மறக்க இயலாத சார்சா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி – இராபியா குமாரன்
மறக்க இயலாத சார்சா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி
சென்னை புத்தகக் கண்காட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கலந்து கொண்டு பெற்ற துய்ப்பறிவும், மகிழ்ச்சியும் என்றைக்கும் மறக்க இயலாதது. பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தின் காரணமாக விமானம் ஏறித் துபாய் வந்தபோது, இனி வரும் காலங்களில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ள இயலாமல் போய்விடுமே என்ற கவலைதான் மற்ற எல்லாக் கவலைகளையும் விட பெரும் கவலையாக மனத்தை ஆட்கொண்டிருந்தது.
அந்தக் கவலைக்கு அருமருந்தாக அமைந்தது சார்சா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி தந்த இனபம். உலகின் மிகப்பெரிய நான்கு புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றான சார்சா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியானது சார்சாவின் ஆட்சியாளர் மேதகு முனைவர் சேக்கு சுல்தான் பின் முகம்மது அல் காசிமியின் வழிகாட்டுதலின்படி கடந்த 1982ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு விளம்பரப் பலகைகளை அணிசெய்து கொண்டிருந்த பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சிபற்றிய அறிவிப்புகள் புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தின. வெள்ளிக் கிழமை விடுமுறை எப்போது வருமெனக் காத்திருந்து கடந்த நவம்பர் 13ஆம் நாள் மாலை சார்சா கிளம்பிச் சென்று கண்காட்சி நடைபெறும் சார்சா கண்காட்சி மையத்தை அடைந்தேன். நுழைவுக் கட்டணம் ஏதும் இல்லாத அரங்கினுள் சென்று பார்த்தபோது வியப்பின் உச்சத்திற்கே சென்றேன்.
34 ஆவது சார்சா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி வழக்கம்போல் இந்த ஆண்டும் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்த சார்சா மன்னர் புத்தகங்கள் வாங்கி கண்காட்சியில் பங்கெடுத்துள்ள பதிப்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், மனித அறிவு வளர்ச்சிக்கான நிதியாகவும் 4 பேராயிரம்(மில்லியன் திர்ஃகம்களை (Dirham) நன்கொடையாக வழங்கியது போற்றுதலுக்குரியதாகும்.
ஏறத்தாழ 16000 சதுரப் பேரடி(மீட்டர்) அளவிலான அரங்கில் 210 மொழிகளில் 15 நூறாயிரத்திற்கும் மிகுதியான தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இது, புத்தகப் பிரியர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்திருந்தது. ஏறக்குறைய 64 நாடுகளிலிருந்து 1547 புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கலந்து கொண்ட இந்த புத்தகக் கண்காட்சியில் இந்தியா, அமெரிக்கா, ஆசுதிரேலியா, இங்கிலாந்து, இரசியா, இத்தாலி முதலான பல நாடுகளும் கலந்து கொண்டன. அரபுப் பிரிவு, அரபு சாராப் பிரிவு, குழநதைகள் பிரிவு, அலுவல் பிரிவு என நான்கு முதன்மைப் பிரிவுகளாகக் கண்காட்சி அரங்கம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
11 நாட்கள் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் கல்வி, கலை, பண்பாடு, அறிவுசார் நிகழ்ச்சிகள் என ஏறத்தாழ 900 நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சிகளில் உலகின் பல நாடுகளிலிருந்து பல்வேறு முன்னணியாளர்களும் ஆளுமையாளர்களும் கலந்து கொண்டனர்.
குறிப்பாக நைசீரியாவின் எழுத்தாளரும் கவிஞருமான பென்ஒர்கி(BenOkri), அயர்லாந்து எழுத்தாளர் தாரென் சான்(Darren Shan), பி.ஒ.நி.(B.B.C.) தொலைக்காட்சியின் தொகுப்பாளரும் எழுத்தாளருமான இயான் மெக்கர்த்தி(John McCarthy), பாகித்தான் எழுத்தாளரும் கவிஞருமான ஃபாத்திமா பூட்டோ(Fatima Bhutto), எகிப்து நடிகர் முகம்மது சோபி(Mohammad Sobhy), எகிப்தின் தூதுவர்-அரசியல் எழுத்தாளர் முனைவர் முசுதபா அல் ஃபக்கி(Dr.Mostafa Al Faqi), மலையான நடிகர் மோகன்இலால்(Mohan Lal), இந்திய எழுத்தாளர் சச்சிதானந்தன், இந்தியாவைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் சுதா மூர்த்தி, கவிஞர் வைரமுத்து முதலானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கண்காட்சி அரங்கில் குழந்தைகளைக் கவர்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளும், குழந்தைகளுக்கான அறிவுசார் விளையாட்டுப் பொருட்களும், நகைச்சுவை ஓவியம் முதலான புத்தகங்களும் குழந்தைகளைப் பெரிதும் கவர்ந்திருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. சிறு அகவையிலேயே குழந்தைகளுக்குப் புத்தகம், வாசிப்பின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த இதுபோன்ற ஏற்பாடுகளை அனைத்துப் புத்தகக் கண்காட்சிகளிலும் கட்டாயம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகக் குழந்தைகள் பிரிவு வடிவமைக்கப்பட்டிருந்தது. குழந்தைகள் ஆர்வத்தோடு புத்தகத்தைப் புரட்டிப் பார்த்த காட்சிகளும், கையில் புத்தகப் பைகளோடு வீடு திரும்பிய காட்சிகளும் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தன.
இந்தியாவிலிருந்தும் ஏராளமான பதிப்பகத்தினர், புத்தக விற்பனையாளர்கள் சார்சா புத்தகக் காண்காட்சியில் பங்கெடுத்திருந்தனர். ஆங்கிலம், இந்தி, மலையாளம் முதலாான மொழிகளில் ஏராளமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் இத்தனை பிரம்மாண்டமாய் நடைபெற்ற கண்காட்சியில் ஒரு தமிழ்ப் பதிப்பகம்கூட கலந்து கொள்ளாதது மிகுந்த வருத்தத்தை அளித்தது. தமிழர்கள் வாசிப்பிலும், புத்தகம் மீதான ஆர்வத்திலும் எந்த அளவிற்குப் பின்தங்கி உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்கவே மிகவும் வேதனையாக இருந்தது.
தமிழ் முதலான இந்தியாவின் பல்வேறு மொழிகளில் நூல்களை வெளியிடும் தேசியப் புத்தக அறக்கட்டளை (National Book Trust), சாகித்ய அகாதமி ஆகிய அரங்குகளில்கூட எந்தவொரு தமிழ் நூலும் இல்லை. தேசியப் புத்தக அறக்கட்டளை அரங்கில் மிகக் குறைந்த அளிவலான புத்தகங்களே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்நூல்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஓர் இணையர் சில இந்தி நூல்களை எடுத்து அரங்கத்தில் இருந்தவர்களிடம் நீட்டினர். “நூல்களை வாங்கியவர்களிடம் நீங்கள்தான் இந்த வருடப் புத்தகக் கண்காட்சியில் முதல் முதலாக இங்குப் புத்தகம் வாங்குகிறீர்கள்” என்றனர். அதைக் கேட்ட அவ்விணையர் மிகுந்த மகிழ்ச்சியோடு, “அப்படியா..? சென்ற வருடமும் நாங்கள்தான் இந்த அரங்கில் முதன் முதலாகப் புத்தகம் வாங்கினோம்” என்றனர். இதில் வருந்தத்தக்க செய்தி என்னவெனில், 11 நாட்கள் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் 10ஆவது நாளில்தான் தேசியப் புத்தக அறக்கட்டளை அரங்கில் முதல் புத்தகம் விற்பனையாகியுள்ளது. இந்த அளவிற்குத்தான் நம் நாட்டு அரசு சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.
வாசிப்பில் ஆர்வமுடைய தமிழர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக அமைந்தது வைரமுத்துவின் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா மட்டுமே. இந்தப் புத்தகக் கண்காட்சியில் நடைபெற்ற ஒரே தமிழ் நிகழ்ச்சியான இந்நிகழ்ச்சியில் இந்தியத் துணைத் தூதரகத்தின் பத்திரிகை-தகவல்-கல்வித்துறை அதிகாரி சுமதி வாசுதேவு வைரமுத்துவின் சிறுகதைகள் நூலை வெளியிட்டார். முதல் படியை ஈடிஏ பிபிடி நிறுவனத்தின் செயல் இயக்குநர் அன்வர் பாசா பெற்றுக் கொண்டார்.
வைரமுத்துவின் வருகையையொட்டிச் சில அரங்கங்களில் வைரமுத்துவின் சில புத்தகங்கள் மட்டும் கண்ணில்பட்டன. அத்தோடு மலையாள பதிப்பக அரங்கத்தில் சில இசுலாமியத் தமிழ் நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அரபு மக்களுக்கு இணையாகக் கேரள மக்களும் குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாகப் புத்தகக் கண்காட்சிக்கு வருகைதந்து ஆர்வத்தோடு புத்தகங்களை வாங்கிச் சென்றது மிகுந்த வியப்பைத் தந்தது. ஆனால், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தமிழர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்த வண்ணம் இருந்தனர். அவர்களில் ஒற்றை எண்ணிக்கையிலான சிலரே குடும்பத்தோடு வந்திருந்தனர்.
இதற்கு முன்னர் சில தமிழ்ப் பதிப்பகங்கள் சார்சா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டதாகச் சிலர் தெரிவித்தனர். நூறாயிரக்கணக்கான தமிழர்கள் அமீரகத்தில் இருந்தாலும் வாசிக்கும் பழக்கத்தில் பின்தங்கியிருக்கும் தமிழர்கள் கண்காட்சியில் பங்கேற்ற பதிப்பகங்களுக்குக் கொடுக்க வேண்டிய ஒத்துழைப்பைத் தர மறுத்த தவற்றைப் புரிந்து செயல்பட்டால் இனிவரும் காலங்களில் சார்சா புத்தகக் கண்காட்சியில் தமிழுக்கும் இடமிருக்கும் என்ற நம்பிக்கையிலும், அண்டை மாநிலமான கேரள மக்களிடம் இருக்கும் புத்தகம் மீதான ஆர்வத்தில் பத்து விழுக்காடு கூட நம் தமிழ் மக்களுக்கு இல்லையே என்ற கனத்த இதயத்தோடும் புத்தகக் கண்காட்சி நடைபெற்ற அரங்கை விட்டு வெளியேறினேன்.
மொத்தத்தில் 1.22 பேராயிரம்(மில்லியன்) பார்வையாளர்கள் பங்கேற்ற, 135 பேராயிரம் அமீரகத் திர்ஃகம் அளவிற்கு புத்தகங்கள் விற்பனையான 34ஆவது சார்சா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி மறக்க முடியாத துய்ப்புணர்வாக அமைந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
-துபாயிலிருந்து இராபியா குமாரன்
Leave a Reply