vaanalai-valarthamizh02

  துபாயில் வானலை வளர்தமிழ், தமிழ்த்தேர் ஆகியன சார்பில் தமிழ்ச்சான்றோருக்குப் பாராட்டும்.. கவிதையும் கற்பனையும் தலைப்பில் கவியரங்கமும் கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய நேரம்+நிருவாகம்=வெற்றி நூல் வெளியீடும் துபாய் கராமா சிவஃச்டார் பவனில் தை 17, 2046 / 30.01.2015 வெள்ளிக்கிழமை காலை 11.00மணிக்கு நடைபெற்றது.

  செல்வி ஆனிசாவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. கவிஞர் சியாவுத்தீன் இயக்குநர் சிகரம் அமரர் கே. பாலச்சந்தர் அவர்களுக்கும் கவிஞர் அதிரை கலாம் கல்வியாளர், தொழிலதிபர் துபாய் ஈடிஏ அசுகான் ஃச்டார் குழும நிறுவனர் அமரர் பி.எசு. அப்துர் இரகுமான் அவர்களுக்கும் கவிதாஞ்சலி வழங்கினர்.

  கவிஞர் அதிரை கலாம் கவிதையும் கற்பனையும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்திற்குத் தலைமை தாங்கினார். கவிஞர்கள் தஞ்சாவூரான், செயராமன் ஆனந்தி, யமுனாலிங்கம், காவிரிமைந்தன், நர்கீசு பானு, சியாவுத்தீன், நாகினி கருப்பசாமி, கிருசுஇராமதாசு, அப்துல்லா, ஆகியோர் கவிதை பாடினார்கள்.

  விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தங்குதடையில்லாத தமிழால் கவிதாயினி சுவேதா கோபால் வரவேற்றார். நிகழ்ச்சியினை தனக்கே உரித்தான பாணியில் திண்டுக்கல் சமால் தொகுத்துரைத்தார்.

  விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற பெருமக்களைச் சிறப்பித்தனர்.   பாரதி காவலர் கே.இராமமூர்த்தி அவர்களுக்குக் காவிரிமைந்தன் பொன்னாடை அணிவிக்க தஞ்சாவூரான் நினைவுப்பரிசினை வழங்கினார். அடுத்து திரு.பாலாசி பார்த்தசாரதி அவர்களுக்குத் தமிழ்த்தேர் பொறுப்பாசிரியர் சியாவுத்தீன் பொன்னாடை அணிவிக்க கு. இரமணி நினைவுப்பரிசினை வழங்கினார். முனைவர் மன்சூர் அவர்களுக்கு நலவாழ்வு(health) கணேசன் பொன்னாடை அணிவிக்க நினைவுப்பரிசினை அப்துல்லா வழங்கினார். கவிஞர் தமிழ்த்தேனீ அவர்களுக்கு மயிலாடுதுறை அயூப் பொன்னாடை அணிவிக்க பாசா நினைவுப் பரிசு வழங்கினார்.

  விழாவில் கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய நேரம்+நிருவாகம்=வெற்றி நூல் வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற பாரதி காவலர் கே. இராமமூர்த்தி முதல் படியை வெளியிட திருமதி.மீனா பத்மநாபன் பெற்றுக் கொண்டார். இரண்டாம் படியை பாலாசி பார்த்தசாரதி வெளியிட திருமதி. விசாலாட்சி மணி பெற்றுக் கொண்டார். மூன்றாம்படியை திருச்சி சமால் முகமது கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் முனைவர் மன்சூர் வெளியிட திருமதி.நர்கீசுபானு பெற்றுக் கொண்டார். நான்காம் படியை கவிஞர் தமிழ்த்தேனீ வெளியிட திருமதி.மைமூன் ஆசியா பெற்றுக்கொண்டார். திருமதிஇரமா மலர்வண்ணன் நூல் மதிப்பீட்டினைத் தெளிவுற வழங்கினார்.

  மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருமதி.மைமூன் ஆசியா அவர்களுக்கு திருமதி.நர்கீசு பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்தார். தமிழ்த்தேரில் முதல் ஐந்து ஆண்டுகளில் இடம்பெற்ற தலைப்புகளை வைத்துப் புதுமையாகக் கவிதை வழங்கிய சியாவுத்தீன், நர்கீசு, ஆனிசா ஆகியோரின் கவிதைகள் அனைவரின் கவனத்தை ஈர்த்தன.

  ‘கவிதையும் கற்பனையும்’ தமிழ்த்தேரின் 85 ஆவது சிறப்பிதழாக வெளியிடப்பட்டது. பாரதி காவலர் கே.இராமமூர்த்தி முதல் இதழை வெளியிட தமிழ்நேசர் அப்துல்லா பெற்றுக்கொண்டார். இரண்டாம் இதழை பாலாஜி பார்த்தசாரதி அவர்கள் வெளியிட முனீர் பெற்றுக்கொண்டார். மூன்றாம் இதழை முனைவர் மன்சூர் வெளியிட சபீர் பெற்றுக் கொண்டார்.

  பாரதி காவலர் கே.இராமமூர்த்தி அவர்கள் தனது 80 ஆவது அகவையிலும் எழுச்சிமிகு உரையாற்றிப் பாரதியின் கவிதை வரிகளை எடுத்துரைத்த விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தனது பட்டறிவுமிக்க பேச்சாற்றலால் அவையைக் கவர்ந்ததுடன் கரவொலியும் சிரிப்பொலியும் ஒருசேர மகிழ்வித்தார் என்றால் அது மிகையில்லை.

  அடுத்து வந்த திரு.பாலாசி பார்த்தசாரதி அவர்கள் நேர நிருவாகம் பற்றிய காவிரிமைந்தனின் நூல்பற்றி அலசி ஆய்வுரை தந்தார். கவியரசு கண்ணதாசனை நெஞ்சில் சுமந்து வாழும் காவிரிமைந்தன் இந்த நூலில் கண்ணதாசனை இன்னும் கொஞ்சம் அதிகம் மேற்கோள் காட்டியிருப்பார் என்று எதிர்பார்த்தேன்.. எனினும் அடுத்துவரும் நூல்களில் மனித மனத்தில் ஏற்படும் சஞ்சலங்கள், குழப்பங்கள் போன்றவற்றிலிருந்து வெளிவரக் கண்ணதாசன் பாடல்களோடு அடுத்த படைப்பினை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

  நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிஞர், நடிகர் கிருட்டிணமாச்சாரி எனும் தமிழ்த்தேனீ நேரம் அமைகிற விதம்.. நாமெல்லாம் கூடியிருக்கின்ற வண்ணம் என பேச்சினைத் தொடங்கி நடிப்பு பற்றிச் சிறப்பாக எடுத்துரைத்தார். தனது அமெரிக்கப் பயணத்தின் இடையே துபாய்க்கு அழைத்து அங்குள்ளோரைச் சந்திக்கின்ற அரிய வாய்ப்பினை வழங்கியதற்குத் தமிழ்த்தேருக்கு நன்றி தெரிவித்தார்.

  நன்கு அறிமுகமான விருந்தினரான.பேராசிரியர் முனைவர் தமிழ்த்தேர் நிகழ்ச்சியில் பேசும்போது புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதை வரிகளை எழிலுற எடுத்துரைத்து, பாட்டாளி மக்கள் தாங்கள் பெறுகின்ற கூழினையும் கஞ்சியையும் அதன்மூலம் பசியாறும் விதத்திற்கும் ஈடாகுமோ என்று நீலவான் ஆடைக்குள் ஒளிர்முகம் காட்டுகின்ற நிலா பற்றிய பாடல்தனை சுட்டிக்காட்டியவிதம் மெய்சிலிர்க்க வைத்தது.

  சிவ ஃச்டார் கோவிந்தராசு, கவிஞர் காவிரிமைந்தன், கவிஞர் சியாவுதீன், இலட்சுமி நாராயணன்,   குளச்சல் இப்ராகிம். திண்டுக்கல் சமால்,   ஆகியோர் இந்நிகழ்வின் ஏற்பாடுகளைச் சிறப்புற செய்திருந்தனர்.