புலம் பெயர் உறவுகளுக்குப் பாராட்டுகள்!

 

புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதிப் பங்களிப்பில்

வவுனியா மன்னகுளம் ஊரில் கட்டப்பட்ட

வள்ளுவர் முன்பள்ளி

தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதிப் பங்களிப்பில் வவுனியா மன்னகுளம் ஊரில் கட்டப்பட்ட வள்ளுவர் முன்பள்ளி திறப்பு விழா நடைபெற்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்விழாவல கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,

தொடக்கநிலை கற்றல் தான் ஒரு மனிதனுக்கு எழுத்தறிவிக்கிறது. வாழ்வதற்கு மிகவும் தேவையான எழுத்தறிவையும், வாசிப்பறிவையும் கற்பிக்கும் முன்பள்ளி ஒன்று கடந்த இருபத்தைந்து வருடங்களாக இந்த ஊர்ப் பிள்ளைகளுக்கு இல்லாததன் குறையை, அதன் தேவையை உணர்ந்து புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் வழங்கிய நிதியில் இன்று இந்த வள்ளுவர் முன்பள்ளி மிளிர்கிறது.

இந்த ஊர்ப் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் மிகுந்த பரிவு கொண்டு வடமாகாண அவை உறுப்பினர் தியாகராசா அவர்கள் பிரான்சு டி.ஆர்.டி. வானொலியிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய அந்த வானொலியின் நேயர்களான பிரான்சில் வசிக்கும் அந்தோணி அம்மா குடும்பத்தினரும், இலண்டனில் வசிக்கும் செயா, மலேசியாவில் வசிக்கும் திருமதி உசாராணி பூபாலன் அவர்களும் இந்த முன்பள்ளிக்கான நிதியுதவியை வழங்கியுள்ளனர்.

குறித்த உறவுகளுக்கும், பிரான்சு டி.ஆர்.டி.(ரி.ஆர்.ரி.) வானொலியின் பணிப்பாளர் சிறீரங்கன் அவர்களுக்கும், வானொலியின் சமுகப்பணிக்கு பொறுப்பான திரவியநாதன் ஐயா அவர்களுக்கும் மன்னகுளம் ஊர் முன்பள்ளி பிள்ளைகள் சார்பாகவும், ஊர் மக்கள் சார்பாகவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினராகிய நாங்கள் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துகொள்ளுகின்றோம்.

போரால் பாதிக்கப்பட்டு நலிவுற்றுள்ள மக்களுக்கு, ஒரு வானொலி சேவையூடாக உதவ முடியும் என்பதற்கு ஒரு முன்மாதிரியாக நேயர்களது பல உதவித்திட்டங்கள் மூலம் இவர்கள் மெய்ப்பித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் இன்னும் எத்தனையோ பல தமிழ்ச் சிற்றூர்கள் கல்வி, நலவாழ்வு, மருத்துவம், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து, வாழ்விடங்கள் என்று அடிப்படை வசதிகள் இன்றி, அரசியல் பழிவாங்கல் காரணமாக வளர்ச்சி இன்றி காணப்படுகின்றன. தரையிலும் மர நிழல்களுக்கு கீழேயும் அமர்ந்து மாணவர்கள் தொடக்கக் கல்வியை கற்கும் அவலம் இன்றும் தொடர்கிறது.

இந்த அவல வாழ்வைப் போக்க, புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் இன்று போல் என்றும் உதவ வேண்டும். அங்கு நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், துன்பங்கள், துயரங்கள் பற்றி நாம் நன்கு உணர்ந்துள்ளோம். அத்தகைய இடர்நிலை சூழல்களிலும் நீங்கள் எமது மக்களின் தன்மதிப்பு வாழ்வுக்காக, தற்சார்புப் பொருளாதார மேம்பாட்டுக்காக உங்களை வருத்தி, தொடர்ந்தும் உதவுவதையிட்டு எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து இன்றும் கூட இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் தவிக்கும், வறுமையின் கோரப்பிடிக்குள் அகப்பட்டுள்ள எமது மக்களை நாங்களும் நீங்களுமாக சேர்ந்து வாழ வைப்போம். நம்மால் முடிந்தவரை அந்த மக்களின் மறுவாழ்வுக்காக உழைப்போம் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 06.07.2014 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், வடமாகாண நல்வாழ்வுத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கம், மாகாணசபை உறுப்பினர் தியாகராசா, முன்பள்ளி உதவிப்பணிப்பாளர் இராசேசுவரன், மேம்பாட்டு அலுவலர் திருவரங்கன் ஆகியோரும், மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர் மேம்பாட்டுச்சங்கத்தின் சார்பாளர்கள், ஊர் மக்கள் என அனைத்துத் தரப்பாரும் கலந்துகொண்டனர்.

வள்ளுவர் முன்பள்ளிக் கட்டடத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், நல்வாழ்வுத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கமும் இணைந்து திறந்து வைத்தனர்.

டி.ஆர்.டி.(ரி.ஆர்.ரி.) வானொலியின் சமுகப்பணியின் இணைப்பாளர் திருமதி அருந்ததி சிவசக்தி ஆனந்தனால் இந்த வள்ளுவர் முன்பள்ளி வேலைத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

(படங்களைச் சொடுக்கிப் பாருங்கள்)

 

தரவு : எங்கள் ஈழம் இது தமிழீழம்