ஐ.நாவே நாங்கள் நாதி அற்ற இனமா?

எங்களுக்கு நீதி சொல்ல எவரும் இல்லையா?

வவுனியாவில் கவனவீர்ப்புப் போராட்டம் 

விழலுக்கிறைத்த நீராயிற்றே!

 

தற்போது ஒரு ‘மறுசுழல் தீர்மானத்தின்’ வாயிலாக, சிறீலங்காவுக்கு மேலும் ஈராண்டுக்கால நீட்டிப்புத்தர முயற்சிகள் செய்யப்படுகின்றன. இந்த ‘மறுசுழல் தீர்மானத்தின்’ முதன்மைக்கூறாகிய, உசாவல்களில் அயல்நாட்டு நீதிபதிகளைச் சேர்த்துக்கொள்வது என்பதை ஏற்கெனவே சிறீலங்காவின் அதிபரும் -தலைமையரும்( பிரதமரும்) பகிரங்கமாக மறுத்துள்ளார்கள்.

அரசாங்கமே ‘மறுசுழல் தீர்மானத்தின்’ முதன்மைக்கூறினை நிராகரிக்கிறது என்றால், அதே அரசாங்கம் இந்த ‘மறுசுழல்  தீர்மானத்தைச் செயலாக்கும்’ என்று ஐநா மனித உரிமை மன்றம் எப்படி எதிர்பார்க்கலாம்? மேலும், சிறிலங்கா முந்தையத் தீர்மானத்தின்படி தன் கடப்பாடுகளை நிறைவேற்ற உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை. ஆதலால், இந்த ‘மறுசுழல் தீர்மானம்’ மட்டும் செயலாக்கப்படும் என்று ஐநா மனித உரிமை மன்றம் எப்படி எதிர்பார்க்கலாம்?

என்று நீதி கேட்டு வவுனியாவில் பங்குனி 09, 2048 / 22.03.2017  புதன்கிழமை காலை 11.00 மணிக்குக் கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினால், கடந்த 24.02.2017 வெள்ளிக்கிழமையிலிருந்து வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும், ‘தீர்வு கிடைக்கும் வரை (சுழற்சிமுறையிலான) உணவு தவிர்ப்பு’ போராட்டம் பங்குனி 09, 2048 / 22.03.2017 புதன்கிழமை 27 ஆவது நாளாகவும் தொடர்ந்தது.

இந்தநிலையில், ‘பாதிப்புற்ற தமிழ் மக்கள், ஐநா மனித உரிமை மன்றத்துக்கு வேண்டுகோள்’ எனும் தொனிப்பொருளில் குறித்த கவனவீர்ப்புப் போராட்டம் ‘காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் குடும்பங்களால் நடத்தப்பட்டது.

பாதிப்புற்ற தமிழ் மக்கள் ஐநா மனித உரிமை மன்றத்துக்கு வேண்டுகோள்!

  நாங்கள் பாதிப்புற்ற தமிழ் மக்கள். மகனோ மகளோ கணவரோ ஆன எங்கள் சொந்தங்கள் சிறிலங்காவின் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார்கள், காணாமல் போகச் செய்யப்பட்டார்கள், பாலியல் வன்தாக்கு அல்லது வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார்கள். நாங்கள் ஐநா மனித உரிமை மன்றத்துக்கு விடுக்கும் வேண்டுகோள் இது: 30/1 தீர்மானத்தின் படி சிறிலங்கா அரசாங்கம் தன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான கால அவகாசத்தைக் கொஞ்சங்கூட நீட்டித் தராதீர்கள். ஏற்கெனவே காலமும் இடமும் தரப்பட்டது, ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இந்தத் தீர்மானத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. கால  வாய்ப்பைச் சிறிதளவே நீட்டித்தாலும், அதன் விளைவாக, பொறுப்புரைத்தலே இல்லாமற்போகும், எங்களுக்கும் ஏனையத் தமிழ் மக்களுக்கும் ஆபத்தே விளையும் என்று நாங்கள் அழுத்தமாக நம்புகிறோம். 

கால நீட்டிப்புத் தராதீர்கள் என்று உங்களை வேண்டுவதற்கான காரணங்கள்:

1)    இந்தத் தீர்மானத்தைப் பிற நாடுகளுடன் சேர்ந்து கூட்டாக முன்மொழிந்தது சிறிலங்கா. ஒன்றரை ஆண்டுக் காலத்தில், அதாவது 2017 மார்ச்சு மாதத்துக்குள் தன் கடப்பாடுகளை நிறைவேற்றவும் அது  முழுமையாகப் பொறுப்பேற்றது.

2)    இந்த ஒன்றரை ஆண்டுக் காலத்தில் சிறிலங்கா அரசாங்கம் தன் கடப்பாடுகளை நிறைவேற்ற உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பது மட்டுமல்ல, சிறிலங்கக் குடியரசுத் தலைவரும் மற்றத் தலைவர்களும் தீர்மானத்தின் முதன்மைக் கூறுகளை — உசாவல்களில் பன்னாட்டு நீதிபதிகளை இடம்பெறச் செய்வது உள்ளிட்டவற்றை – பகிரங்கமாகத் திரும்பத் திரும்ப மறுத்துமுள்ளார்கள்.

3)   இந்த ஒன்றரை ஆண்டுக் காலத்தில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்தன என்பதைப் பல அறிக்கைகள் ஆவணப்படுத்தியுள்ளன. இவற்றுள் ஒன்று சித்திரவதை பற்றிய ஐநா சிறப்பு அறிக்கையாளர் இயுவான் மெண்டிசு அண்மையில் அளித்த அறிக்கையாகும்.

4)    பன்னாட்டு உண்மை- நீதித் திட்டம் (ITJP) அண்மையில் தந்த அறிக்கை சிறிலங்க இராணுவம் நடத்தும் ‘பாலியல் வல்லுறவு’ முகாம்கள் பற்றிய விவரங்களை வெளிப்படுத்தியது. இந்த முகாம்களில் தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக வைத்துள்ளனர். இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியப் பேரரசின் இராணுவம் பெரும்பாலும் கொரியர்களும் சீனர்களுமான பெண்களை “சுகபோகப் பெண்களாக” வைத்திருந்த காலத்துக்குப் பின், அரிதில் ஆவணப்படுத்தப்பட்ட பாதுகாப்புப் படைகளின் ‘வல்லுறவு முகாம்களில்’ இவையும் அடங்கும்.

5)    காணாமல் போகச் செய்யப்பட எங்கள் புதல்விகளில் சிலர் இந்த ‘வல்லுறவு முகாம்களில்’ வைக்கப்பட்டிருப்பார்களோ என்றஞ்சுகிறோம்.

6)    இப்போது ஒரு ‘மறுசுழல் தீர்மானத்தின்’ வாயிலாக சிறிலங்காவுக்கு மேலும் ஈராண்டுக் கால நீட்டிப்புத் தர முயற்சிகள் செய்யப்படுகின்றன.

7)    இந்த ‘மறுசுழல் தீர்மானத்தின்’ முதன்மைக் கூறாகிய, உசாவல்களில் அயல்நாட்டு நீதிபதிகளைச் சேர்த்துக் கொள்வது என்பதை ஏற்கெனவே சிறிலங்காவின் அதிபரும் தலைமையரும்(பிரதமரும்) பகிரங்கமாக மறுத்துள்ளார்கள்.

8)    அரசாங்கமே ‘மறுசுழல் தீர்மானத்தின்’ முதன்மைக் கூறினை மறுக்கிறது என்றால், அதே அரசாங்கம் இந்த “மறுசுழல்  தீர்மானத்தைச்” செயலாக்கும் என்று ஐநா மனித உரிமை மன்றம் எப்படி எதிர்பார்க்கலாம்?

9)    மேலும், சிறிலங்கா முந்தையத் தீர்மானத்தின்படி தன் கடப்பாடுகளை நிறைவேற்ற உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை ஆதலால், இந்த ‘மறுசுழல் தீர்மானம்’ மட்டும் செயலாக்கப்படும் என்று ஐநா மனித உரிமை மன்றம் எப்படி எதிர்பார்க்கலாம்?

10)  எங்கள் புதல்விகளையும் குடும்பத்தினரையும் கொன்றும், காணாமல் போகச் செய்தும், பாலியல் வன்செயலுக்கு ஆளாக்கியும் கொடுமைகள் செய்த பத்தாயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் இன்றளவும் எம்மிடையே நிறுத்தப்பட்டுள்ளனர்.

11) கால நீட்டிப்பு ஏதும் தரப்படுமானால், எமக்கும் தமிழ் மக்களுக்கும் ஆபத்து ஏற்படும் என்றும், அது எமக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராகக் கொடுமைகள் செய்ய சிறிலங்கப் பாதுகாப்புப் படைகளுக்குத் துணிச்சல் கொடுப்பதாகி விடும் என்றும் அஞ்சுகிறோம்.

எமது துயரத்தையும் தமிழ் மக்களின் துயரத்தையும் ஐநா மனித உரிமை மன்றம் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.

ஐநா மனித உரிமை மன்றம் கால நீட்டிப்பு ஏதும் தரக் கூடாது என்றும், சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பும் பரிந்துரையுடன் ஐநா பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தி வேண்டுகிறோம்.

 

செய்தி அறிக்கையிடல்:

-அ.ஈழம் சேகுவேரா

https://youtu.be/FuJhkbLhYQM

https://youtu.be/PE_eeyyGS3Y

(படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.)