nighazhvu_mozhiurimai12 - நகல் nighazhvu_mozhiurimai15

பிற படங்களுக்குச் சொடுக்கிக் காண்க:

http://thiru2050photos.blogspot.in/2015/09/blog-post_30.html

  தொன்மை மொழியான தமிழ் முதலான இந்தியாவின் பல்வேறு மொழிகளின் உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு, பத்திரிக்கையாளரும், தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் ஒருங்கினைப்பாளருமான     திரு. ஆழி செந்தில்நாதன் அரும்பெரும் முயற்சியாக,   “மொழி உரிமை மாநாடு” சென்னையில் இரண்டு இடங்களில் இரு நாளாக (புரட்டாசி 02 & 03, 2046 / செப். 19 & 20, 2015) நடைபெற்றது,

  தமிழ் முதலான பல்வேறு மொழி உரிமைக்கான தீர்மானங்களை உருவாக்குவதற்காகப் பல்வேறு தமிழ் அறிஞர்களும், செயல்வீரர்களும் வல்லுநர்களும், இணைந்து உரையாடிய கலந்துரையாடல்களுடன் மொழி உரிமை மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களுக்கான “கருத்துரையாடல்” நிகழ்ச்சி சென்னை, மயிலாப்பூர் ந.மே.அ. குடியிருப்பில்(சி.ஐ.டி. காலனியில்) உள்ள “கவிக்கோ அரங்கத்தில்” புரட்டாசி 02 / செப்டம்பர் 19- சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை   நடைபெற்றது.

  இந்தக் கருத்துரையாடலில் நான்கு தலைப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவை 1. ஆட்சிமொழி, 2. கல்வி மொழி, 3. வணிக மொழி, 4. பொதுத்துறை நிறுவனத்தில் தமிழர், தமிழ்மொழி பாதுகாப்பிற்கான அரங்கு என்பன ஆகும்.

  மாநாட்டில் திரு. கி. த. பச்சையப்பன், (ஒருங்கினைப்பாளர், தமிழ்  உரிமைக் கூட்டமைப்பு), திரு. பெ. மணியரசன், (தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்), திரு.பா.செயப்பிரகாசம், (நெறியாளுகைக் குழுத் தலைவர், தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம்), திரு. அருகோ (ஆசிரியர், எழுகதிர்) ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

  மேலும், பல்வேறு தமிழ் இயக்கங்களின் தலைவர்களும், மாணவர்   கூட்டமைப்புச் சார்பாளர்களும், கலந்துகொண்டு

தமிழ் நாட்டில் தமிழ் மொழியினை எல்லாப் பள்ளிக் கல்லூரிகளிலும், முதன்மைப் பாடமாகவும்,

தமிழ் வழிக் கல்வியில் பள்ளி, கல்லூரித் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கே தமிழ்நாடு அரசாங்க வேலைவாய்ப்பில் முதல் உரிமை அளிக்கப்படவேண்டும் எனவும்,

தமிழ்நாடு உயர்நீதி மன்றத்தில் தமிழ்மொழி வழக்காடு உரிமை வேண்டும்

எனவும் வலியுறுத்தினார்கள்.

  மேலும், தமிழகப் பொதுத்துறை வங்கிகளிலும், மத்திய அரசு அலுவலகங்களிலும் தேவையற்ற இந்தித் திணிப்பிற்குக் கண்டனமும், தேவைப்பட்டால் இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் எனவும் கருத்துரைக்கப்ட்டது.

  திரு. அதியமான்(பொதுச் செயலாளர், தமழர் முன்னேற்றக் கழகம்) உரையாற்றுகையில் தமிழ் மொழி, தமிழர் நலனுக்காகப் போராடுபவர்களின் குரல் ஒலிப்பதற்குத் தமிழர் அமைப்புகள் ஒன்றிணைந்து சட்ட மன்றத்திலோ பாராளுமன்றத்திலோ யாராவது ஒருவர் இடம் பெற அரசியல் அதிகாரத்தினைக் கைப்பற்றவேண்டும் எனத் தெரிவித்தார்.

  இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணிபுரியும் திருமதி. அ. கார்குழலி, உரையாற்றுகையில் தமிழ் நாட்டில் உள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தலைமை அலுவலகம் முதலான அனைத்து அலுவலகங்களிலும் தமிழைப் பின்னுக்குத் தள்ளி எப்படியெல்லாம் இந்தியை நயவஞ்சகமாக மத்திய அரசு திணிக்க முயல்கிறது என எடுத்துரைத்தார்.

  மாலை 7:30 மணிக்கு வாதங்கள் முடிந்து மறுநாள் சென்னை, மேற்கு மாம்பலத்தில் நடைபெறும் “மொழி உரிமைகளுக்கான சென்னை   பறைசாற்றம்” மாநாட்டிற்குத் தேவையான தீர்மானங்கள்     வரையறுக்கப்பட்டு கருத்துரையாடல்கள் நிறைவு பெற்றன.

  (புரட்டாசி 03 / செப்டம்பர் 20, ஞாயிறு, மாலை 3-மணியளவில் சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள “சந்திரசேகர் திருமண மண்டபத்தில்” மொழியுரிமை மாநாட்டில் “மொரி உரிமைகளுக்கான சென்னை பறைசாற்றம்” வெளியீடு நடைபெற்றது.

  மாலை 3.00 முதல் 5.00 மணி வரையிலான இந் நிகழ்ச்சிக்குத் திரு. மணி. மணிவண்ணன், (மொழி முன்னெடுப்பு-தமிழ்நாடு)   தலைமை வகித்தார்.

பேராசிரியர். யோகாசிங்கு, பஞ்சாபு

திரு. தீபக் பவார். மகாராட்டிரம்,

பேராசிரியர் கருகா (சாட்டர்சி), மேற்கு வங்கம்,

திரு. சாகேத்து சாகு, கோசாலி/ஒடிசா,

திரு. ஆனந்து. பனவாசி பலகா, கர்நாடகம்,

பேராசிரியர். பி. பவித்திரன், மலையாள ஐக்கியவேதி, கேரளம்,

திரு. வளர்மதி, தமிழ்நாடு,

திரு. சேகர் கொட்டு, ஆந்திரப் பிரதேசம்.

ஆகியோர் உரையாற்றினர்.

மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை நடை பெற்ற “நமது மொழி, நமது அதிகாரம்” என்ற தலைப்பிலான மாநாட்டிற்குத் தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திரு. ஆழி செந்தில்நாதன் அறிமுகவுரையாற்றனார்.

முதன்மைத் தீர்மானங்களாக

“மொழி நிகர்மை, மொழி உரிமை அடிப்படையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 17ஆம் பரிவை முழுமையாகத் திருத்தவும்,

அரசியலமைபுபச்சட்டத்தில் 8ஆம் அட்டவணையிலுள்ள 22 மொழிகளையும் ஒன்றிய அரசின் ஆட்சிமொழிகளாக ஆக்கவும்

வலியிறுத்தப்பட்டன.

மாநாட்டின் முடிவில் கீழ்வரும் தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டன.

  1. இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள அனைத்து மாநில மொழிகளையும் ஒன்றிய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்க வேண்டும். 1996 ஆம் ஆண்டு சூன் திங்களில் இசுபெயின் நாட்டில் பார்சிலோனாவில் ஏற்பிசைவு வழங்கப்பட்ட பன்னாட்டு மொழியுரிமைச் சாற்றுகையில் குறிப்பிட்ட வண்ணம் இந்தியாவில் அனைத்து மொழிகளுக்கும் இணையான முதுன்மை வழங்க வேண்டும். மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டக் கூடாது என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

  1. இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட மாநிலங்களில் உள்ள ஆட்சிப் பணியிடங்களில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களையே பணியமர்த்தம் செய்திட வேண்டும். தற்போது உள்ளது போல் பிற மாநிலத்தவர் பணியில் அமர்த்தப்பட்டால் அந்த மாநில மக்களின் மொழி, பண்பாட்டியல், பொருளியல் முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளாத போக்கு தொடர்ந்திடவே செய்யும். இஃது ஆட்சி மொழி நடைமுறைப்படுத்தத்திற்குத் தடையாக அமையும் என்பதால் இந்திய அரசு தற்போது வேறு மாநிலங்களில் பணிபுரியும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைத் தத்தம் சொந்த மாநிலத்திற்கு மாறுதல் செய்திட வேண்டும் என்றும், இனி வரும் காலங்களில் அந்தந்த மாநிலங்களில் தேவைக்கேற்ப ஆட்சிப் பணித் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே நடத்திப் பணியமர்த்தம் செய்திட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

  1. இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநில மொழிகளும் ஆட்சி மொழிகளாக அறிவிக்கப்படும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் படைத்துறை, தொடர்வண்டித் துறை, வானூர்தி, வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், அஞ்சலகம் முதலான இந்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் அந்தந்த மாநில மொழிகளில் மட்டுமே அலுவல்கள் நடைபெற வேண்டும். ஒன்றிய அரசோடு அலுவலகங்கள் தம் மாநில மொழிகளில் மட்டுமே தொடர்பு கொள்ளுதல் வேண்டும். இந்தியத் தலைமை அலுவலகங்களில் தக்க மொழிபெயர்ப்பு ஏந்துகளை உருவாக்கி அவற்றின் வழியாக மாநில மொழிகளிலேயே மாநிலங்களோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

  1. நெருக்கடி நிலையின் போது மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வித்துறையை மீண்டும் மாநில அரசுகளிடமே திருப்பி அளித்திட வேண்டும் என்று ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. பல்கலைக் கழகங்களின் உரிமையில் தலையிடும் இந்தியத் தொழில் நுட்பக் கழகம் போன்ற நிறுவனங்கள் கலைக்கப்பட்டு மாநில அரசுகளின் வழியாகப் பல்கலைக் கழகங்கள் தன்னுரிமையாகப் பணியாற்ற வழிவகை செய்திட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

  1. இந்திய அரசினால் அறிவிக்கப்பெறும் திட்டங்கள் அனைத்தும் தற்போது இந்தி மொழியிலேயே பிரதான் மந்திரி சடக் யோசனா, சர்வசிக்ச அபியான், சீவன்பீமா போன்று இருந்திடும் நிலையினை மாற்றி அந்தந்த மாநில மொழிகளில் அறிவித்திட வேண்டும் என்றும் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிட்டு நேரடியாக ஒன்றிய அரசு செயல்பட்டு வரும் நிலையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

  1. இந்திய நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒன்றிய ஆட்சி மொழிகள் அனைத்திலும் நடைபெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தத்தம் தாய்மொழியிலேயே பேச உரிமை அளித்திட வேண்டும் என்றும் ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

  1. உலகமயமாக்கலின் விளைவாக பல்வேறு தேசிய இனங்கள் தம் தனித்தன்மையை இழந்திடும் சூழல் உள்ளதால் இந்திய அரசு எதிர்வரும் திசம்பர் திங்களில் நடைபெற உள்ள காட் ஒப்பந்தத்திற்கு இசைவளித்து கையொப்பமிடக் கூடாது என இம்மாநாடு வலியுறுத்துகிறது. அவ்வாறு கையொப்பமிடும் சூழலில் மக்கள் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டு, பன்னாட்டு, தனியார் நிறுவனங்களின் கொள்ளைக்கு வழியமைந்திடும் என இம்மாநாடு அஞ்சுகிறது. எனவே காட் ஒப்பந்தத்திற்கு இசைவளித்து கையொப்பமிடக் கூடாதென்று இந்திய அரசை மீண்டும் வலியுறுத்துகிறது.

  1. தமிழ்நாட்டில் வழக்கு தொடுப்பவர் தமிழர், வழக்குரைக்கும் வழக்கறிஞர் தமிழர், தீர்ப்பு சொல்லும் நடுவரும் தமிழர். எனவே, தமிழ்நாட்டில் சென்னை உயர்நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் தமிழில் மட்டுமே அலுவல்கள் நடைபெற வேண்டும். 2006ஆம் ஆண்டு தமிழ்நாட்டுச் சட்டப் பேரவை உயர்நீதி மன்றத்தில் தமிழை நடைமுறைப்படுத்த வேண்டி இயற்றி அனுப்பிய தீர்மானத்தைக் கிடப்பில் போட்டுள்ள இந்திய அரசை வன்மையாக இம்மாநாடு கண்டிக்கிறது. உடனடியாகத் தமிழ்நாட்டில் உள்ள உயர்நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டு அரசு அதற்குரிய அழுத்தத்தை இந்திய அரசுக்குக் கொடுக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் என்றும் மெட்ராசு உயர்நீதிமன்றம் என்றும் வழங்கப்பட்டு வருவதை மாற்றித் தமிழ்நாட்டு உயர்நீதி மன்றம் எனப் பெயர் மாற்றிட வேண்டும் என இம்மாநாடு இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது. இந்திய ஆட்சிப் பரப்பிற்குட்பட்ட அனைத்து உயர்நீதி மன்றங்களிலும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே நீதிபதிகளாக அமர்த்திட வேண்டும் எனவும் இம்மாநாடு இந்திய அரசை வலியுறுத்துகிறது.

  1. 1956ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தும் வண்ணம் தமிழகத்தில் தமிழை முழுமையான ஆட்சிமொழியாக்க உரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அரசின் அறிவிக்கைகள், ஆணைகள், குறிப்புரைகள் அனைத்தும் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும். இத்தகு மாற்றத்தைத் தலைமைச் செயலகத்தில் முதலில் செயல்படுத்திப் பிறமாவட்டங்கள் அனைத்திலும் அதைத் தொடர வேண்டும்.

  1. 1996ஆம் ஆண்டு தமிழ்ச் சான்றோர் பேரவை நடத்திய பெரும் போராட்டத்தின் விளைவாகத் தமிழக அரசு தமிழ் நாட்டில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி கற்பிக்க ஆணை பிறப்பித்தது. ஆங்கில வழிப் பள்ளிகள் நடத்தும் தனியார் அமைப்பு வழக்கு தொடுத்து, தமிழ் வழிக் கல்வி ஆணையைத் தோற்கடித்தது. உயர் வழக்கு மன்றத்தில் தோற்றுப் போன இவ்வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. இதுவரை அரசு இதில் மேல்முறையீடு செய்யாமல் உள்ளது. கருநாடக அரசு அண்மையில் பிறப்பித்த சட்டமும் உச்சநீதிமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. கல்வி உரிமைச் சட்டம் தாய்மொழிக் கல்வியை மறுக்கவில்லை. கருநாடகம் முன்னெடுக்கும் தாய்மொழி வழிக் கல்விப் போராட்டத்தில் தமிழக அரசும் பங்கெடுத்துத் தாய்மொழி வழிக் கல்வி வெற்றிபெறத் துணை செய்ய வேண்டும்.

  1. 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு தமிழ் கற்பித்தல் சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டத்தில் முதல் மொழியாகத் தமிழ் கட்டாயம், இரண்டாவது மொழியாக ஆங்கிலம் கட்டாயம். மூன்றாவதாக வரலாறு, சமூக அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களைத் தமிழ் வழியாகவும், ஆங்கில வழியாகவும் கற்கலாம். நான்காவதாக, அவரவர் விரும்பும் தாய்மொழி படிக்கலாம். அது கட்டாயமில்லை என்று கூறுகிறது. 2006 ஆம் ஆண்டு தொடங்கி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு ஆண்டாக இது நடைமுறைப்படுத்தப்பட்டு 2016 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் முதல் மொழி பாடமாகத் தமிழ் எழுத வேண்டும். 2015-16 பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ் மொழிப் பாடத்தைக் கட்டாயம் அனைத்து மாணவர்களும் எழுதத் தமிழக அரசு தக்க வழி வகை செய்ய வேண்டும்.

  1. அரசுப் பள்ளிகளில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் ஆங்கில வழிக் கல்வியை முற்றாக நிறுத்திட வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்திட, பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு, போதிய ஆசிரியர்களை நியமித்தல் ஆகிய ஆக்க வழிச் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். மேலும், பள்ளிகளின் கண்காணிப்பு அலுவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பள்ளியின் தரத்தை உயர்த்தத் தமிழக அரசு முன்வர வேண்டும். தவிரவும் அரசு அலுவலர், ஆசிரியர் ஆகியோர் குழந்தைகள் அரசுப் பள்ளியில் தமிழ் வழியிலேயே கற்க வேண்டும் எனத் தமிழக அரசு ஆணை பிறப்பித்திட வேண்டும்.

  1. பள்ளியில் கணிணி அறிவியல் பாடத்தைக் கற்பிக்க ஆசிரியர் பயிற்சியில் பட்டம் (B.Ed.,) பெற்ற ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் தமிழக அரசு அதை முழுமையாகச் செயல்படுத்தவில்லை. எனவே, கணிணிக் கல்வியின் தரத்தை மேம்படுத்திட, கணினி அறிவியல் ஆசிரியர் பட்டம் (B.Ed.,) பெற்று வேலையில்லாமல் நீண்டநாட்கள் காத்திருக்கும் ஆசிரியர்களைத் தமிழக அரசு நியமிக்க வேண்டும். நியமிப்பதோடு கணினி அறிவியலுக்கெனச் சமச்சீர்க் கல்வி சார்பாக உருவாக்கப்பட்ட பாடப்புத்தங்களை மாணவர்கள் பயன்பாட்டிற்கெனத் தமிழக அரசு உடனடியாக வெளிக் கொண்டு வரவேண்டும்.

  1. தமிழ் வழிக் கல்வியை மேம்படுத்தும் முதல் முயற்சியாகத் தமிழ்நாட்டில் மழலையர் கல்வி (LKG, UKG) முழுமையாகத் தமிழில் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும் எனத் தமிழக அரசு சட்டமியற்ற வேண்டும். அதற்கு வாய்ப்பாகத் தமிழகத்திலுள்ள 54,000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பள்ளிகள் அனைத்தையும், அரசு மழலையர் பள்ளிகளாகத் தரம் உயர்த்திட வேண்டும். அதேபோல், தமிழகத்திலுள்ள தாய்த் தமிழ்ப் பள்ளிகளை, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளாக மாற்ற வேண்டும்.

  1. தமிழகத்தில் பல்வேறு படிநிலைகளைக் கொண்ட (CBSE, INTERNATIONAL) கல்வி முறையை மாற்றி, ஒரேவகையான கல்வி முறையைக் கொண்டுவர வேண்டும். அதற்கு ஏதுவாகப் பாடத்திட்டத்தின் தரத்தினை மேம்படுத்திட வேண்டும். மேலும், ஆசிரியர்களுக்கெனத் தரமேம்பாட்டு பயிற்சிகளைத் தொடர்ந்து வழங்கிட வேண்டும்.

  1. தமிழகத்திலுள்ள கல்லூரிகளில் வணிகவியல், கணிப்பொறியியல் ஆகிய பட்டவகுப்புகளுக்கும், பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்)   கல்வி நிறுவனங்களுக்கும் தேவையான தமிழ் வழி நூல்கள் இன்று இல்லை. அதேபோல், பொறியியல் கல்லூரியில் கட்டுமான பிரிவு தவிர ஏனைய பிரிவு வகுப்புகளுக்கும் தேவையான தமிழ்வழி நூல்கள் இன்று இல்லை. எனவே, இக்குறைப்பாடுகளை நிறைவு செய்யத்தக்க வண்ணம் உரிய பாடநூல்களை வெளிக் கொணரத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  1. கல்லூரியில் தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பருவத்திற்கும் உதவித்தொகையாக உரூ.400 முன்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அது தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. எனவே, மாறியுள்ள பொருளாதாரச் சூழலில், தமிழ் வழியில் பட்ட வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பருவத்திற்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கிட வேண்டும்.

  1. தமிழகத்தில் சமச்சீர்க் கல்வி நடைமுறையில் இருந்தாலும், +1 மற்றும் + 2 ஆகிய வகுப்புகளில் பயிலும் தனியார் பள்ளி, தன்நிதிப்பள்ளிகளில் +1 வகுப்புப் பாடங்களை நடத்தாமல், +2 வகுப்புப் பாடங்களையே இரண்டு கல்வி ஆண்டுகளிலும் நடத்தி, மாணவர்களைத் தேர்வுத் தகுதி மிக்கவர்களாக ஆயத்தப்படுத்தி விடுகின்றனர். இதனால், பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் இந்த மாணவர்கள் அதிகமான வாய்ப்புகளைப் பெற்றுவிடுகின்றனர். ஆனால், போதிய ஆசிரியர்கள், கட்டமைப்பு வசதியில்லாத அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் +2 பாடங்களை ஓராண்டு மட்டுமே பயின்று தன்நிதிப் பள்ளி மாணவர்களோடு போட்டி போடுவதில் பின்னடைவு ஏற்படுகிறது. எனவே, கல்வியில் நிலவும் இந்த அநீதியைத் தடுத்திட ஆந்திராவில் உள்ளது போல் +1 தேர்விலும் அரசு பொதுத்தேர்வினை நடத்திட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

  1. தமிழகத்தில் நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் எண்ணற்றவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இத்தகைய மொழிப்போர் ஈகியர் பற்றிய விவரம் பாடப்புத்தகங்களில் இடம் பெற வேண்டும். அதே போல் 1956 மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் நாள் மற்றும் உலகத் தாய்மொழி நாளான பிப்பிரவரி 21ஆம் நாள் ஆகிய நாள்களை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

  1. தமிழ்வழிக்கல்வியில் தங்களது குழந்தைகளைச் சேர்க்கப் பெற்றோர் தயங்குவதற்கு முதன்மையான காரணமாக இருப்பது வேலை வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்பதுதான். எனவே பெற்றோர்களது இந்த அச்சத்தைப் போக்கும் வண்ணம் +2 வகுப்பு வரையில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் 80% ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

  1. தமிழகத்தில் தொழிற்கல்வியில் மாணவர்களைச் சேர்க்கும் போது 15 விழுக்காடு பொதுப்பிரிவிற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் தமிழக மாணவர்களைக் காட்டிலும் முற்றிலும் மைய அரசின் பாடத்திட்டத்தின்படி (சி.பி.எசு.இ.) பாடங்களைப் படிக்கும் பிற மாநில மாணவர்கள் குறிப்பாக ஆந்திர மாணவர்கள் மிக அதிகமாக மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து விடுகின்றனர். இதனால் தமிழக மாணவர்களின் வாய்ப்பு மிகவும் பாதிக்கப்படுவதால் 15 விழுக்காட்டு ஒதுக்கீட்டு முறையை முற்றிலும் நீக்கிடவேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

  1. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் அனைத்தும் தமிழில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். அதில் ஆங்கிலத்திற்குத் தரப்படும் முதன்மை அகற்றப்பட வேண்டும். மேலும் மைய அரசின் போட்டித் தேர்வுகள் அனைத்தும் தமிழகத்தில் நடத்தப்படும் போது அனைத்துத் தேர்வுகளும் தமிழில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என இம்மாநாடு கோரிக்கை விடுக்கின்றது.

  1. சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழில் வழிபடுவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அவ்வழக்கில் உரிய சட்ட வல்லுநர்களின் வழி தமிழக அரசு மறுசீராய்வு மனுவை முன்னிட்டு உடனடியாக வழக்கை எடுத்து நடத்திட வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்துக் கோயில்களிலும் குடமுழுக்கைத் தமிழிலேயே நடத்திட வேண்டும். தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்திட வேண்டும் என்றும் தமிழ் அருச்சனைக்கான கட்டணத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்றும் தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. உலக அளவில் தமிழில் தொடர்பு கொள்ள ஒரே எழுத்து வடிவில் ஒருங்குகுறி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒருங்குகுறியில் கிரந்த எழுத்துக்களை நுழைக்க நடந்த முயற்சி நம் போராட்டங்களினால் முறியடிக்கப்பட்டுள்ளது. எனினும் கிரந்த எழுத்துக்களை நுழைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அம்முயற்சியை முறியடித்திட நாம் விழிப்புடன் இருந்திட வேண்டும். ஒருங்குகுறியைத் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டரசு மாணவர்களுக்கு வழங்கி வரும் மடிகணினியில் தமிழ் மென்பொருள்களைப் பதிவேற்றி வழங்கிட வேண்டும். விக்கிபீடியா வலைத்தளத்தில் மிக அதிகமான செய்திகளை வழங்குவதில் இந்தி மொழிக்கு அடுத்த படியாகத் தமிழ் விளங்கி வருகிறது. இருப்பினும் தமிழ் இலக்கியம், கலை, பண்பாடு வரலாறு ஆகிய பல்வேறு துறைகளில் உள்ள ஏராளமான செய்திகள் விக்கிபீடியாவில் வலையேற்றம் செய்யப்பட வேண்டும். தவிரவும் இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் 75 விழுக்காட்டு கல்வெட்டுகள் தமிழில்தான் உள்ளன. அவற்றில் பெரும்பாலான கல்வெட்டுகள் அச்சேற்றப்படாமலும் மென்பொருள் ஆக்கப்படாமலும் உள்ளன. எனவே, இவற்றையெல்லாம் செயற்படுத்த தமிழக அரசு மென்பொருள் ஆணையம் ஒன்றை அமைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. தமிழர்கள் அனைவரும் தம்மைத் தமிழராகக் காட்டும் வண்ணம் தமக்கும் தம் பிள்ளைகளுக்கும் தமிழ்ப்பெயரையே சூட்ட வேண்டும் என்றும், தாம் நடத்தும் வணிக நிறுவனங்களின் பெயர்கள், பெயர்ப்பலகைகள் ஆகிய அனைத்தும் தமிழிலேயே விளங்கிடச் செய்ய வேண்டும் என்றும் தமிழர் தம் இல்லச்சடங்குகள் அனைத்தும் தமிழிலேயே நடைபெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது. மேலும் தமிழக அரசுப் பேருந்துகளில் வாகன எண்களை ப்பேருந்துகளின் இருபக்கங்களிலும் தமிழிலேயே எழுத வேண்டும்; தவிரவும் தமிழக அரசு அலுவலகங்கள் பள்ளிகள் போன்ற அரசு நிறுவனங்களில் தமிழ்ச்செய்தித் தாள்களையே வாங்கிட வேண்டும் என்றும் அரசு ஆணையிடுமாறு தமிழக அரசை இம்மாநாடு வேண்டுகிறது.

  1. மொழி, இனம், நாடு எனப் பல வழிகளிலும் நமது உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. உலகமயம், தனியார்மயம், தாராளமயம் மூலம் நமது அடையாளங்கள் சிதைக்கப்பட்டு வருகின்றன. இது தமிழ்த்தேசிய இனத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள அனைத்துத் தேசிய இனங்களுக்கும் நெருக்கடியான காலக்கட்டமாக உள்ளது. நமது தாயக விடியலுக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் அதே வேளையில் குறைந்தஅளவுத் திட்டத்தின் அடிப்படையில் குறிப்பான போராட்டங்களை ஏனைய தேசிய இனங்களோடு இணைந்து முன்னெடுக்கும் வாய்ப்பு இப்பொழுது கனிந்து வருகிறது. எனவே, வரலாற்றில் வழங்கப்பட்ட இவ்வரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி அனைத்து வகையான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்குமாறு தமிழ்மொழியுரிமைக் கூட்டியக்கம் தமிழக மக்களை அறைகூவி அழைக்கிறது.
இதழாளர் இராசன் தனசேகர்.
தொலைபேசி : +91 99628 28939