விளம்பர நிறுவனங்களால் அரசுக்கு வரி இழப்பு
தனியார் விளம்பர நிறுவனங்களால் அரசுக்கு வரி இழப்பு-மாவட்ட நிருவாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.
தேனிப் பகுதியில் தனியார் விளம்பர நிறுவனங்களால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, செயமங்கலம், முதலக்கம்பட்டி, குள்ளப்புரம், வைகைஅணை, மேல்மங்கலம் பகுதிகளில் தனியார் விளம்பர நிறுவனங்கள், அலைபேசி நிறுவனங்கள், திண்காரை(சிமிண்ட்டு) நிறுவனங்கள், தனியார் துணிக்கடைகள், தனியார் நகைக்கடைகள் ஆகியவை பேரூராட்சி, ஊராட்சித் தலைவர்களிடம் எந்த வித உரிமமும் பெறாமல், அரசிற்குச் செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்தாமல் விளம்பரங்கள் செய்கின்றனர்.
மேலும் கண்ணைக் கவரும் வகையில் விளம்பரங்கள் தங்கள் விருப்பம் போல் வைப்பதால் இடர்நேர்ச்சிகள்(விபத்துகள்) ஏற்படும் கண்டம்(அபாயம்) உள்ளது.
மேலும் சாலைகள் சந்திப்பு, சாலைத் திருப்பம் ஆகியவற்றை மறைக்கும் வகையில் விளம்பரப் பலகைகளையும், விளம்பரப் பதாகைகளையும் வைக்கின்றனர்.
உள்ளாட்சி அமைப்புகளிடம் விளம்பரக்கட்டணம் பெறவேண்டும் என்ற அரசு ஆணை உள்ளது. அரசு ஆணையின்படி ஒவ்வொரு விளம்பரத்திற்கும் இவ்வளவுத் தொகை என வரையறுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் வணிக நிறுவனங்கள் நடத்துபவர்கள் அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் இயங்குகின்றார்கள். இதனால் உள்ளாட்சித்தலைவர்கள் அதனை தட்டிக்கேட்கமுடிவதில்லை. அப்படித் தட்டிக்கேட்டாலும் அவர்கள் தங்களது பணபலம், ஆள்பலத்தால் உள்ளாட்சித்தலைவர்கள் மீது முறையீடு கொடுத்துவிடுகின்றனர். இதனால் பெரும்பாலான உள்ளாட்சித்தலைவர்கள் கண்டுகொள்வதில்லை.
அரசு ஆணை எண் 283 அரசு ஆணை எண் 218 இன்படியும் பிரிவு 172 , 172 (அ)வின்படியும் பலவிதக் கட்டுப்பாடுகளை ஊரக வளர்ச்சித்துறை வரையறுத்துள்ளது.
எனவே அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி தரும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும் திண்காரை நிறுவனங்கள், அலைபேசி நிறுவனங்கள், தனியார் துணிக்கடைகள் மீது நடவடிக்கை எடுத்து அதற்குரிய தண்டத்தொகையைத் திரட்டினால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருமானம் பெருகும்.
எனவே மாவட்ட ஆட்சியர் தேனி மாவட்டதில் அரசு இசைவின்றி மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Leave a Reply