நல்ல தமிழ் பரப்பும் நற்றமிழறிஞர் நன்னன் நூல் வெளியீட்டு விழா
‘‘நல்ல உரைநடை எழுத வேண்டுமா?’’ நூல் வெளியீட்டு விழா
முனைவர் மா.நன்னன் எழுதிய ‘‘நல்ல உரைநடை எழுத வேண்டுமா?’’ நான்காம் வியல்பதிப்பு நூல் வெளியீட்டு விழா சென்னை, இராசரத்தினம் கலையரங்கில் மார்கழி 10, 2046 / திசம்பர் 26, 2015 அன்று நடைபெற்றது.
முதல் நூலை நூலாசிரியர் நன்னன் வெளியிட, தி.மு.க. பொருளாளர் மு.க.தாலின் பெற்றுக்கொண்டார்.
மு.க.தாலின், தன்னுடைய வெளியீட்டுரையில், “தமிழை – தமிழாக எழுத வேண்டும் என்று 13 நூல்களை நன்னன் எழுதியிருக்கிறார். ‘தமிழ்படும்பாடு’ என்று 9 நூல்களை எழுதியிருக்கிறார். இதற்குத் தமிழனாய் நாம் பெருமைகொள்ள வேண்டும். நம்முடைய தலைவர் கருணாநிதியிடத்தில் மிகுந்த அன்பு கொண்டவர்; பாரதிதாசன் மீது தீவிர பற்றுக்கொண்டவர்; தொடக்கக் கல்வி, உயர்நிலைக்கல்வி என்று தனது பணியைத் தொடங்கிப் பேராசிரியராக உயர்ந்தவர்; அவர் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்.
திராவிட இயக்க உணர்வை ஊட்டித் தமிழுக்கு தொண்டு செய்து வருபவர்; தமிழ் மொழியை வளர்ப்பது, தமிழில் உள்ள பிழையைத் திருத்துவதை தன்னுடைய கடமையாகக் கொண்டு தொடர்ந்து தமிழ்ப் பணியாற்றி வருகிறார். அவர் தொகுத்துள்ள இந்த நூலில் அணிந்துரை எழுதியுள்ள தலைவர் கருணாநிதி, தவறான சொல் வழக்கை விலக்கி, சரியான சொற்களைப் பயன்படுத்தவும், தமிழைப் பிழையின்றி எழுதவும் இந்த நூல் உதவும் என்று பாராட்டியிருக்கிறார் ” எனக் குறிப்பிட்டார்.
முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம், “மாநிலக் கல்லூரியில் எனக்குப் பேராசிரியராக நன்னன் இருந்தார். அதை இந்த நேரத்தில் நினைவு கொள்ள விரும்புகிறேன். ‘எண்ணும், எழுத்தும்’ என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் மாணவர்களுக்குத் தமிழை கற்றுக்கொடுத்தவர். நல்ல உரைநடையில் தமிழை எழுத வேண்டும், தமிழைப் பேச வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார். இன்றைக்குத் தமிழை எழுதும் முறையும், பேச்சு முறையும் மாறுபட்டு விட்டது. பேச்சு தமிழுக்கும், எழுத்து தமிழுக்கும் இடைவெளி வந்து விட்டது. ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள பொருளை மிக விளக்கமாக அவர் இந்த நூலில் பதிவு செய்துள்ளார். பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தினால் தமிழ் கடனாளியாகி விடும் என்று குறிப்பிடுகிறார். வழக்கில் இருந்து மறைந்து போன சொற்களைத் தேடிப் பிடித்து புதிய சொற்களை உருவாக்க வேண்டும். ” என உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற நீதிபதி பரஞ்சோதி, புதுச்சேரி பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவர் பாண்டுரங்கன், சட்டக்கதிர் இதழின் ஆசிரியர் சம்பத்து, திருவாட்டி பிரேமா அரியரன், தென்மொழி இதழின் ஆசிரியர் மா.பூங்குன்றன், திட்டக்குடி திருவள்ளுவர் பல்கலைக்கழகக் கல்லூரியின் முதல்வர் அழகேசன், பேராசிரியர் விசயலட்சுமி இராமசாமி ஆகியோர் பேசினர்.
நிறைவாக நூலாசிரியர் முனைவர் மா.நன்னன் ஏற்புரை வழங்கினார். அப்போது அவர் “இன்றைக்குத் தமிழில் உள்ள குறைகளை எடுத்து சொல்லித் திருத்துவதற்கு ஆள் இல்லை. காரணம் கேட்டால், வழக்கத்தில் வந்து விட்டது, மக்கள் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள் என்று கூறுகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் என்பது எளிமையாக இருக்க வேண்டும். தேவையற்ற சொற்களைப் பயன்படுத்தித் தமிழை சீர்குலைக்கக் கூடாது. என்னுடைய நூல்களை ஒரு பல்கலைக்கழகத்தில் கூட வாங்கிப் பயன்படுத்தவில்லை என்பது எனக்கு வேதனையான ஒன்று. என்னுடைய பழைய மாணவர்களைக் கொண்டு ஓர் அமைப்பை தொடங்க இருக்கிறேன்.” எனக் கூறினார்.
Leave a Reply