தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நாளை முன்னிட்டுத் தமிழர்களம், திருநெல்வேலி நகரில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தியது.  தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் அரிமாவளவன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

 பொதுவளஆய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதைக் கண்டித்தும், முள்ளிவாய்க்கால் முற்றத்தை தமிழக அரசு இடித்ததைக் கண்டித்தும், கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரியும், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யக் கோரியும், தமிழகப் பள்ளிகளில் அரசே முன்னின்று நடத்தும் தமிழ் அழிப்பு-ஆங்கிலத் திணிப்பை எதிர்த்தும், தமிழகத்தின் பல்வேறு உரிமைகள் தொடர்பாகவும் பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 பாளையங்கோட்டையில் மாணவர் போராட்டத்தில் உயிர் நீத்த (உ)லூர்து நாதனுக்கு அமைக்கப்பட்ட சிலை அருகிலிருந்து தொடங்கிய ஊர்வலம் நெல்லை நகரின் தெருக்கள் வழியாகச் சென்று பாளை சவகர் திடலை அடைந்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து குவிந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நடத்திய இப்பேரணி மிகுந்த கட்டுப்பாட்டுடனும், எழுச்சியுடனும் அமைந்தது மட்டுமல்லாது நகரின் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாவண்ணம் நடந்தது நகர மக்களைக் கவர்ந்தது.

பெரும் எழுச்சியுடனும், மிகுந்த உணர்வுப் பெருக்குடனும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் நடத்திய இந்தப் பேரணியில் விண்ணதிர முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  நகரின் வீதிகளிலும் நூற்றுக்கணக்கான மக்கள் பேரணி நிகழ்வுகளைக் கூடி நின்று கவனித்தனர்.

 ஈழ மக்களின் விடுதலை தொடர்பாகவும், இராசபக்சேவை உசாவித் தூக்கிலிடவேண்டும் என்பதுபோன்றும் முழக்கங்கள் எழுப்பிய போதும் தெருவோரங்களில் நின்றவர்களும் சேர்ந்து முழக்கமிட்டது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது.

பேரணி பொதுக்கூட்டத் திடலை அடைந்தபோது தேனிசைச் செல்லப்பாவின் உணர்ச்சி மிகு பாடல்கள் பாடப்பட்டுக் கொண்டிருந்தன.  பாடல்கள் முடியும்போதெல்லாம் ஒட்டுமொத்த மக்கள் திரளும் தமிழ்நாடு தமிழருக்கேஎன்று எழுப்பிய முழக்கம் மாநாட்டுத் திடலே அதிரும் வண்ணம் இருந்தது.

 மொத்தத்தில் தமிழர்களத்தின் அடிப்படைக் கொள்கைகளுள் ஒன்றான தமிழ்நாட்டைத் தமிழரே ஆண்டால்தான் உலகத் தமிழரின் சிக்கல்கள் தீரும் என்ற கொள்கை தென் தமிழகத்தில் அழுத்தமாகவே காலூன்றி இருக்கிறது என்பதற்கான பதிவாகவே தமிழர்களத்தின் பேரணி அமைந்தது.