காரைக்குடியில் உள்ள பள்ளி ஒன்றின் மாணாக்கர்கள் திருவள்ளுவர் உருவத்தைத் துண்டுத்தாள்கள் மூலம் உருவாக்கி அருவினை  ஆற்றியுள்ளனர். புகழ்மிகு இச்செயல் பற்றிய விவரம் வருமாறு :

காரைக்குடி தி லீடர்சு பள்ளிக்குழுமம் 2004 ஆம் ஆண்டு  பொறியாளர் இராசமாணிக்கம் அவர்களால் தொடங்கப்பட்டது.

27 குழந்தைகளோடு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் இன்று 1800 குழந்தைகள் பயில்கின்றனர். மத்தியக் கல்வித்திட்டம், பதின்மமுறை, மழலையர் நிலை  என மூன்று பள்ளிகள் உள்ளடங்கியது இப்பள்ளிக்குழுமம்.

IMG_4111

மாணாக்கர்களிடம் தமிழ் உணர்வை வளர்க்கவும் திருவள்ளுவரைப் போற்றும் உணர்வை ஏற்படுத்தவும், இலிம்கா (Limca) அருந்திறலுக்காக மாணாக்கர்கள் துண்டுத் தாள்களைக் கொண்டு திருவள்ளுவர் உருவத்தினை உருவாக்குவது எனப் பள்ளியில் முடிவு  எடுத்தனர்.  அதன் பிறகு மூன்றுநாட்கள் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டது. 25 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் எனப் பிரித்துக்கொண்டு பயிற்சி அளித்தனர். 1750 வரைபட அட்டைகளும் 6 வண்ணங்கள் கொண்ட 50,000 மெருகுத்தாள்கள்களும் 200சிறுகல்(கிராம்)கொண்ட   1450  பசைக்குப்பிகளும் பயன்படுத்தப்பட்டன.

காலை 9.30க்குத் தொடங்கப்பட்ட இந்நிகழ்வு மாலை 3.00மணிக்கு  முடிந்தது.
6 மணி நேரம் இலக்காகக்கொண்டு செயல்பட்ட மாணவர்கள் 5.மணி 30 நிமிடத்தில் முடித்தனர்
1148 மாணவர்கள் இணைந்து செயல்பட்டனர்.

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையைப்போலவே  இவ்வோவியம் உருவாக்கப்பட்டது.

ஆங்கிலப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களும் பள்ளிப் பொறுப்பாளர்களும் தமிழுக்கு எதிரானவர்கள் அல்லர் என்பதைக் கூறும் வண்ணம் இந்நிகழ்வு அமைந்திருந்தது.

மாணாக்கர்களிடையே தமிழ்ப் பற்றையும் ஒற்றுமை உணர்வையும் வளர்க்க இந்நிகழ்வு நடத்தப்பட்டதாக இப்பள்ளியின் இயக்குநர் முனைவர் ஞானகுரு  கூறினார்.

பள்ளி முழுமையாகத் தமிழ்க்கல்வி அளிக்கவும் பெயரைத் தமிழில் சூட்டவும் வேண்டுகின்றோம்.

துண்டுத்தாள் ஓவியத்தில் பங்கேற்ற அனைத்து மாணாக்கர்களையும் ஆசிரியப் பெருமக்களையும் பள்ளிப்  பொறுப்பாளர்களையும் ‘அகரமுதல’ இணைய இதழ் வாழ்த்துகிறது!