68roadroberry

  தேவதானப்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி, எழுவனம்பட்டி பிரிவு ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் இருசக்கர ஊர்திகளில் வருபவர்கள் மற்றும் நடந்து வருபவர்களை உருட்டுக்கட்டை கொண்டு தாக்கி நகை மற்றும் பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

 வடுகப்பட்டியில் காவல்நிலையம் இல்லை. பெரியகுளத்தில் உள்ள தென்கரை காவல்நிலைய எல்லைக்குற்பட்டது. ஏதாவது குற்றங்கள் நிகழ்ந்தால் பெரியகுளம் போய்தான் புகார் கூறவேண்டும். புகார் கூறிக் காவலர்கள் வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பித்து விடுகின்றனர்.

 இதே போல தேவதானப்பட்டி அருகே உள்ள எழுவனம்பட்டி பகுதியில் உருட்டுக்கட்டை கொண்டு இருசக்கர ஊர்திகளில் வருபவர்களைத் தாக்கிப் பணத்தைப் பறிக்கின்றனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் குடும்பப் பெண்கள் என்பதால் புகார் கூற முன்வருவதில்லை.

  இவ்வாறு தாக்கி பணம் பறிக்கும் கொள்ளையர்கள்   அண்மையில் உள்ள தோப்பு, ஆறு முதலான பகுதிகளில் ஒடிவிடுகின்றனர். இப்பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஈரோட்டைச்சேர்ந்த எண்ணெய் விற்பனை செய்யும் சிறுமூடுந்தில் கொண்டு வந்த 24இலட்சம்பணத்தைக் கொள்ளையடித்தனர்.

 இதே போல எழுவனம்பட்டிப் பிரிவில் கடை வைத்திருந்த மூதாட்டியைத் தாக்கி நகை, பணம் முதலானவற்றைக் கொள்ளையடித்துள்ளனர். இதே இடத்தில் தனியார் பேருந்தை மடக்கி அதில் கத்தியைக் காட்டி மிரட்டிப் பயணிகளிடம் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர்.

  எனவே காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் விதமாக ஆங்காங்கே காவல்துறை ஆய்வாளர், சார்-ஆய்வாளர், மாவட்டக் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் எண்களை நன்றாகத் தெரியும் படி விளம்பரப் பதாகைகள் வைக்க வேண்டும்; இயல்பான உடையில் கண்காணித்துக் கொள்ளையர்களைப் பிடிக்கவேண்டும்.

  இன்னும் ஓரிரு நாள்களில் அருள்மிகு காமாட்சியம்மன்கோவில் திருவிழா நடைபெற உள்ளது. அதற்குள் முன் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

68vaigaianeesu