அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் திருவிழா
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் திருவிழா பிப்ரவரி முதல் நாளன்று மலைத் தோற்ற(மவுன்டைன் வியூ) உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 1100-க்கும் மிகுதியான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, பொங்கல் திருநாளை அட்லாண்டா மக்கள் வியக்கும் வண்ணம் வெகு சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழாவிற்கு, இவ்வளவு மக்கள் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. குத்துவிளக்கேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகளை, அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த மக்கள் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர். “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற மையக்கருத்தை ஒட்டி விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ்ச்சங்கத் தலைவர் எழிலன் இராமராசன் தலைமையிலான 2014-கேட்சு செயற்குழு புதிய உற்சாகத்துடன் பொங்கல் விழாவினை திறம்பட நடத்தினார்கள்.
“நீயா நானா” புகழ் கோபிநாத்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். “நிறைவான வாழ்க்கை வாழச் சிறந்தது இந்தியாதான்!! இல்லை….அமெரிக்காதான்!!” என்ற தலைப்பில் அனைவரும் ஆவலுடன் கண்டு மகிழ்ந்த வாதுரை மேடை நடத்தப்பட்டது, இவ்விழாவின் சிறப்பாகும். சங்கத்தின் சார்பில் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கண்கவர் நடனங்கள், நாடகங்கள், பாடல்கள் என வண்ண வண்ண உடைகள் அணிந்து, பல்வேறு தரமான நிகழ்ச்சிகளைப் பலமணிநேரங்கள் செலவழித்து உருவாக்கி, வழங்கியது அனைவரின் ஆர்வத்திற்கும் சான்றாக அமைந்தது. முதன்முறையாக தமிழர்களின் போர்க்கலையான குத்துவரிசை, வர்மக்கலை மேடையில் அரங்கேற்றப் பெற்றது, அனைவரையும் பெருமை கொள்ள வைத்தது. கேட்சு-2014 செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும், கேட்சு-2014இன் செயற்குழுவுடன் இணைந்து பம்பரமாய்ப் பணியாற்றி விழாவை, அறுசுவை உணவுடன் அருமையாக நடத்தினர். எண்ணற்ற தன்னார்வலர்கள் தாமாகவே முன்வந்து உதவியது விழாவின் வெற்றிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. தமிழர் அனைவரும் பெருந்திரளாகக் கூடி, அயல் மண்ணில் நம் தமிழர் பண்பாட்டினைப் பறைசாற்றும் விதமாக இப்பொங்கல் விழாவைக் கொண்டாடியது, நம் தமிழர்கள் அனைவருக்கும் பெருமை என்றால் அது மிகையில்லை.
Leave a Reply