மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் 22-ஆவது பொதுக்குழு 04.02.2014 செவ்வாய்க்கிழமை காலை வானகரத்தில் நடைபெற்றது.

mdmkgbmeeting02

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன:-

தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்திலும், அனைத்து மத்திய அரசு நிறுவனங்களிலும் தமிழ்மொழியை அலுவல் மொழி ஆக்கிட வேண்டும்; மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் எல்லா நிலைக்கல்வியும்  தமி்ழ்மொழி வாயிலாகவே இருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன், இந்தியாவின் ஆட்சிமொழியாகத் தமிழ்மொழி அரியணை ஏறுவதற்கும் தொடர்ந்து பாடுபடுவது என இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது.

 

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரசுக் கட்சியை ஆட்சிப் பீடத்தில் இருந்து அகற்றும் குறிக்கோளோடு, பாரதிய சனதா கட்சியுடன் செய்து கொள்ளும் தொகுதி உடன்பாடு அடிப்படையில் தேர்தலில் போட்டியிடவும், தேசிய  மக்கள்நாயகக் கூட்டணியின் வெற்றியை இலக்காகக் கொண்டு மக்கள் ஆற்றலைத் திரட்டவும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

 

‘இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்; அந்த வாக்கெடுப்பில், ஈழத்தில் உள்ள தமிழர்களும், தமிழ்நாட்டின் சிறப்பு முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழர்களும் உலகின் பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களும் வாக்கு அளிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்; அதற்கு ஐ.நா. மன்றம் முயற்சி எடுக்க வேண்டும்’ என்ற இலட்சிய நோக்கத்தை நிறைவேற்ற, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுக்குழு உறுதி மேற்கொள்கிறது.

 

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்திட, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகிய இரு அமைப்புகளை மத்திய அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

 

வளம் கொழிக்கும் காவிரிப் பாசனப் பகுதிகளில் சுற்றுச்சூழலை நாசப்படுத்தி, நிலத்தடிநீரை முற்றாக வெளியேற்றி, கடல்நீரும் உள்ளே நுழைந்து,  ஏறத்தாழ 166 ஆயிரத்து 210  காணி விளைநிலங்களைப் பாழாக்கும் வகையில் சாணவளி(மீத்தேன்) எரிவளி எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு செயற்படுத்த முனைப்புக் காட்டி வருவதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

உடனடியாக இத்திட்டத்தை  விலக்க வேண்டும் எனவும், தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை  விரைவுபடுத்தி, காவிரி பாசனப்பகுதி  உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

வேளாண் நிலங்களில் குழாய் பதிக்க உழவர்களின் கடும் எதிர்ப்பைப் புறக்கணித்துவிட்டு, எரிவளி குழாய் பதிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முனையும் மத்திய அரசுக்கு இப்பொதுக்குழு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், இத்திட்டத்தைக் கைவிட்டு, தேசிய நெடுஞ்சாலை வழியாக எரிவளி கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

 

தமிழக அரசு கரும்பு ஒரு கல்லெடைக்கு வயல் விலையாக 3,500 உரூபாய் வரையறுக்க வேண்டும்; நெல் நூறுஅயிரைஎடை(குவிண்டால்) ஒன்றுக்கு 3,000 உரூபாய், மஞ்சள் நூறுஅயிரைஎடைக்கு 15,000 உரூபாய், மரவள்ளிக் கிழங்கு ஒரு நூறுஅயிரைஎடை 10,000 உரூபாயாக விலை  வரையறுக்க வேண்டும் என்று பொதுக்குழு வலியுறுத்துகிறது.

 

ஆட்கொல்லிப் புற்று நோயாகத் திகழும்  சாராயக் கடைகளை மூடி, உடனடியாக தமிழகத்தில் முழு மதுவிலக்குகை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, கழகப் பொதுக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

 

தென் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கூடங்குளம் அணுஉலையை நிலையாக மூட வேண்டும் என்று கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

 

இலங்கையின் அக்கிரமச் செயலுக்கும், அடாவடித்தனத்துக்கும் முடிவு கட்ட உறுதியான நடவடிக்கை எடுக்கக் கடமைப்பட்டுள்ள இந்திய அரசு, தமிழக மீனவர்கள்  சிக்கலில் தொடர்ந்து  அமைதியாக இருப்பதற்குக் கழகப்பொதுக்குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

 

தமிழக மீனவர்களின் உயிரையும் உடைமையையும் பாதுகாக்க, கச்சத் தீவைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக மக்கள் கோரி வரும் நிலையில், மத்திய காங்கிரசு கூட்டணி அரசு இலங்கைக்குச் சாதகமான முறையில் செயல்பட்டு வருவதை, கழகப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், நீதிமன்றங்களில்  அளித்துள்ள  எதிர் ஆவணங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

தமிழக அரசின் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நியமிக்கப்படவுள்ள மருத்துவர்கள்,  மருத்துவப் பணியாளர்கள் பணி இடங்களுக்கும் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும். மேலும், குமுகாய நீதிக்கு எதிரான அரசு ஆணை எண் 252 இல் திருத்தம் செய்யப்பட்டு, புதிய அரசு ஆணை வெளியிட வேண்டும் என்று கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

படம் : நன்றி : தமிழ் இந்து-வேதன்