புலவர் தி.வே.விசயலட்சுமிக்குத் “திருக்குறள் 2016 விருது”
திருக்குறள் அறிஞர்
புலவர் தி.வே.விசயலட்சுமிக்குத்
“திருக்குறள் 2016 விருது”
புரோபசு சங்கம் (PROBUS CLUB OF CHENNAI) கொண்டாடிய பொங்கல் விழா
சுழற் சங்கத்தின் (ROTARY CLUB) ஆதரவில் இயங்கும் புரோபசு சங்கம் அரசுப் பணியினின்றும் ஓய்வுபெற்ற மூத்த குடிமக்கள், மருத்துவர்கள், சட்ட வல்லுநர்கள், இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் (IAS OFFICERS) முதலான 350-க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்களைத் தன்பால் கொண்ட ஒரு மாபெரும் சங்கம். 1992-இல் தொடங்கப்பெற்ற இச்சங்கம் உலகளாவிய நிலையில் பாங்கான பல தொண்டுகளை ஆற்றி வருகின்றது. ஆதரவற்ற முதியோர் இல்லங்கட்குச் சென்று வேண்டுவன அளித்து நன்கொடை அளித்தல் பள்ளி, கல்லூரி மாணவர்கட்கு ஊக்கத்தொகை அளித்தல், போட்டிகள் பல நடத்தி, பரிசுகள் தருதல், இவற்றுடன் பொங்கல் விழாவையொட்டி ஆண்டுதோறும் திருக்குறள் நெறிபரப்பும் அறிஞர் ஒருவர்க்கு “புரோபசு திருக்குறள் விருது“ அளித்தல் போன்ற பற்பல நற்பணிகளைச் செய்து வருகின்றது. ஒரு சிறந்த சமூக நல அமைப்பாகத் திகழ்கிறது இச்சங்கம்.
இவ்வாண்டு இச்சங்கம் தை 09, 2017 / 2016, சனவரி 23-ஆம் நாள், திருக்குறள் அறிஞர் புலவர் தி.வே.விசயலட்சுமிக்குத் “திருக்குறள் 2016″ என்ற உயரிய விருதை அளித்து மகிழ்ந்தது. இச்சங்கத்தின் சப்பான் நாட்டுத் தலைவர் திரு.குஞ்சி நார்முரா (KUNJI NARMURU) அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுத் திருக்குறள் விருதை வழங்கிச் சிறப்பித்தார். சங்கத்தலைவர் திரு. சுழலாளர் நமச்சிவாயம,ய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர் திரு. பாண்டியன் ஆகியோர் விருதாளரைப் பாராட்டிப் பேசினர்.
புலவர் தி.வே.விசயலட்சுமி திருக்குறள் காட்டும் நெறிமுறைகளையும், பிள்ளைகள் வயது முதிர்ந்த பெற்றோர்க்கு முதுமைக் காலத்தில் பேணிப் போற்றவேண்டியதன் இன்றியமையாமையையும் வள்ளுவர் வழிநின்று விளக்கிச் சங்கத்தின் செயற்பாட்டையும் பாராட்டி ஏற்புரை நிகழ்த்தினார்.
நிறைவாகச் சங்க உறுப்பினர்கள் “சுயம்வரம்“ என்ற நாடகத்தை நடிகர் டெல்லிகணேசு தலைமையில் நடத்தி அனைவரையும் மகிழ்வித்தனர்.
‘மக்கள் பணியே மகேசன் பண’ என்ற நோக்கத்துடன் சமூகத்திற்கும் திருக்குறள் போன்ற நீதி நூல்களின் சிறப்பை உலகம் அறிவதற்கும் இச்சங்கம் உறுதுணையாக இருத்தல் பாராட்டிற்குரியது.
Leave a Reply