இந்திய – சிங்களக் கூட்டுப் படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு நினைவேந்தும் விதமாக, தஞ்சை விளாரில், உலகத் தமிழர் பேரமைப்பால் எழுப்பப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுவரையும், பூங்காவையும் இடித்த தமிழக அரசின் வன்செயலைக் கண்டித்தும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அய்யா பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 போராளிகளை விடுதலை செய்யக் கோரியும் ம.தி.மு.க., தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் இன்று(16.11.2013) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சென்னை – வள்ளுவர் கோட்டம்

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில், காலை 11.30 மணியளவில், முற்றம் இடிப்பைக் கண்டித்து பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் பங்கேற்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி ஒருங்கிணைத்தார்.

 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தென் சென்னை மாவட்டத் தலைவர் திரு.சவுந்திரராசன், மே பதினேழு இயக்கச் செயல்பாட்டாளர் தோழர் கார்த்திக்கு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலர் தோழர் தியாகு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொழிற்சங்கப் பிரிவுச் செயலாளர் திரு. சைதை கு.சிவராமன், தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் தோழர் இரா.அதியமான், ‘சந்தனக்காடு’ இயக்குநர் வ.கவுதமன், தமிழ்நாடு மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் அருண்சோரி, தமிழ்த் தேச மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் தமிழ்மகன், தொழிலாளர் சீரமைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் சேகர், தமிழர் குடியரசு முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன், பாலச்சந்திரன் மாணவர் இயக்கத் தோழர் சிபி.இலட்சுமணன், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கப் பொறுப்பாளர் தோழர் எட்வின், இயக்குநர் வ.கவுதமன், தமிழினக் காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு கட்சி, இயக்கத் தோழர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

சென்னை – மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், காலை 11.30 மணியளவில், முற்றம் இடிப்பைக் கண்டித்து, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், ம.தி.மு.க. தென் சென்னை மாவட்டச் செயலாளர் திரு. வேளச்சேரி மணிமாறன் முதலான ம.தி.மு.க. முன்னணிப் பொறுப்பாளர்களும், மே பதினேழு இயக்கப் பேராளர் தோழர் அருள், ஓவியர் வீரசந்தனம் முதலான பல்வேறு அமைப்புத் தோழர்களும், திரளான ம.தி.மு.க.வினரும்  கலந்து கொண்டனர்.

தஞ்சை

தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் காலை 11 மணியளவில், அனைத்துக் கட்சிகள், தமிழ் அமைப்புகள் சார்பில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. துரை.பாலக்கிருடிணன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனர் திரு. குடந்தை அரசன், தமிழர் நீதிக்கட்சி நிறுவனர் திரு. சு.ப.இளவரசன், இந்தியப் பொதுவுடைமைக்கட்சி திரு. சந்திரகுமார், உலகத் தமிழர் பேரமைப்பு திரு. சாமி.கரிகாலன், த.தே.பொ.க. மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி முதலான பல்வேறு கட்சி, இயக்கங்களின் சார்பாளர்களும், தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தார்.

மதுரை

மதுரை தலைமை அஞ்சல் நிலையம் முன்பு காலை 10.30 மணிளவில், ம.தி.மு.க. மாநகரச் செயலாளர் திரு. மு.பூமிநாதன் தலைமையில் நடைபெற்றது. ம.தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் திரு. எம்.பி.சின்னசெல்லம், தமிழர் தேசிய இயக்க மாநிலப் பொருளாளர் திரு. எம்.ஆர்.மாணிக்கம் முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, தமிழ்நாடு மக்கள் கட்சி மாவட்ட இணைச் செயலாளர் தோழர் மணிபாபா, ம.தி.மு.க. தொழிலாளர் அணி செயலாளர் திரு. மெகபூப் ஜான், தோழர் தங்கபாண்டி(மக்கள் விடுதலை-பொதுவுடைமைக் கட்சி), தோழர் பரிதி (தமிழ் தமிழர் இயக்கம்), தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாவட்டச் செயலாளர் தோழர் மு.தமிழ்ப்பித்தன், தமிழ்ப்புலிகள் இயக்க மாநில இணைப் பொதுச் செயலாளர் தோழர் பேரறிவாளன், தமிழ்நாடு சமயச் சார்பற்ற சனதா தள மாநில பொதுச் செயலாளர் யோன் மோசசு, மனித நேய மக்கள் கட்சி மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் திரு. செல்லச்சாமி, தமிழ்த் தேசக் குடியரசு இயக்க மாநகரச் செயலாளர் தோழர் கதிர்நிலவன் உள்ளிட்ட பல்வேறு தோழமை இயக்கப் பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

 

கிருட்டிணகிரி

கிருட்டிணகிரி – புதியபேட்டை – வட்டச் சந்திப்பில் காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் திரு.மாதையன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து, ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பிக் கண்டன உரையாற்றினார். தமிழ்த் தேசக் குடியரசு இயக்க மாவட்டச் செயலர் தோழர் ஒப்புரவாளன், தமிழர் தேசிய இயக்கத் தோழர் மருத்துவர் முருகேசன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் கவிஞர் செம்பரிதி உள்ளிட்ட பல்வேறு கட்சி, இயக்கப் பொறுப்பாளர்களும், தோழர்களும் இதில் கலந்து கொண்டனர்.

 

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில், காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் திரு. சந்திரசேகரன் தலைமையேற்றார். உலகத் தமிழர் பேரமைப்பு திரு. துரை.மதிவாணன் முன்னிலை வகித்துப் பேசினார். திரு. க.அமுதன்(உலகத் தமிழர் பேரமைப்பு), தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் சி.ஆரோக்கியசாமி, தமிழக இளைஞர் முன்னணி திருவாண்டார் கோயில் ஒன்றியத் தலைவர் தோழர் இலட்சுமணன், ஒன்றியச் செயலாளர் தோழர் த.மணிகண்டன் உள்ளிட்ட பல்வேறு இயக்கப் பொறுப்பாளர்களும், தோழர்களும் இதில் பங்கேற்றனர்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் பேருராட்சி மன்றம் எதிரில், தமாலை 5 மணியளவில் தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சு.க.மகாதேவன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் மு.தமிழ்மணி முன்னிலை வகித்தார். குரும்பூர் தமிழக இளைஞர் முன்னணிச் செயலாளர் தோழர் சக்திவேல் கண்டன முழுக்கங்களை எழுப்பினார்.

ம.தி.மு.க. மாவட்டப் பொருளாளர் திரு. கருப்பசாமி பாண்டியன், ஒன்றியச் செயலாளர் திரு. வித்யாசுரேசு, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி இளைஞர் மன்றப் பொறுப்பாளர் தோழர் செயக்குமார், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கிளைச் செயலாளர் தோழர் இரத்தினபாண்டியன், உலகத் தமிழர் பேரமைப்புப் பொறுப்பாளர் திரு. துரை.அரிமா முத்துக்குமார் அறக்கட்டளை திரு. ஞானசேகர் முதலான பல்வேறு இயக்கப் பொறுப்பாளர்களும், தோழர்களும் இதில் பங்கேற்றனர்.

நெல்லை

நெல்லை தொடர்வண்டி நிலையம் அருகில் காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் திரு. சரவணன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பாண்டியன், தோழர்கள் தாழையூத்து சிவநிச்செல்வன், வாசுதேவநல்லூர் பழநிச்சாமி உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

இடிந்தகரை

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடி வரும் இடிந்தகரை மக்கள், முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்பைக் கண்டித்தும், அய்யா பழ.நெடுமாறன் உள்ளிட்டோரின் கைதைக் கண்டித்தும், லூர்து மாதா கோயில் போராட்டத் திடலில் பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். முனைவர் சு.ப.உதயகுமார், புஷ்பராயன், முகிலன் உள்ளிட்ட போராட்டக்குழு உறுப்பினர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

தொடர் மழை காரணமாக கடலூர், சிதம்பரம், பெண்ணாடம், ஈரோடு ஆகிய பகுதிகளில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டங்கள், வேறொரு நாளுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

(தகவல்: த.தே.பொ.க. செய்திப்பிரிவு)