தமிழ்ச்சோலை மெய்வல்லுநர் போட்டி 2014
பிரான்சு – வில்நியூவு தூயசியார்சு தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலை
மாணவர்களிடையேயான இல்ல மெய்வல்லுநர் போட்டி 2014
ஆனி 8, 2045 / 22.06.2014 ஞாயிற்றுக்கிழமை வில்நியூவு தூயசியார்சு நகரத் திடலில் தமிழ்ச்சங்க உறுப்பினர், பொதுச்சுடரினை, காலை 10.00 மணிக்கு ஏற்றி வைத்தார்; சங்கத் தலைவர் பிரெஞ்சு தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்; தமிழீழத் தேசியக்கொடியினை மக்கள் பேரவைச் செயலாளரும் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினரும் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டது; தமிழ்ச்சோலை விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்; எல்லாளன் சங்கிலியன் இல்லங்களின் வீரர்கள் அணிவகுப்பு செய்தனர் சங்கத் தலைவர் பாடசாலை நிருவாகி, அன்றைய போட்டியின் விருந்தினர்கள் ஆகியோர் அணிவகுப்பு வணக்கத்தை ஏற்றுக் கொண்டனர்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் அவர்கள் தனது தொடக்க உரையை வழங்கினார்; போட்டிகளைத் திறம்படச் செய்ய வேண்டும் என்றும் கல்வியிலும் கலையிலும் எமது குழந்தைகள் சிறந்து விளங்குவது போன்று விளையாட்டிலும் தலைசிறந்து விளங்க வேண்டும் என்றும் வாழ்த்தினார். ஓட்டப்போட்டிகள், குழந்தைகள் பெரியவர்களுக்கான போட்டிகள், பார்வையாளர்களுக்கான போட்டிகள், உதைபந்தாட்டம், மாறுவேடப்போட்டி எனப் பல போட்டிகள் நடாத்தப்பட்டன. எல்லாளன் (மஞ்சள்) சங்கிலியன் ( சிகப்பு ) நிறங்களைக் கொண்ட சின்னஞ்சிறுவர் சிறுமிகள் இசைவும் அசைவும் செய்து பலத்த கரவொலிகளைப் பெற்றிருந்தனர்.
பங்கு பற்றிய அனைத்து போட்டியாளர்களுக்கும் குழந்தைகள் பெரியவர்களுக்கும் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் போட்டி நடுவர்கள் ஆசிரியர்களால் பதக்கங்களும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். 12ஆவது தடவையாக நடாத்தப்பட்ட இவ் இல்ல விளையாட்டுப்போட்டி ஒவ்வோர் ஆண்டும் தனது முயற்சியை மேன்மேலும் முன்னேற்ற கரத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. அதேவேளை இவ் வீர வீராங்கனைகள் தனியே தங்களுக்குள்ளேயே திறமைகளை முடக்கிக்கொள்ளக்கூடாது; புலம் பெயர் தேசத்தில் வாழும் எமது சிறார்களின் விளையாட்டுத்திறனை முன்னோக்கிக் கொண்டு போகும் வகையில் தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்தாலும் தமிழர் விளையாட்டுத்துறையாலும் முன்னெடுக்கும் அனைத்து உடல்திறன் போட்டிகளிலும் பங்கு கொள்ள வேண்டும்; இதற்கான பொறுப்பு தமிழ்ச்சங்கத்திற்கும் தமிழ்ச்சோலைக்கும் இருக்க வேண்டிய பெரும் கடப்படாகும். இதனைக் கருத்திற் கொண்டு இனிவரும் காலங்களில் அதனை அவர்கள் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் பெற்றோர்கள், பார்வையார்கள் மத்தியில் காணப்பட்டது. போட்டிகள் யாவும் கொடியிறக்கலுடன் இரவு 9.30 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.
தரவு : எங்கள் ஈழம் இது தமிழீழம்
Leave a Reply