வவுனியாவில்

தை 10, 2048  திங்கள்கிழமை 23.01.2017 அன்று காலை 8.00 மணியிலிருந்து

சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டம்.

 தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், நான்கு  முதன்மைக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கைக் குடியரசுத்தலைவர், தலைமையர்(பிரதமர்), எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருக்கு, அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை ( தை 07, 2048 / வெள்ளிக்கிழமை 20.01.2017 ) அனுப்பி வைத்துள்ளனர்.

  வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக எதிர்வரும்  தை 10, 2048  திங்கள்கிழமை 23.01.2017 அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கஉள்ளதாக குறித்த சங்கத்தின் வவுனியா மாவட்டத்தலைவி திருமதி செயவனிதா காசி(ப்பிள்ளை) அறிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தின் முழுவிவரமும் வருமாறு:

21.01.2017

சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள எமது இறுதி முடிவைத் தங்களுக்கு அறியப்படுத்தல் தொடர்பாக:

  தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினராகிய நாங்கள், சிறீலங்கா அரச படைகள், அரச துணை ஆயுதகுழுக்களால் எமது உறவுகள் கடத்திச்செல்லப்பட்டமைக்கான கண்கண்ட சான்றுரைஞர்களாக உள்ளோம்.

  அரசினால் நியமிக்கப்பட்ட பலதரப்பட்ட ஆணைகுழுக்கள், உள்ளூர்-பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள்,  குடியரசுத்தலைவர், தலைமையர்(பிரதமர்), எதிர்க்கட்சித்தலைவர், தமிழ் மக்களின் அரசியல் அதிகாரம் பெற்றுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு,  அனைத்து நாட்டுக் குமுகம்(சமுகம்) என்று  அனைத்துத் தரப்புகளிடமும் முறையிட்டும், வருடங்கள் பல கடந்த நிலையிலும் எமது உறவினர்கள் விடுவிக்கப்படவில்லை.

  இந்தநிலையில்,  அமைதி வழியாக அனைத்துக் கவனவீர்ப்பு – அழுத்தப் போராட்டங்களை நடத்தியும், எமது உறவினர்கள் தொடர்பில் உரிய தீர்வு எமக்கு வழங்கப்படவில்லை. ஆகவே வேறுவழியின்றி பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் தை 10, 2048  திங்கள்கிழமை 23.01.2017 அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தினை முன்னெடுப்பதைத் தங்களுக்கு அறியத்தருகின்றோம்.

  1. எமது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா?
  2. உயிருடன் இருந்தால், அவர்கள் எந்தக் கமுக்க(இரகசிய)ச் சித்திரவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்?
  3. உயிருடன் இல்லாவிட்டால், அவர்களுக்கு என்ன நடந்தது? யாரால்? எப்படி? கொலைசெய்யப்பட்டு, எங்கே புதைக்கப்பட்டுள்ளார்கள்? என்பவற்றை நாட்டு மக்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும்.
  4. கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள எமது உறவுகள் உயிரோடு இருப்பின், அவர்கள் தத்தமது குடும்பத்தினரோடு இணைந்து வாழ்வதற்கு உடனடியாக வழி விடுவதோடு, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.

   குறித்த எமது கோரிக்கைகள் அனைத்தும் நிபந்தனைகள் ஏதுமின்றி தங்களால் நிறைவேற்றப்படும்வரை சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தை நடத்தவுள்ளோம். நாங்கள் உயிர் இழந்தால் அதற்குரிய முழுப்பொறுப்பையும் குடியரசுத்தலைவர், தலைமையர்(பிரதமர்), எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் தெரியப்படுத்துகின்றோம்.

இப்படிக்கு,

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் தலைமைக்குழு – உறுப்பினர்கள்