53jounalist_conference05

 

இதழுலுலக வரலாற்றில் இடம் பெற்ற

முதல் மாநில மாநாடு

அனைத்து இதழியல் தோழர்களே..!

ஊடக நண்பர்களே..!!

தோளோடு தோளாக நின்று பணியாற்றிய மாநில – மாவட்ட நிருவாகிகளே…!!!

ஆலம் விழுதுகளைப் போல் சங்கத்தைத் தாங்கி நிற்கும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களே.!

அனைவருக்கும் தமிழ்நாடு இதழாளர்கள் ஒன்றியத்தின் சார்பாக நெஞ்சார வாழ்த்துகளையும், மனம் மகிழ்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வரலாற்றில் ஒரு புதுக் கல்லாக நாம் நமது 14- ஆவது மாநில மாநாட்டை இதழ் உலக ஏட்டில் பதிவு செய்துள்ளோம்.

மறைந்த தோழர் இரவீந்திரதாசு முதலான மறைந்த இதழாளர்களுக்கு இரண்டு (2) நிமிட அமைதி(மவுனம்)  கடைப்பிடிக்கப்பட்டது.

மறைந்த தலைவர் தோழர் இரவீந்திரதாசு அவர்களின் அருள்வாழ்த்துடன் நம்மால் பெரும் போராட்டங்களுக்கும், புகைச்சல்களுக்கும் மத்தியில் நடத்தப்பட்ட முதல் மாநில மாநாடு இதுவேயாகும்.

தென்கோடிப் பகுதியான குற்றாலத்தில் 08.11.2014 சனிக்கிழமையன்று, குற்றாலம் திருமுருகன் மண்டபத்தில் ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களாலும், அகில இந்தியத் தலைவர்களாலும் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.

மாநாட்டுத் தொடக்கத்தின் முதல் நிகழ்ச்சியாக நம் சங்க அ.இ.த. கொடி எசு.என். சின்கா முன்னிலையில் குடியரசுத்தலைவர் விருது பெற்ற இல்டன் பதின்- மேனிலைப்பள்ளி முதல்வர்   ஆர்.சே.வி. பெல் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது.

அகில இந்தியத் தலைவர்கள், பல்வேறு அரசியலாளர்கள், ஏராளமான சங்க உறுப்பினர்கள் மத்தியில் ஏற்றிவைக்கப்பட்ட அக்கொடி நம் சங்கப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகப் பட்டொளி வீசிப் பறந்தது.

மாநாட்டின் அடுத்தகட்ட தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டு குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.

பல்வேறு கதம்ப மாலையாக பல்வேறு துறை அறிஞர்களால் அரங்கமும், மேடையும் அலங்கரிக்க நெல்லை பரமசிவம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நமது மாநிலத் தலைவர் தோழர்.டி.எசு.ஆர்.சுபாசு அவர்கள் இம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.

அகில இந்திய இதழாளர் சங்கத் தலைவர் தோழர் எசு.என்.சின்கா கேரள மாநிலத் தலைவர் இராசன், செயலார் சம்சுதீன், கருநாடக மாநிலத் தலைவர் கௌடா, செயலாளர் பாசுகரரெட்டி, புதுவை மாநிலத் தலைவர் திரு. எம்.பி.மதிமகராசா, செயலாளர் பழனிச்சாமி, மது ஒழிப்பு அமைப்பின் தலைவர் சசிபெருமாள், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சியம்)முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.நூர் முகமது (தேசியச் செயற்குழு உறுப்பினர்) தமிழக அரசியல் கட்சித் தலைவர்களான திரு.பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன், முன்னாள் ஆட்சித் தலைவர் சிவகாமிஇ.ஆ.ப. ‘நீதியின் குரல்’ சி.ஆர்.பாசுகரன், அமெரிக்க நாராயணன், கலைஞர் தொலைக்காட்சி பொது மேலாளர் பெரைரா, மெகா தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆதவன், இதழாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளர் பி.மாரியம்மாள், ‘தென்காசி’ இ.அ.வங்கி முதன்மை மேலாளர் பாபு சுந்தரம், ‘தென்காசி’ செய்தியாளர் மன்றத் தலைவர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

மாநாட்டின் சிறப்பம்சமாக “பத்திரிகையாளார் குரல்” சிறப்பிதழ் அகில இந்தியத் தலைவர் தோழர் எசு.என்.சின்கா அவர்கள் வெளியிடக் கலைஞர் தொலைக்காட்சிப் பொது மேலாளர் திரு.பெரைரா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

மறைந்த இதழளார்களான தலைவர் தோழர்.டி.எசு. இரவீந்திரதாசு படத்தை தோழர். எசு.என்.சின்காவும், திறனாய்வுத் தென்றல் தி.க.சிவசங்கரன் அவர்கள் படத்தைப் பழ.நெடுமாறன் அவர்களும், ‘நெல்லை’ இராமகிருட்டிணன் அவர்கள் படத்தை மெகா தொலைக்காட்சி ஆதவன் அவர்களும், தென்காசி (உ)லோகநாதன் படத்தைக் கலைஞர் தொலைக்காட்சிப் பொது மேலாளர் திரு.பெரைரா அவர்களும் திறந்து வைத்தனர்.

மறைந்த இதழாளர் தோழர்.’நெல்லை’ உட்லேண்ட் இராமகிருட்டிணன் குடும்பத்திற்குரிய குடும்ப நிதி, தேசியத் தலைவர் எசு.என்.சின்கா அவர்கள் மூலம் வழங்கப்பட்டது.

விடுதலைப் போராட்டக் காலத்தில் செய்தியிதழ்களின் பங்கு சிறப்பானது. நாட்டில் மாற்றமும், மறுமலர்ச்சியும் நம் போன்ற இதழாளர்களால் மட்டும் கொண்டுவரமுடியும், உலக மொழிகளுக்கு அப்பால் இதழாளர்களால் மட்டுமே மக்களே ஒருங்கிணைத்து உயர்த்த முடியும். இதழாளர்கள்தான் அரசுக்கும், மக்களுக்கும் இடையில் பாலமாக அமைய முடியும், அரசின் குறைகளை எடுத்துரைக்கும் இதழாளர்கள்தான் மக்களின் தொண்டர்கள் என்பன போன்ற கருத்துகள் அரங்கில் பதிவு செய்யப்பட்டன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பேருந்து, மூடுந்து, தொடர்வண்டி, வானூர்தி மூலம் ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக கலந்து கொண்டு அரங்கையே தம் கைத்தட்டல்கள் மூலம் அதிரச் செய்தனர். அரங்கில் அமர இடமில்லாமல் அதைச்சுற்றியுள்ள தாழ்வாரப் பகுதியும் நிரம்பி வழிந்தது. காண வியப்பாக இருந்தது.

மாநில நிருவாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு   ஒன்றுபட்ட கை தட்டல்களுடன் ஏற்கப்பட்டன.

திருப்பதியில் கொடுத்த அறிந்தேற்புச் சான்றிதழை அனைத்து மாவட்ட உறுப்பினர்கள் அறியும் வகையில் அகில இந்தியத் தலைவர் தோழர் எசு.என்.சின்கா அவர்கள் காட்சிப்படுத்தி மகிழச் செய்தார்.

மாநாட்டிற்காக உழைத்த அனைத்து நெஞ்சங்களுக்கும், பல்வேறு வேலைகளுக்கிடையே நமக்கென நேரத்தை ஒதுக்கி மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்துத் தலைவர்களுக்கும், ‘தென்காசி’ சண்முகம் நன்றி தெரிவித்துக்கொண்டார். நாட்டுப்பாடலுடன் கூட்டம் இனிதே முடிந்தது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1)   தமிழ்நாட்டில் இதழாளர்களுக்கெனத் தனி நல வாரியம்

ஒன்று அமைக்கப்படவேண்டும்.

2)   மாக்கவி பாரதி பிறந்த நாளான திசம்பர் 11- ஐ இதழாளர் நாளாக அரசு அறிவிக்க வேண்டும்.

3)   இதழ்கள் மீதான தாக்குதல்களை விசாரிக்க நாடாளுமன்ற

சட்டமன்ற உறுப்பினர்கள், இ.ஆ.ப., இ.கா.ப. அதிகாரிகள்,

இதழாளர் நலச் சங்கங்களின் சார்பாளர்களைக் கொண்ட

“நிலைக்குழு” (STANDING COMMITTEE) ஒன்றை அரசு தரப்பில் அமைக்க

வேண்டும்.

4)   இதழாளர்களுக்கு சில மாவட்டங்களில் மட்டுமே,

வீட்டுமனைஉரிமை ஆவணங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் வட்ட அளவில் உள்ள இதழாளர்கள் முதலான

அனைவருக்கும் நல்கை விலையிலோ, இலவசமாகவோ வீட்டுமனைகள்

வழங்கப்படவேண்டும்.

5) அரசு அலுவலகங்கள், காவல்துறை அதிகாரிகள், அரசியலாளர்கள்

போன்றோர் அனைத்து இதழாளர்களையும் பாகுபாடின்றிக்

கண்ணியமாகவும், தோழமை உணர்வோடும் நடத்தவேண்டும்.

6) அரசு மருத்துவமனையில் நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கும் சிறந்த மருத்துவ உதவி இதழாளர்களுக்கும் கிடைக்கவேண்டும்.

7) தென்காசியைத் தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும்.

8)   மாவட்ட அளவிலான அனைத்து இதழாளர்களுக்கும் இலவசப் பேருந்து பயணச் சலுகைகளை வழங்கவேண்டும்.

9) தமிழகத்தில் உள்ள அனைத்து இதழாளர்களுக்கும் அரசு நல்கை விலையில் அல்லது விலையின்றி வீட்டுமனைகளை வழங்கிட வேண்டும் என்பன முதலான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தோழமையுடன்

(அல்லா பகேசு)

தலைமை நிலையச்செயலாளர்,

அலைப்பேசி எண்: 98407 04576

 

குறிப்பு:

மாநாட்டு நிதியாகத் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் உரூபாய் 10,000 காசோலையும், சேலம் மாவட்டம் 2,500 உரூபாயும் திருவண்ணாமலை மாவட்டம் 10,000 -உரூபாயும் வழங்கினார்கள்.