகளுக்கும் தரவேண்டும் என்றும் இவற்றைத்தவிர ஒவ்வொரு மாதமும் காவல்துறையினருக்கும், வட்டாரப்போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஆய்வாளர்களுக்கும் பணம் செலுத்தவேண்டும் என்றும் மிதியூர்தி(ஆட்டோ) சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர். இதனால் பெரும்பாலான மிதியூர்தி(ஆட்டோ) உரிமையாளர்கள் கொடுத்துவிடுகின்றனர்.
கொடுக்க வசதியில்லாதவர்கள் தேவதானப்பட்டியில் மிதியூர்திகளை இயக்காமல் பெரியகுளத்தில் மிதியூர்திகளை இயக்கி வருகின்றனர். இதன் தொடர்பாகக் கணவா என்பவர் கூறுகையில், “நான் புதியதாக மிதியூர்தி(ஆட்டோ) ஒன்றை வாங்கினேன். அந்த மிதியூர்தியை மிதியூர்தி நிறுத்திடத்தில் ஓட்ட விடவில்லை. காரணம் கேட்டபோது ஒவ்வொரு மிதியூர்திக்கும் 40,000 உரூபாய் கட்டவேண்டும் என்றும் மாதம்தோறும் காவல்துறையினருக்கும், வட்டாரப்போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் பணம் கட்ட கொடுக்கவேண்டும் என்றும் மிதியூர்திச் சங்கத்தினர் கூறுகின்றனர். அவ்வாறு தர இயலாதவர்கள் தேவதானப்பட்டியில் மிதியூர்திகளை ஓட்டக்கூடாது எனக்கூறி விட்டனர். இதனால் என்னுடைய உறவினர் மூலம் பெரியகுளத்தில் மிதியூர்தியை இயக்கி வருகின்றேன்” என்றார்.
இதன் தொடர்பாகக் காவல்துறை உயர்அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது, மிதியூர்திச் சங்கத்தில் ஒவ்வொருவரும் இணைந்து செயல்படவேண்டும் என்றும் எந்தெந்த மிதியூர்தி எந்த நிலையத்தில் இயங்குகிறது என்பதைப்பற்றி எங்களுக்குத் தகவல் தரவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
காவல்துறையினர் பெயரைக்கூறிப் பணம் பெறும் மிதியூர்திச் சங்கங்கள், அதன் பொறுப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். எனவே, இதற்கிணங்கக் காவல்துறையினர் பெயரைக்கூறி அடாவடித் தண்டல்ல் செய்யும் மிதியூர்திச் சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளனர்.
Leave a Reply