பயணச்சலுகை - முதல்வர்வழங்கல் : cm_freebuspass-

பேருந்து சலுகை : perunthu_bus_payana_villai_token

 

  முதலமைச்சர் செல்வி செயலலிதா அறிவித்துள்ள, சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றிப் பயணம் மேற்கொள்ளும் புதிய சலுகைத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. பேருந்துகளில் பயணம் செய்வதற்கான அடையாளச்சீட்டுகளை முதியோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

  அரசுப் பேருந்துகளில், 60 அகவைக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள வகை செய்யும் புதிய திட்டம் ஒன்றை, முதலமைச்சர் செல்வி செயலலிதா, கடந்த 18- ஆம் நாள் சட்டப்பேரவையில் அறிவித்தார். முதற்கட்டமாக, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், இன்றுமுதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், பின்னர் பிற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் முதலமைச்சர் செல்வி செயலலிதா ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார்.

  மேலும், இத்திட்டத்தைத் தொடங்கி வைப்பதன் அடையாளமாக, கடந்த 20-ஆம் நாள், 5 மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லாப் பேருந்து வில்லைகள், பேருந்துப் பயண அட்டைகள் ஆகியவற்றை முதலமைச்சர் செல்வி செயலலிதா வழங்கினார்.

  இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள விழைவோர், அதற்குரிய படிவத்தில் தங்களது ஒளிப்படத்தை இணைத்து, அடையாள அட்டை, வில்லைகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் முதலமைச்சர் செல்வி செயலலிதா தெரிவித்தார்.

 அடையாள அட்டை, சலுகைச்சீட்டுகள் பெற முதியோர்கள் இன்னல்படாமல் இருக்க, 4 மாதங்களுக்குத் தேவையானவை இப்போதே வழங்கப்படுகின்றன.

  தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை இப்பொழுதாவது நிறைவேற்றியதற்குப் பொதுமக்கள் பாராட்டுகின்றனர். அதே நேரம், தமிழ்நாடு முழுமையும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் குளிர் வசதிப் பேருந்துகளிலும் பயணம் செய்யும வகையில் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர். அவ்வப்பொழுது சலுகைப் பயணச் சீட்டுகள் பெறுவதைவிட, அடையாள அட்டையைக் காட்டினால், கட்டணமில்லாப் பயணம் மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.