Rotary- nvitation-Dr_Page_1

விருதாளர் மரு.சி.வீரப்பனைப் பாராட்டிய பொறி.இ.திருவேலன் அறிமுக உரை!

VIZHAA-DR.VEERAPPAN-thiruvel annan03

  தலைமை விருந்தினர் மாண்பமை நீதிபதி இராசேசுவரன் அவர்களே! சுழற்கழக மாவட்டம் 3230-இன் மேனாள் ஆளுநரும், இந்நாள் உறுப்பினர் சேர்க்கைக் குழுவின் அறிவுரைஞருமான, சிறப்பு விருந்தினர், சுழலர்(ரோட்டேரியன்) ஏ.பி. கண்ணா அவர்களே! இவ்விழாவை நடத்தும் தலைவர் திரு கணேசன், செயலாளர் திரு வெங்கடேசன், திரு இராமநாதன், திரு இளங்கோ, பிற பொறுப்பாளர்களே!! எனது கெழுதகை நண்பரான, மருத்துவத்துறையில் சீர்மையாளர் (Vocational Excellence Award) என விருது பெறவிருக்கும் தகைமையாளர் மருத்துவமணி சிதம்பரம் வீரப்பன் அவர்களே! அவர்கள்தம் வாழ்விணையர் திருமதி மருத்துவர் மீனாட்சி வீரப்பன் அவர்களே! அவர்களின் வழித்தோன்றல்களே! சுற்றத்தாரே! நண்பர்களே! அவையில் குழுமியிருக்கும் சுழற்கழகத்தவரே! அனைவருக்கும் வணக்கம்.

 

  மருத்துவர் வீரப்பன் அவர்களை ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன்தான் நான் சந்திதேன். இங்கிலாந்தில் நான் பணியாற்றிய சமயம், தமிழ் பேசும் மருத்துவர் சங்கம் ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அங்குதான் வீரப்பன் அவர்களைக்கண்டேன். என்னை முன்பின் பார்த்தறியார். ஆயினும் “எனது வீடு நீங்கள் வாழும் பர்மிங்காமில்தான் உளது. நான் வெளியூரில்தான் பணியாற்றுகின்றேன். ஆனால், நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் எனது வீட்டிற்கு வரலாம். நான் இல்லை என்றாலும், எனது துணைவியார் தங்களை விருந்தோம்புவார், கட்டாயம்வரவேண்டும்” என்றார்!

இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற்பொருட்டு

எனும் வள்ளூவரின் கூற்றுக்கேற்ப வாழ்பவர் வீரப்பன் அவர்கள் என்று வியந்து மகிழ்ந்தேன்.

அன்றுமுதல் என்னையும், பின்னர் எனது குடும்பம் வந்தபின் அவர்களையும் வீரப்பன்அவர்களும் அவர்கள் துணவியாரும் விருந்தோம்பியும் இன்னும் பலவாறாகவும் காத்துவந்தார்கள் என்று நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.

  மருத்துவர் வீரப்பன் அவர்கள் தனது பள்ளிப்படிப்பை, தேவகோட்டை, தூத்துக்குடி, பாளையங்கோட்டை நகர்களிலும், மருத்துவப் பட்டப் படிப்பை மதுரை மருத்துவக்கல்லூரியிலும் முடித்து, 1974-இல் மருத்துவராகப் பதிவு செய்தார்கள்.

  இங்கிலாந்துக்கு 1977-இல் வந்தவர், முதல் 7 ஆண்டுகள்   முதியோர் நல மருத்துவத்தில் (elderly care medicine) பணி செய்த பின், உணர்வுஅகற்றும் (anesthesia) மருத்துவத்திலும், தீவிரக்கவனிப்பு (Intensive Care) மருத்துவமாகிய தீவிரப் பண்டுவத்திலும் சிறந்துவிளங்க முடிவு செய்தார். 1985-இல் தொடங்கியது இம்முயற்சி.

  தனது அயரா உழைப்பாலும், ஆர்வத்தினாலும், படிப்படியாக உரிய பட்டங்களையும், தகுதிகளையும் பெற்றார். தீவிரப் பண்டுவக் கழகத்தின் (Intensive Care Society)உறுப்பினராக 1989-இல் இணைந்தார்.

vizhaa-Dr.veerappan-citation

  1992-இல் மருத்துவமணி வீர்ப்பன் அவர்கள் தீவிரப் பண்டுவமையத்தைத் தானே தலைமையேற்று, வழிநடத்தும் வாய்ப்பைப் பெற்றார். ஆசுதன் அண்டர்லைன் (Ashton under Lyne) எனும் ஊரில் உள்ள தேம் அணிமை மருத்துவமனையில்(Tameside Hospital)இல் இவ்வாய்ப்பு கிட்டியது. இப்பணிக்கு மிகுந்த போட்டி இருந்தது. நேர்காணலில் வீரப்பன் அவர்கள் தமது நுண்மாண் நுழைபுலத்தால் வெற்றி பெற்றார். புகழ் பெற்ற மருத்துவர் வில்லியம் சூமேக்கரின் (William Shoemaker) கருத்துகளை வீரப்பன் எடுத்து உரைத்தமையும் வெற்றிக்கு ஒரு காரணம் எனப் பின்னர் இதுபற்றிக் குறிப்பிட்டார்கள்.

இங்கு பணியாற்றும்போது வீரப்பன் அவர்கள்,

நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும்

வாய் நாடி, வாய்ப்பச் செயல்

என்னும் திருக்குறளுக்கேற்ப, எவ்வாறு தன்னிடம் வரும் பிணியாளர்களை நலப்படுத்தலாம் என்று ஆழ்ந்து சிந்தித்து, பல்வேறு உத்திகளைக்கையாண்டு வெற்றி அடைந்து வந்தார்.

  1995-96-இல் மருத்துவர் மெர்வின் சிங்கர் எனும் புகழ் பெற்ற தீவிரப் பண்டுவ மருத்துவருடன் நட்பு பூண்டார். வீரப்பன் அவர்களின் பண்டுவ/ சிகிட்சை உத்திகளை மருத்துவர் சிங்கர் பெரிதும் பாராட்டி, அவற்றை எழுத்துவடிவத்தில் கொணருமாறு பன்முறை வீரப்பனை வற்புறுத்துவார்.

  வீரப்பன் அவர்கள்,“தன்னுடன் பணியாற்றும் பயிற்சியாளர்களை ஆற்றுப்படுத்துவதே தனது தலையாகிய கடமை” எனக் கொண்டு திறம்படச் செயலாற்றி வருகிறார்.அதனால் அனைவரும் அவரைப் பெரிதும் போற்றிவருகின்றனர்.

வீரப்பன் அவர்கள் தன்னுடைய பயிற்சியாளர்களுக்குக் கூறிய அறிவுரைகளில் சில இதோ:

•          மின்னணுக்கருவிகள் காண்பிக்கும் எண்களுக்கு மருத்துவம் தராமல், படுத்திருக்கும் நோயாளியைத் தலையிலிருந்து கால் வரை சோதித்து மருத்துவம் தருக.

•          நோயாளியை உங்கள் உறவாகக் கருதி, மருத்துவம் அளிக்கத் தொடங்குங்கள்.

•          சட்டம் சார்ந்த மருத்துவ ஆய்வுகளைச் செய்வதையும், அதி நவீனக் கருவிகளைப் பயன்படுத்தினால்தான் நல்லது என்று எண்ணுவதையும் விட்டொழியுங்கள்.

  தீவிரப் பண்டுவத்தின் நுட்பங்களை அத்துறையில் உள்ளோர் அனைவருக்கும் சேர்க்கவேண்டும் எனும் வேட்கையால், 2004-இல் முதன்முதலாக தான் பணியாற்றும் ஓல்தாம் (Oldham, near Manchester) நகரில் “தீவிரப் பண்டவத்தில் முன்னேற்றங்கள்” எனும் தலைப்பில் ஒருநாள் கூட்டத்தை நடத்தினார். இதில் தலைசிறந்த வல்லுநர்களைக் கலந்துகொள்ளச்செய்தார்; நல்ல வரவேற்பைப் பெற்றது.

 VIZHAA-DR.VEERAPPAN-oldhamhospital01

  இதனால் ஊக்கம் பெற்ற வீரப்பன் அவர்கள், அடுத்து, ”இரண்டாம் ஆண்டு தீவிரப்பண்டுவக் கருத்தரங்கு” நடத்தி, புகழ்பெற்ற வல்லுநர்கள் பலரையும் இதில் கலந்து கொள்ளச் செய்தார். இந்தக் கருத்தரங்கு தீவிரப் பண்டுவ மருத்துவ உலகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் வெற்றி கொடுத்த ஊக்கத்தால், ஒருநாளை இரண்டு நாட்களாக்கி, 2006 முதல் ஒவ்வோர் ஆண்டும் இந்தக் கருத்தரங்கை நடத்தத் தொடங்கினார். நான்காம் கருத்தரங்குக்கு உலகம் முழுவதுமிருந்து வந்தார்கள். பத்தாவது கருத்தரங்கிற்கு, உலகம் எங்கணுமிருந்து 425 மருத்துவர்களும், 50 வல்லுநர்களும் கலந்துகொண்டனர்.

  இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்வோர், தங்களின் பின்னூட்டக் கருத்துகளில், தாங்கள் கற்றதையும் பெற்றதையும் பற்றி மட்டுமல்லாமல், நடத்திய வீரப்பன் அவர்களையும் வானளாவப் புகழ்ந்து எழுதினர். ஒட்டுமொத்தமாகச் சுருக்கினால்,

 “தங்கள் கருத்தரங்கு வெற்று ஆடம்பரம், வாணவேடிக்கை, வீண்பெருமை இவை எதுவும் இல்லாமல், அறிவுக்கு விருந்தாக, கருத்துப் பரிமாற்றம் எளிதில் நடப்பதாக, மனநிறைவளிப்பதாக உள்ளது. இவ்வருவினைக்கு/சாதனைக்குத்தங்களை எப்படிப் போற்றிப் பாராட்டினாலும் போதாது”

என்பதே.

  இப்போதெல்லாம் ஒவ்வோர் ஆண்டும் அடுத்த கருத்தரங்குக்கான அறிவிப்பு வரும்போது, ஒருவரை ஒருவர் கேட்கும் கேள்வி “தீவிரப் பண்டுவக் கருத்தரங்கு செல்கின்றீர்களா?” என்பதல்ல; “வீரப்பன் கூட்டத்திற்கு போகின்றீர்களா?” என்பதே. அந்த அளவுக்கு, இந்த கருத்தரங்கு பிரிட்டனில் ஒர் தேசிய மரபு ஆகிவிட்ட்து.

  இதன் விளைவு, அவர் இணைந்துள்ள பிரிட்டனின் Intensive Care Society, சென்ற ஆண்டு 2013-இல் வீரப்பன் அவர்களுக்கு சிறப்பு வாய்ந்த உறுப்பினர் / Distinguished Member எனும் விருது வழங்கியது. 2006-ஆம் ஆண்டு வரை 11 உறுப்பினர்களுக்கு மட்டுமே இவ்வகை விருது வழங்கியபின், 7 ஆண்டுகளுக்குப்பின் வீரப்பன் அவர்கள் பெற்றுள்ளார்கள் என்பது இவரின் தகுதியைக் காட்டுகின்றது.

 VIZHAA-DR.VEERAPPAN-ics01

  இந்த ஆண்டு, ஐரோப்பிய தீவிரப் பண்டுவ மருத்துவக் கழகம் / European Society of Intensive Care Medicine வீரப்பன் அவர்களுக்கு மதிப்புமிகு உறுப்பினர் / Honorary Member எனும் விருதை அறிவித்திருக்கிறது. இவ்விருது செப்டெம்பர் மாதம் பார்சலோனா நகரில் வீரப்பன் அவர்களுக்கு வழங்கப்பெறும். இக்கழகம் 7000 உறுப்பினர்களைக் கொண்டது. இதுகாறும் பதின்மூவருக்கு மட்டுமே இவ்விருது வழங்கப்பட்டுள்தும், இவ்விருதை வாங்கும் முதல் ஆசியர், இந்தியர், தமிழர் இவர்தாம் என்பதும் இச்சிறப்பைக்கூட்டுவன.

with-Mrs-Dr.MeenaksiVeerappan-12

 இவரது பண்புநலனுக்கு எடுத்துக்காட்டாக இரு செய்திகளைக் குறிப்பிட்டால்தான் அறிமுக உரை முழுமையடையும் எனக் கருதுகிறேன். ஒன்று, இது வரை நடத்திய கருத்தரங்குகளில் செலவு போக, மிகுந்த பணம் ஏறத்தாழ இரண்டு கோடி ரூபாயைத் தான் பணிசெய்யும் ஓல்தாம் மருத்துவமனைக்கு தனது நன்கொடையாக அளித்துள்ளார். இரண்டு, கருத்தரங்கு முடிந்தபின், அனைத்துப் பயிற்றுவிப்போர்களுக்கும் (வல்லுநர்கள்)-ஏறத்தாழ ஐம்பதின்மர்களுக்குத் – தமது இல்லத்தில் அறுசுவை விருந்து அளிப்பார்கள் – திருமதி & திரு வீரப்பன் அவர்களின் கைச்சமையல். மிகச்சுவையான விருந்து என்று சொல்லவும் வேண்டுமோ!

   மிகச்சுருக்கமாக மருத்துவமணி சிதம்பரம் வீர்ப்பன் அவர்களைப் பற்றி அறிமுகமாகக் கூறினேன். ஏதும் பிழைகள் இருப்பின் பொருத்தருள்க.

எனக்கு இவ்வாய்ப்பை நல்கிய திரு உ.இளங்கோ அவர்களுக்கு நன்றி.

வணக்கம்.

vizhaa-Dr.veerappan-thiruvelan