mozhippoar_uruthimozhi02

முதல் மொழிப்போர் ஈகி நடராசனார்

நினைவு நாளில்

மொழியுரிமை சூளுரை ஏற்பு;

மொழியுரிமை ஆண்டு இயக்கம் தொடக்கம்

  சென்னை, சனவரி 15, 2015: தமிழ்நாட்டில் அண்மையில் தொடங்கப்பட்ட தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் சார்பில், இன்று 1939 இல் கட்டாய இந்திக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைசென்று சிறையிலேயே மறைந்த ஈகி நடராசனாரின் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்திலுள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவகத்தில் கூட்டியகத்தின் பிரதிநிதிகள் இன்று காலை 11 மணிக்கு திரண்டு மொழிப்போர் ஈகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

  இந்தியாவின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக தமிழும் ஆக்கப்படவேண்டும் என்பது முதலான பல்வேறு கோரிக்கைகளுக்குப் போராடுவதற்காகப் பல தமிழ், முற்போக்கு அமைப்புகளால் உருவாக்கப்பட்ட தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம், 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 50 ஆம் நினைவு ஆண்டான இந்த ஆண்டை மொழியுரிமை ஆண்டாக அறிவித்திருக்கிறது. இந்த ஆண்டு மொழிப்போர் ஈகிகள் நாளான சனவரி 25 ஐ மிகச்சிறப்பாக எல்லா நகரங்களிலும் கொண்டாடுவது என்று தீர்மானித்திருக்கிறது. அத்துடன் 1939 இ்ல் வீரமரணம் அடைந்த நடராசன், தாளமுத்து மற்றும் 1965 இல் மொழி்ககாக உயிரீ்ந்த பல்வேறு ஈகிகளையும் நினைவுகூரப் பல நகரங்களில் கூட்டங்கள் நடத்துவது என்று முடிவுசெய்துள்ளது.

  “இன்று முதல் ஓராண்டுக்கு, அரசு நிர்வாகம், கல்வி, வணிகம், ஊடகம் எனப் பல களங்களில் மொழியுரிமைக்காக இந்தக் கூட்டியக்கம் பரப்புரைகளையும் போராட்டங்களையும் எடுக்கும்” என்று கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஆழி செந்தில்நாதன் நிகழ்ச்சியில் கூறினார். நிகழ்ச்சியில் ஆய்வாளர் மணிவண்ணன், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் திரு. அருணபாரதி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் திரு. பாரதி, தமிழ்த்தேச நடுவத்தின் சார்பில் திரு. பாவேந்தன், மக்கள் இணையத்தின் சார்பில் திரு பழநி, திரு தாலின், தமிழர் பண்பாட்டு நடுவத்தின் சார்பில் திரு. இராசுகுமார் பழநிச்சாமி, மே 17 இயக்கத்தின் சார்பில் திரு சபரி, தமிழர் மாணவர் இணையத்தின் சார்பில் திரு.தமிழ்நெறியன், குமாரபாளையம் மொழிப்போர் ஈகிகள் சார்பில் திரு பகலவன் முதலான பலரும் கலந்துகொண்டு பேசினார்கள்.

  முதலில் மொழிப்போர் ஈகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அனைவரும் தமிழ் மொழியுரிமைக்காகப் போராடுவதற்காக ஈகி நடராசனார் பெயரில் சூளுரையும் ஏற்றார்கள். தமிழகமெங்கும் மொழிப்போர் ஈகிகளுக்கு நினைவேந்தல் செலுத்தவும் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

mozhippoar_uruthimozhi01