fire

முருகமலை வனப்பகுதியில் பயங்கரத் தீ

விலையுயர்ந்த மரங்கள் சேதம்

  தேவதானப்பட்டி அருகே உள்ள முருகமலை வனப்பகுதியில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டதால் ஏராளமான மரங்கள் கருகின.

  முருகமலை வனப்பகுதியில் உணவகங்கள், அடுமனைகள்(பேக்கரிகள்), ஓய்வுமனைகள் ஆகியவற்றுக்கு அடுப்பு எரிப்பதற்கு மரங்களை வெட்டிக் கடத்தி வருகின்றனர். இவ்வாறு மரங்கள் வெட்டியபின்னர் வெட்டிய மரம் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதற்காக அப்பகுதியில் வளர்ந்து வரும் கோரைப்புற்களின் மீது தீயை வைத்து விடுகின்றனர். இவ்வாறு தீ வைப்பதாலும் தற்பொழுது கோடை வெயில் உக்கிரமாக இருப்பதாலும் இந்தத் தீ அப்பகுதி முழுவதும் பரவி விலையுயர்ந்த மரங்கள், மூலிகைகள் போன்றவை பற்றி எரிந்து விடுகின்றன.

  இவற்றைத்தவிர தீயின் வெப்பம் தாங்காமல் மான், செந்நாய், காட்டெருமை ஆகியவை ஊருக்குள் புகுந்துவிடுகின்றன. கடந்த சில ஆண்டுகளாகத் தேவதானப்பட்டி அருகே உள்ள மலைப்பகுதி ஊர்களில் தீயின் வெப்பம் தாங்காமல் காட்டெருமை, சிறுத்தை, மிளா என்ற மான், செந்நாய் போன்றவை கிணற்றுப்பகுதிகளில் விழுந்து இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  எனவே கோடைக் காலத்தில் கூடுதலான வனத்துறையினரை அமர்த்திக் காட்டுத்தீ ஏற்படாவண்ணம் பாதுகாக்கவேண்டும் எனவும் வனப்பகுதியில் தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

72vaikaianeesu