anbazhagan_nuulveliyeedu.vaazhvum thondumattai

anbazhagan_nuulveliyeedu-azhai-04

நூல் வெளியீட்டு விழா

  திராவிடர் கழக (இயக்க) வெளியீட்டகம் சார்பில் பேராசிரியர் அ.ர.சனகன், முனைவர் ந.க.மங்கள முருகேசன் ஆகியோர் எழுதிய ‘இனமானப் பேராசிரியர் வாழ்வும் – தொண்டும்’ என்ற நூல் வெளியீட்டு விழா திராவிடர் கழகத்தலைமையகமான சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ஆடி 17, 2046 / ஆக.2.8.2015 மாலை 6 மணிக்கு வெகு சிறப்புடன் நடைபெற்றது.

 நூல் வெளியீட்டு விழாவில் திமுக தலைவர் கலைஞர் தலைமை தாங்கினார்.

  திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் விழா இணைப்புரையை வழங்கினார். நீதியரசர் பு.ரா.கோலகிருட்டிணன் முன்னிலை வகித்து உரையாற்றினார்.

 நூலாசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் மங்கள முருகேசன் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து இதயநோய் வல்லுநர் மருத்துவர் சொக்கலிங்கம், மேனாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி செகதீசன், மேனாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, இந்திய ஒன்றிய முசுலீம் கூட்டமைப்பின் பேராசிரியர் காதர் மொய்தீன் ஆகியோர் உரையாற்றினார்கள். இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் உரையைத் தொடர்ந்து திமுக பொருளாளர் மு.க.தாலின் பேசுகையில் பேராசிரியர் தன் வரலாற்றை எழுதிட வேண்டும் என்று கோரினார். அனைவருக்கும் நன்றி கூறும் வகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். இவ்வவிழாவுக்குத் தலைமைதாங்கிய திமுக தலைவர் கலைஞர் எழுச்சி உரையாக சிறப்புரை ஆற்றினார்.

 திமுக தலைவர் கலைஞர் இனமானப்பேராசிரியரின் ‘வாழ்வும் தொண்டும்’ நூலை வெளியிடத் திமுக பொருளாளர் மு.க.தாலின் பெற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து வரிசையில் நின்று ஏராளமானவர்கள் நூலைப் பெற்றுக்கொள்ளத் திரண்டார்கள்.

  இவ்விழாவில் நீதியரசர் ஏ.கே. இராசன், திமுக தலைமைக்கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், திமுக தலைமைக்கழக நிருவாகி உசேன், பேராசிரியர் மா.நன்னன், திராவிட இயக்க ஆய்வு எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், அமிர்தம், கம்பம் செல்வேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் செ.அன்பழகன், கோவி.செழியன், அ.அன்புச்செல்வன், முன்னாள் துணைவேந்தர் கல்யாணி, அ.வெற்றிச்செல்வன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் வசந்தி தான்லி, மேனாள் அமைச்சர்கள் வேழவேந்தன், இரகுமான்கான், மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செங்கைசிவம், பா. இரங்க நாதன், கடலூர் இள.புகழேந்தி, திருவள்ளூர் மேனாள் நகர்மன்றத் தலைவர் தி.இராசகுமார், ஆவடி சா.நாசர், திமுக ஆர்.டி.சீதாபதி, சாவல்பூண்டி சுந்தரேசன், வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா, பிரின்சு என்னாரெசு பெரியார், நெய்வேலி வெ.செயராமன், வெ.ஞானசேகரன், வீரமர்த்தினி, சைதைத் தென்றல், தங்க.தனலட்சுமி, சி.வெற்றிச்செல்வி, தங்கமணி குணசீலன், செல்வராசு, இரத்தினசபாபதி, ஏகப்பன், கயல் தினகரன், கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர்கள் வீ.குமரேசன், தகடூர் தமிழ்ச்செல்வி, ஊமை செயராமன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருட்டிணன், செயலாளர் சத்தியநாராயணசிங்கு, பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், விடுதலை நகர் செயராமன், பேராசிரியர் திருக்குறள் பாசுகரன், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், விடுதலை அச்சகப்பிரிவு மேலாளர் க.சரவணன், வி.பன்னீர் செல்வம், முத்தய்யன், சு.குமாரதேவன், இரா.வில்வநாதன், செம்பியம் இராமலிங்கம், கருங்குழி கண்ணன், பா.தென்னரசு, உடுமலைவடிவேல், பெரியார் மாணாக்கன், பல்லாவரம் கண்ணப்பன், க.மு.தாசு, நவ.ஏழுமலை, வே.மணி, விசயலட்சுமிதாசு, திருவண்ணாமலை கவுதமன், மதுரைபாண்டியன், திண்டிவனம் இரமேசு, பச்சையப்பன், விசயலட்சுமி, திருவொற்றியூர் கணேசன் முதலான திராவிட இயக்கப் பல்வேறு மாவட்டத்தின் பொறுப்பாளர்கள், பிறர் என ஏராளமானவர்கள் பெருந்திரளாக விழாவில் பங்கேற்றனர்.

  மேடையில் திமுக தலைவர் கலைஞரிடமும், பேராசிரியர் க.அன்பழகனிடமும் வரிசையில் நின்று ஏராளமானவர்கள் நூல்களைப் பெற்றனர்.

  நூல் வெளியீட்டு விழாவையொட்டி தனியே அமைக்கப்பட்ட நூல் விற்பனையகத்திலும உரூ.600 மதிப்புள்ள ‘ இனமானப் பேராசிரியரின் வாழ்வும்-தொண்டும்’ நூல்உரூ.500க்கு அளிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் நூலை வாங்கினார்கள்.

 வாழ்வும்-தொண்டும் என்ற தன்னைப் பற்றிய நூலை எழுதுவதற்கு இசைவு அளித்தது ஏன் என்பது குறித்தும், கலைஞர் அவர்களைத் தலைவராக ஏன் ஏற்றுக்கொண்டேன் என்பது குறித்தும் தி.மு.க. பொதுச்செய லாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் கருத்துரை யாற்றினார்.

 அவரது உரை வருமாறு:

 உங்களை எல்லாம் காணுகிறபோது, இந்தப் புத்தகத்தின் வெளியீட்டுக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்பதை எண்ணுகிறபோது, நான் உள்ளபடியே பெரிய மகிழ்ச்சியடைகிறேன்.

 தமிழில் புத்தகங்கள் வரலாமே தவிர, அதற்கு வரவேற்பு அவ்வளவாக இருக்காது. மக்கள் எவ்வளவு பேர், அதிலே ஆர்வம் உள்ளவர்களாக இருந்தாலும், எல்லோராலும் எல்லாப் புத்தகங்களையும் வாங்கிப் படிப்பது என்பது இயலாத காரியம். எனவே தாங்கள் விரும்புகிற புத்தகத்தை வாங்கிப் படிக்கிற நேரத்தைச் செலவிடுவதற்கு நம்முடைய நினைவு, பொருளாதார வசதி அதற்கு இடம் தந்தாலும்கூட, பல்வேறு புத்தகங்களை நம்மால் வாங்க முடியாது.

 ஆகவே அந்தப் புத்தகத்தினுடைய கருத்தை இங்கே எடுத்துச் சொல்கிறபோது, அதைக் கேட்டு மகிழ்வதற்கு, அதைக் கேட்டு ஆர்ப்பரிப்பதற்கு நீங்கள் இவ்வளவு ஆர்வமாக இருப்பது கண்டு நான் உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அறிஞர்களுக்கெல்லாம் அறிஞராக விளங்கிய அண்ணா!   கலைஞருக்கும் நண்பராக இருந்த என்னுடைய நண்பர் சடகோபன் அவர்களின் மருமகன் சனகன் அவர்கள் இந்த நூலை வெளியிட வேண்டுமென்று பலமுறை என்னிடத்தில் வாதாடினார்.

  நான் அதற்கு ஒத்துக்கொள்ளாவிட்டாலுங்கூட, நியாயமாக ஒரு உண்மையைச் சொன்னேன்! எவ்வளவு பேர், சொன்னதை எல்லாம் மக்கள் படித்து, அதிலிருந்து ஒரு முடிவு எடுத்துக்கொண்டு அந்த முடிவின் அடிப்படையில் பேசுவார்கள் என்று எண்ணிப்பார்த்தால், ஒரு சில கருத்தைத்தான் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். எனவே, அந்த முறையிலே சனகன் சொன்னதுபோல, அல்லது மங்களமுருகேசன் சொன்னது போல, இந்தப் புத்தகம் அவ்வளவு அருமையாக இருக்காது என்ற கருத்தை நான் தெரிவித்தேன்.

 உலகத்திலே எவ்வளவோ அறிஞர்கள், எவ்வளவோ பெரிய பெரிய சிந்தனையாளர்கள், உலகத்திலே அறிஞர்களுக்கு இடையிலே அறிஞராக விளங்கிய அறிஞர் அண்ணா அவர்கள், பெரியாருக்கிடையிலே பெரியாராக விளங்கிய பெரியார் அவர்கள், அவர்களுடைய கருத்துகளை எல்லாம் எண்ணிப் பார்த்தால், – மிக எளியவனான ஒருவன் – நான் பேசிய எதுவும் அவ்வளவு உயர்ந்த கருத்துள்ளதாக இருக்கமுடியாது.

 ஆகவே, என்னை வலியுறுத்தி நீங்கள் ஒன்றும் பயனடைய முடியாது என்று நான் சொன்னேன். அவர்கள் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். உங்களுடைய வரலாறு உங்களுக்குப் பயன்படாதே தவிர மற்றவர்களுக்குப் பயன்படும். உங்களுக்கு, நாங்கள் எண்ணிப்பார்க்கிறபோது, நீங்கள் உங்கள் நினைவிலிருந்து எழுதித் தந்ததெல்லாம், ஏதோ ஓர் அளவுக்கு உங்கள் நினைவுக்கு ஏற்றதாக இருக்கிறதே தவிர, அந்தக் கருத்துகளை மற்றவர்கள் படித்துப் பார்க்கிறபோது, உள்ளபடியே பெரிய பயனடைவார்கள் என்று கூறினார்கள்.

  அந்தப் பயன் அடைவதற்காக மங்கள முருகன், சனகன், சனகனின் துணைவியார் எல்லாம், கேட்டுக் கொண்டு, அந்த அடிப்படையில்தான், நான் எழுதினேன்.

 உள்ளபடியே இதிலே சேர்க்கக் கூடிய கருத்துகள் இன்னும் இருக்கின்றன. மகாநாடுகளில் பேசிய பேச்சுகளில் இன்னும் ஒருபகுதி சேர்க்கக் கூடியது இருக்கிறது. அந்த முறையில் அவற்றை எல்லாம் சேர்த்தால், இந்தப் புத்தகம் மிக விரிவாக அமைந்து விடும். புத்தகம் பெரிய அளவிலே வராவிட்டாலும்கூட, எந்த அளவுக்கு அது தேறுகிறதோ, தேறுகிற அளவுக்கு அந்தப் புத்தகத்தை வெளியிலே கொண்டு வந்தால் போதும் என்று நான் சொன்னேன்.

கலைஞருக்கும், எனக்கும் திருவாரூரில் ஏற்பட்ட நட்பு!

  இன்றைக்கும் எனக்கும், கலைஞருக்கும் உள்ள நட்பைப்பற்றி எவ்வளவு நீண்ட காலம் நட்பு! என்று ஆச்சரியப்படுகிறார்கள், நீண்ட கால நட்பு, நீண்ட காலமாக இருக்கிற உழைப்பு, ஆர்வம், இலட்சியம், கொள்கை என்ற அடிப்படையிலே அமைந்த நட்பு, என்று அதற்காகப் பாராட்டினாலும்கூட, நான் தெரிவிக்க விரும்புகிறேன்; 1942 திசம்பரில் தொடங்கிய நட்பு இந்த நட்பு! அன்றைக்குத்தான் அறிஞர் அண்ணாவோடு நான் திருவாரூர் சென்றபோது, கலைஞரை நான் பார்த்தேன், அதற்குப் பிறகு கலைஞர் அழைத்து ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளுக்கு நான் சென்றிருக்கிறேன்.

 கலைஞரைக்கூட, அதற்குப் பின்னர் இயக்க அடிப்படையிலே கருத்து மாறுபாடு வருகிறபோது, நான் அவரை இயல்பாகத் தலைவர் என்று நட்புக் கொண்டவன் இல்லை. அவரைத் தலைவர் என்று சொல்ல மாட்டேன் கலைஞர் என்றுதான் சொல்வேன். அப்படியிருந்த நான், 1975-க்குப் பின்னர் கலைஞரை தலைவர் என்று சொல்லி, அவருக்குப் பெருமை சேர்ப்பது நம்முடைய கடமை என்று நான் கருதினேன்.

 நெருக்கடி நிலையைத் துணிந்து சந்தித்த தலைவர் கலைஞர்!

   நெருக்கடி நிலை நாட்டிலே அறிவிக்கப்பட்டபோது, எப்படிப்பட்ட சிக்கல் எல்லாம் நாட்டிலே ஏற்பட்டது? எவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டன? அந்தத் துன்பங்களை எல்லாம் கலைஞர் எப்படித் தாங்கிக் கொண்டார்? என்பதை எண்ணிப்பார்த்தால் கலைஞர் அல்லாமல் இன்னொருவர் அன்றைக்குத் தலைவராக இருந்திருந்தால், அவர் துன்பங்களைத் தாங்கியிருக்க மாட்டார்.

 அப்படித் தாங்காதபோது, அந்தத் துன்பங்கள் மிகப்பெரிய தொல்லையைத் தரும், நம்முடைய சமூகத்தின் எதிர்கால முன்னேற்றமே பாதிக்கப்படும். அந்த அளவிற்கு ஒரு கேடு ஏற்படக்கூடிய ஒரு நிலை, அந்த நெருக்கடி நிலையால் ஏற்பட்டபோது, 1975-1976 அந்த ஆண்டுகளில் இந்தச்சிக்கல், இந்தக் கொடுமை, இந்த அநீதி, இந்த அக்கிரமம் – நாட்டிலே நடைபெற்றபோது, அதை எதிர்த்து நிற்கக்கூடிய ஒரு மாவீரனாக கலைஞர் அவர்கள் அன்றைக்கு விளங்கினார்.

  அவர் மாவீரனாக இருந்தார் என்ற காரணத்தால்தான், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கேகூட அகில இந்திய அளவிலே மரியாதை ஏற்பட்டது. இல்லையானால், திராவிட முன்னேற்றக் கழகம், பல கட்சிகளில் ஒன்றாகத்தான் ஆகியிருக்கும். கலைஞருக்கும், எனக்கும் திருவாரூரில் ஏற்பட்ட நட்பு! ஆகவே அந்த வகையிலே கழகத்திற்குப் பெருமை சேர்க்கக்கூடிய ஒருவராக, கழகத்தினுடைய எல்லா நிலையிலேயும் கழகத்தை மற்றவர்களோடு எதிர்த்து நின்று போராடி வெற்றிகாணக் கூடிய ஒருவராக கலைஞர் அவர்கள் விளங்கினார்கள்.

அதன் காரணமாக கலைஞரால் இந்த இயக்கம் மிகச்சிறந்த முறையிலே நடைபோட்டுச் கொண்டிருக்கிறது என்ற காரணத்தாலேதான், நான் கலைஞரைப் பின்பற்றுகிறவனாக, கலைஞருடைய தொண்டனாக, கலைஞருடைய தோழனாக, கலைஞருடைய நண்பனாக இருக்கிறேன் என்பதை மட்டும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு இனமானப் பேராசிரியர் அவர்கள் உரை யாற்றினார்.

anbazhagan_nuulveliyeedu03

செய்தி: விடுதலை