பன்னாட்டு வணிகக் கண்காட்சியில் ‘தமிழ்நாடு நாள்’ விழா
தில்லி பிரகதித் திடலில் நடைபெற்றுவரும் இந்திய-பன்னாட்டு வணிகக் கண்காட்சியில் ‘தமிழ்நாடு நாள்’ விழாவை தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புச் சார்பாளர் எசு.டி.கே. சக்கையன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி-செய்தித் துறை செயலாளர் முனைவர் மு.இராசாராம் தலைமையில் விழா நடைபெற்றது. தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் சசுபீர் சிங்கு பசாசு, துணை இயக்குநர் கு.தாணப்பா, செய்தி விளம்பரத் துறை உதவி இயக்குநர் முத்தையா முதலானோர் பங்கேற்றனர்.
விழா நடைபெற்ற திறந்தவெளி அரங்கில் பரதநாட்டியம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை முதலான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தில்லி-அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான மக்கள் அவற்றைக் கண்டு களித்தனர்.
இந்தியப் பன்னாட்டு வணிகக் கண்காட்சியில் ‘உள்ளடக்கிய வளர்ச்சி’ என்னும் தலைப்பில், தமிழ்நாடுஅரசின் அரங்கு அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் முதல்வர் செயலலிதா தலைமையில் நடைபெறும் திட்டங்கள் குறித்து தில்லிவாழ் தமிழர்களும், பிற மாநில மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களான விலையில்லா அரிசி, கறவைப் பசு, ஆடு, மின்னம்மி, மின்னுரல், மின்விசிறி வழங்கும் திட்டங்கள், மாணவர்களுக்கு மடி கணினி வழங்கும் திட்டம், அம்மா உணவகம், பசுமை வீடுகள் முதலானவற்றின் தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
செய்தி மக்கள் தொடர்புத் துறை, சுற்றுலா, தொழில்-மற்றும் வணிகத் துறை, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம், வேளாண் துறை தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல்-கழிவு நீர் அகற்று வாரியம் முதலான 13 அரசுத் துறைகளின் சிறப்புகள், செயல் திட்டங்கள் நேரடிக் காட்சிகளாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
நவம்பர் 14-ஆம் நாள் தொடங்கிய இந்த 33-ஆவது இக்கண்காட்சி இத்திங்கள் 27-ஆம்நாள் வரை நடைபெறுகிறது.
Leave a Reply