சதுரங்கத்தில்அருவினை புரிந்த மகாராசன்

 கண்களைக் கட்டிக்  கொண்டு விளையாடிய 10 ஆம் வகுப்பு மாணாக்கர்

 29  நிமையத்தில் பதின்மரைத் தோற்கடித்தார்

 chess_maharasan01

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  இமயம்(எவரெசுட்டு) மாரியப்ப (நாடார்) மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் மகாராசன்.  இவர் கண்ணை கட்டிக்கொண்டு சதுரங்கம்விளையாடுவதில் உலக அருவினை ஆற்றியுள்ளார். இவரது இரு கண்களிலும் பஞ்சுகள் வைத்து, கறுப்புத் துணியால் கட்டிவிட்டனர். பின், எதிரில் விளையாடு பவர் நகர்த்தும் காய்களுக்கு ‘ஏ’ முதல் ‘எச்’ வரையிலான ஆங்கில எழுத்துக்கள் மூலம் 8 எண்களில்  குறிச்சொற்கள் தரப்பட்டன.

இதில் எந்தக் காயை, எந்தப் பக்கம் நகர்த்தியுள்ளனர் என்பது மட்டும் மகாராசனுக்குத் தெரிவித்தனர்.  அதைப் புரிந்துகொண்டு, எதிராளிகளுடன் சதுரங்கம் விளையாடிய மகாராசன், 29 நிமையத்தில் 10 பேரை தோற்கடித்துள்ளார். புதுச்சேரியில் தலைமையகம் உள்ள,  உலகஅருவினைகளைப் பதிவு செய்து வரும், அருவினை ஆவணப் பதிவு உதவி (Assist Books of Record’) என்ற அமைப்பு ஏற்பாடு செய்த போட்டியில் தான் மகாராசன், புதிய உலக அருவினை ஆற்றியுள்ளார்.

அவர் கூறுகையில், ”சதுரங்க விளையாட்டில் எனக்கு இருந்த ஆர்வத்தால், உலக சாதனை படைக்க முடிந்தது.இவ்விளையாட்டில் அனைத்துக் காய்களுக்கும் ஆங்கிலத்தில் உள்ள முதல் 8 எழுத்துக்களுக்கும், 8  எண்கள் அதாவது ஏ1, ஏ2 , என்பன போன்று வழங்கப்பட்டிருக்கும். இவை  எந்தக் கட்டத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது, என்பதைத் தெரிவிப்பார்கள். அதனடிப்படையில் எனது காய்களை நகர்த்தி வெற்றி பெறுவேன்.’ என்றார்.

அவரது தந்தை குமார், ” நான் தனியார் தீப்பெட்டி நிறுவனத்தில் பொதிவு(‘பேக்கிங்’) தொழிலாளி. என் மகன்  சதுரங்க விளையாட்டில் மாவட்ட அளவில், பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளான்.  ஏதேனும் மாறுபாடாக செய்ய வைத்து, உலக  அருவினை படைக்கச் செய்ய வேண்டும், என்று எண்ணி, பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முருகன் இராசபாண்டியிடம் தெரிவித்தேன். அவர்  ஓக(யோகா)ஆசிரியர்  சுரேசுகுமாரிடம் பயிற்சிக்கு அனுப்பினார். அவரிடம் பெற்ற பயிற்சியால், அருவினை படைத்துள்ளார்” என்றார்.

ஓகசிரியர் சுரேசுகுமார், ”ஓக அடிப்படையில், மனத்தை ஒருங்கிணைத்து முழுக் கவனமும் சிதையாமல் இருக்கும்படிச் செய்து, கண்ணைக் கட்டிக் கொண்டு,  சதுரங்கம் விளையாடப் பயிற்சி அளித்தேன். அதனால், மகாராசன் சிறப்பாக விளையாடி அருவினை ஆற்றியுள்ளார்” என்றார்.

Modified by CombineZP