93vanathurai-forest

வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் கவர்வு

  தேவதானப்பட்டிப் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களைக் கவர்ந்து கட்டடங்கள் கட்டி வருவதைத் தடுத்து நிறுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

  தேவதானப்பட்டி அருகே உள்ள மருகால்பட்டியில் சேமக்காடுகள் என்று அழைக்கப்படும் நிலங்கள் வனத்துறைக்குச் சொந்தமானவை. சேமக்காடுகள் பகுதியில் கால்நடைகள் மேய்ப்பதற்கும், அப்பகுதியில் உள்ள கனிமங்கள், மரங்கள் வெட்டுவதற்கும் வனத்துறை ஏற்கெனவே தடை விதித்துள்ளது.

  இப்பொழுது மருகால்பட்டிப் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களைத் தனியர்கள் கவர்ந்து கட்டடங்கள் எழுப்பி வருகின்றனர். இவ்வாறு கட்டடங்களை எழுப்பிச் சேமக்காடுகள் பகுதியில் உள்ள செம்மண், கற்கள், மரங்களை வெட்டிக் கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். அதன்பின்னர் அந்தப் பகுதியின் அருகில் நிலங்களை வாங்கி வீட்டு மனைகளாக விற்பனை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

  ஏற்கெனவே எருமலைநாயக்கன்பட்டி, தேவதானப்பட்டி அருகே உள்ள வெள்ளக்கரடு பகுதியில் சேமக்காட்டிற்குச் சொந்தமான நிலங்களைத் தனியர்கள் கவர்ந்து வீட்டுமனைகளாக விற்பனை செய்ய முயற்சி செய்தனர். மாவட்ட நிருவாகம் நடவடிக்கை எடுத்து அதனைத் தடுத்த நிறுத்தியது. இதேபோல், மருகால்பட்டிப் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான சேமக்காட்டுப் பகுதியில் கட்டடங்கள் கட்டுவதையும் தடுத்து நிறுத்தவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

93vaikaianeesu_name