Ramadoss02

  10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும்  சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மரு.இராமதாசு வலியுறுத்தி அறிக்கை வழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொலை வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டு 23 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசயா என்ற மனநலம் தாக்கப்பட்ட பெண்மணி சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். உதவியற்ற அந்த ஏழைப் பெண் மீது சென்னை உயர்நீதிமன்றமும், நீதிபதிகளும் காட்டிய பரிவும்,கருணையும் பாராட்டப்பட வேண்டியவை.

sirai prison01  விசயாவைப் போலவே ஏராளமானோர் உதவியற்ற நிலையில், தண்டனைக் காலம் முடிவடைந்த நிலையிலும் விடுதலை ஆக முடியாமல் சிறைகளில் வாடி கொண்டிருக்கின்றனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த தென்தமிழன் என்பவர் கடந்த 26 ஆண்டுகளாகத் திருச்சி மத்தியச் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார். குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுவிட்டது. ஆயுள் தண்டனைக் காலத்தைக் கழித்த பிறகும் அவர் விடுதலை செய்யப்படவில்லை. தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் மனநலம் தாக்கப்பட்ட அவர், சிறையில் தவறி விழுந்து எழும்பு முறிந்த நிலையில் திருச்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.. தன்னுணர்வற்ற நிலையில் உள்ள அவரை, மனிதாபிமானம் இல்லாமல் சங்கிலியால் கட்டிலில் கட்டி வைத்துக் காவல்துறையினர் கொடுமைப்படுத்துகின்றனர். அவரை விடுதலை செய்ய எந்தத் தடையும் இல்லை என்பதால், அவரை விடுவிப்பது குறித்து ஆய்ந்து பார்க்கும்படி கடந்த 2009 – ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், அப்போதைய அரசு தென்தமிழனை விடுதலை செய்ய மறுத்ததன் விளைவாகவே அவர் மனநலம் தாக்கப்பட்டிருக்கிறார்.இராசீவு கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி, இராபர்ட்டு பயாசு, செயக்குமார், இரவிச்சந்திரன்  ஆகியோரும் தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகும் விடுதலை செய்யப்படவில்லை. தண்டனைக் காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படாத வாணாள் தண்டனைவாசிகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் இருக்கும். குறிப்பாக இசுலாமியக் குமுகாயத்தைச் சேர்ந்த பலர் தங்களின் எதிர்காலத்தை இழந்து சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். முந்தைய தி.மு.க. ஆட்சியின் போது 2006, 2007ஆம் ஆண்டுகளில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த 662 வாணாள் தண்டனைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2008 ஆம் ஆண்டில் அண்ணாவின்  நூற்றாண்டு விழாவையொட்டி 7 ஆண்டு தண்டனை துய்த்த வாணாள் தண்டனைவாசிகள்,  5 ஆண்டு தண்டனை முடித்த 60அகவை கடந்த தண்டனைவாசிகள்என 744 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

sirai prison03nalini  ஆனால், அப்போது கூடப் பல்வேறு காரணங்களைக் கூறி, இவர்கள் விடுவிக்கப்படவில்லை. இவர்களில் நளினி முதலான பலரை விடுதலை செய்வது தொடர்பில் கருத்துரைக் குழுவை அமைத்து முடிவெடுக்கும்படி உயர்நீதிமன்றம் ஆணையிட்டும், சொத்தைக் காரணங்களைக் கூறி இவர்களை விடுதலை செய்யத் தமிழக அரசு மறுத்துவிட்டது. உடனடியாக விடுதலை செய்யப்படாவிட்டால், இவர்களில் பலரும் விசயாவைப் போன்றும், தென்தமிழனைப் போன்றும் மனநலம் தாக்கப்படும் இடர் உள்ளது.

  சிறைகள் கைதிகளைத் திருத்துவதற்கான சீர்திருத்தக் கூடங்களாக இருக்க வேண்டுமே தவிர, சித்திரவதைக் கூடங்களாக இருக்கக் கூடாது. மேலும் சிறையில் நன்னடத்தையுடன் இருப்பவர்களை விடுதலை செய்வதால்,மன்பதை அமைதிக்கு எந்த ஊறும் ஏற்பட்டுவிடாது. எனவே, அவர்களின் வாழ்வில் புதிய விடியலை ஏற்படுத்தும் வகையில், பத்தாண்டுகளுக்கு மேல் சிறையிலிருக்கும்     வாணாள் தண்டனைவாசிகளை வரும் புத்தாண்டையொட்டித் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

sirai prison05