இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 12 : தியாக வீரம்
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 11 : பெண்ணை நாட்டுப் பெருவீரர்- தொடர்ச்சி)
தமிழர் வீரம்
தியாக வீரம்
9. தியாகத்தின் சிறப்பு
பிறர்பொருட்டு ஒருவன் தன்னலம் இழக்கும் தகைமையே தியாகம் ஆகும். தமிழகத்தில் என்றும் தியாகத்துக்குத் தனிப் பெருமையுண்டு. “தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்” என்று அத்தகையாரைத் தமிழ்நாடு போற்றுகின்றது. அன்னார் இருத்தலாலே இவ் வுலகம் உள்ளது என்று பாடினான் ஒரு பாண்டியன்.1
குமணனும் இளங்குமணனும்
கொங்குநாட்டின் பெருமையெல்லாம் தன் பெருமை யாக்கிக்கொண்டான் ஒரு கொடைவீரன். அவன் முதிரம் என்னும் மலையை ஆண்ட குறுநில மன்னன். குமணன் என்னும் பெயருடைய அக் கோமகன், இரப்போர்க்கு இல்லை யென்று உரைக்கலாற்றாத இதயம் வாய்ந்தவன். அவ்னைத் தமிழகம் பாட்டாலும் உரையாலும் பாராட்டி மகிழ்ந்தது. அதனை அறிந்தான் அவன் தம்பியாகிய இளங்குமணன். அழுக்காறு அவன் மனத்தை அறுத்தது; ‘முன்னையோர் ஈட்டி வைத்த பணமும், முதிரமலையின் வளமும் கொள்ளை போகின்றனவே” என்று அவன் குமுறினான்; தமையனைக் கொல்வதற்குச் சூழ்ச்சி செய்யத் தொடங்கினான்.
அரசு துறந்த குமணன்
தம்பியின் வஞ்ச மனத்தை அறிந்தான் குமணன். தன்னுயிரை அவன் பெரிதாகக் கருதவில்லை; தம்பி நினைப்பதை முடிப்பானாயின் பாவமும் பழியும் வந்து அவனைப் பற்றுமே என்று பரிவுற்றான்; அதற்கு இடங்கொடாது ஒரு நள்ளிரவில் எவரும் அறியாமல் மாளிகையை விட்டகன்றான்.
கொங்கு நாட்டில் பொங்கிய துயரம்
இரக்கமற்ற இளங்குமணன் அரசாளத் தலைப் பட்டான். குமணனை இழந்த முதிரமலைக் குடிகள் ஆறாத் துயரத்தில் ஆழ்ந்தார்கள்; தம்பியின் கொடுமையாலேயே தமையன் அரசு துறந்தான் என்று அறிந்து குமுறினார்கள். குடிகளின் மனப்பான்மையை இளங்குமணன் நன்கறிந்தான். அவன் மனத்தில் அமைதியில்லை. தமையன் உயிரோடிருக்கு மளவும் தன்னாட்சி நிலைபெறாது என்பதை அவன் உணர்ந்தான்; கடுமையான ஆணையொன்று பிறப்பித்தான்; “குமணன் தலையைக் கொய்து வருவார்க்குத் தக்க பரிசு கிடைக்கும்” என்று நாடெங்கும் பறையறிவித்தான்; அச் சொல் குடிகளின் செவியைச் சுட்டது. அவர் மனத்தை அறுத்தது. “குமணன் குலத்தில் இக் கொடும்பாவி பிறந்தானே” என்று அவர்கள் கண்ணீர் சொரிந்தார்கள். பிறந்த குடியின் பெருமையை அழித்து அதன் மணத்தை மாற்றிய பேதையை அமணன் என்று அழைத்தார்கள். முதிரமலையைப் புலிகிடந்த புதர் எனக் கருதி விலகினர் புலவர் எல்லாம்.
காடும் குமணனும்
நாடு துறந்த குமணன் தன்னந் தனியனாய்க் காட்டினுள்ளே புகுந்தான்; காயும் கனியும் அயின்றான்; கானகப் புல்லிலே துயின்றான்; வெம்மை நீத்த விலங்குகளோடு உறவு கொண்டு இன்புற்று வாழ்ந்தான்.
குமணனும் கவிஞரும்
அந்நிலையில் அவனைத் தேடிக் கண்டு கொண்டார் ஒரு புலவர்; ‘கலி தீர்ந்தது’ என்றெண்ணிக் கவி பாடத் தொடங்கினார்; “ஐயனே! வறுமை நோய் என்னை வாட்டுகின்றது; பாடுபார்க்கும் மனையாள் உண்ண ஒரு பிடி சோறும் இன்றி வாடுகின்றாள். தாய்ப் பால் காணாத தனி இளம் பாலன் அழுது சோர்கின்றான். குழந்தை தாய் முகம் நோக்கினான்; தாய் என் முகம் நோக்கினாள்; யான் உன் முகம் நோக்கி வந்தடைந்தேன் ஐயா” என்று உருக்கமாக எடுத்துரைத்தார்.2
தலைக் கொடை
அவர் பாட்டைக் கேட்டபோது குமணனது உள்ளம் அனலிடைப்பட்ட மெழுகுபோல் உருகிற்று. அவன் கண்களில் கண்ணீர் பொங்கிற்று. வாடி நின்ற வறிஞனை நோக்கி,
“அந்தநாள் வந்திலை அருந்தமிழ்ப் புலவோய்
இந்தநாள் வந்துநீ நொந்தெனை அடைந்தாய்.“
“உனது வறுமையை ஏழையேன் எவ்வாறு தீர்ப்பேன்” என்று தயங்கி நின்றான். அப்போது மின்னொளி போன்று அவனுள்ளத்தில் ஓர் எண்ணம் பிறந்தது; முகம் மலர்ந்தது. தன் உடைவாளை அவன் எடுத்தான்; புலவர் கையிலே கொடுத்தான். திகைத்து நின்ற அவ்வறிஞரை நோக்கி, “ஐயா! இவ்வாளால் என் தலையை அரிந்து, என் தம்பியிடம் கொண்டு செல்க. இத் தலைக்கு அங்கே விலையுண்டு. தம்பி தரும் பொருளால் உமது வறுமை நோய் தீரும்” என்று பரிவுடன் கூறினான்.
தியாகத்தின் திறம்
அவ்வுரை கேட்ட புலவர் திடுக்கிட்டார்; நடுக்க முற்றார்; வெறி பிடித்தவர்போல் வாளும் கையுமாய் விரைந்து ஓடினார்; முதிரமலையில் இளங்குமணனைக் கண்டார்; கல்லும் புல்லும் கரைந்துருகக் கதறினார்; “இளங்குமணா! உன் தமையனைக் காட்டிலே கண்டேன்; என் பாட்டைச் சொன்னேன். அவன் முகம் வாடிற்று; பின்பு மலர்ந்தது; இந்த வாளை எடுத்தான்; என் கையில் கொடுத்தான்; ‘தலையை அறுத்து என் தம்பியிடம் கொண்டு செல்க’ என்றான். ஐயோ! தன் தலையையும் கொடுத்துத் தமிழறிந்த இவ்வேழையை ஆதரிக்க இசைந்த வள்ளலை என்ன சொல்லி வாழ்த்துவேன்!” என்று குமணன் இருந்த திசை நோக்கித் தொழுதார்.3
தியாகத்தின் வெற்றி
அவர் பேசிய ஆர்வமொழியில், கையில் அமைந்த உடைவாளும் இளங்குமணனது உள்ளத்தை உருக்கி விட்டன. உடன்பிறப்பென்னும் பாசம், பகைமையை வென்றது. நேசத்தால் எழுந்த சோகம் நெஞ்சை அடைத்தது. உடனே அவன் அரியாசனத்தை விட்டெழுந்தான்; புலவரைத் துணைக்கொண்டு கானகம் புகுந்தான்; குமணனைக் கண்டு அடிபணிந்தான். பிழை பொறுக்குமாறு வேண்டினான்; முதிர மலைக்கு அழைத்துவந்து முன்போல அரசாள வைத்தான். குமணன் அளித்த தலைக்கொடை ‘விழுமிய கொடை’ என்று தமிழகம் இன்றளவும் கொண்டாடுகின்றது.
பாஞ்சால வீரர்
பாஞ்சாலங்குறிச்சி பாண்டி நாட்டுப் பாளையங் களுள் ஒன்று. அங்குப் பாளையக்காரனாய் விளங்கிய வீரன் கட்டப்பொம்மன். அவன் தம்பியும் ஒரு சிறந்த வீரன். அவன் மூங்கையனாதலால் ஊமைத் துரை யென்று பெயர் பெற்றான். பாஞ்சாலப் படைவீரருக்கு அவன் கண்கண்ட தெய்வம்; வெள்ளையரிடம் அவன் கொண்டிருந்த வெறுப்புக்கு ஓர் எல்லையில்லை.
ஊமைத்துரை
ஆங்கிலப் படையைத் துச்சமாகக் கருதினான் ஊமைத்துரை. அவன் ஐந்தாறு துரும்புகளை இடக்கையில் எடுத்து வைத்து அவற்றை வலக்கையால் அடித்து வாயால் ஊதிவிடுவானாம். அதன் கருத்து, ‘ஆங்கிலத் துருப்புகளை தாக்கிப் பறக்க அடிக்கவேண்டும்’ என்பது. அவ் வாணையை உடனே பாஞ்சாலச் சேனை நிறைவேற்றப் புறப்படும்; எதிர்நின்ற ஆங்கிலப் பகைவரை அறைந்து நொறுக்கும்.
ஒரு போர்
ஒரு நாள் பாஞ்சாலப் படைக்கும் ஆங்கிலப் படைக்கும் கடுமையான போர் நிகழ்ந்தது. ஊமைத்துரை முன்னணியில் நின்று ஊக்கமாகப் பொருதான். அந்திமாலை வந்துற்றது. பாஞ்சாலப் படை பின்னிட்டது. அப்போது கதிரவன் மறைந்தான். வெற்றி பெற்ற வெள்ளையர் சேனை பாசறைக்குத் திரும்பியது.
ஒரு வீரத் தியாகம்
போர்க்களத்தின் அருகே ஒரு சிற்றூர் இருந்தது. அவ்வூர் மறவர் சிலர் பாஞ்சாலப் படையிற் சேர்ந்திருந்தார்கள். அவர் திரும்பி வரக் காணாமையால் கவலையுற்ற தாய்மார்கள் கைவிளக்கெடுத்துக் களத்தை நாடினர். நெடுநேரம் தேடிக் குற்றுயிராய்க் கிடந்த தன் மகனைக் கண்டாள் ஒரு தாய்; அவனை எடுத்து மடியிலே சாய்த்துத் தண்ணீர் தெளித்தாள். மைந்தன் கண் விழித்து நோக்கினான். அவனை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முயன்றாள் தாய்; அப்போது அவ்வீரன், “தாயே! என்னை இங்கேயே விட்டு விடு! அதோ, நம் துரை அடிபட்டுக் கிடக்கின்றார்; அவரை எடுத்துச் சென்று காப்பாற்று. நம்மெல்லோருக்கும் நலம் உண்டு” என்று கைகூப்பித் தொழுதான்.4
தியாகத் தாயும் சேயும்
அது கேட்ட வீரத்தாய் முகமலர்ந்தாள்; ஊக்கமுற்று எழுந்தாள்; சிறிது தூரத்தில் ஊமைத்துரை குருதியாடிக் கிடக்கக் கண்டாள். தாய்மார் எல்லாரும் சேர்ந்து அவனைத் தூக்கியெடுத்து ஒரு குடிசையிற் கொண்டு சேர்த்தார்கள். இரவு முற்றும் கண்விழித்து மருந்து கொடுத்துப் பிழைக்க வைத்தார்கள். பொழுது விடிந்தது. “வீரத்தாய் போர்க்களம் சென்றாள்; தன் மைந்தன் – தியாக வீரன் – மடிந்து கிடக்கக் கண்டாள்; பெருமிதம் கொண்டாள். தன்னுயிரின் மேல் வைத்த பாசம் துறந்து, தலைவனுயிரைக் காப்பாற்ற விரும்பி, பெற்ற தாயை அன்பால் அனுப்பிய மைந்தனது தியாகம் பெரிதோ? அன்றிப் பிள்ளையினும் தள்ளரிய பாசம் தவிர்த்து, அவனைப் போர்க்களத்தில் இறக்கவிட்டுத் தலைவனுயிரைக் காப்பாற்றிய தாயின் தியாகம் பெரிதோ? என்று வியந்து வினவினர் வீரரெல்லாம்.
ஆன்ம வீரம்
செம்மனம் உடையாரிடம் சிறந்ததோர் ஆற்றல் உண்டு. அது கண்ணுக்குப் புலனாவதில்லை. ஆயினும் அதற்கு மாறாக மன்னனது மறப்படையும் நிற்கமாட்டாது. ஆன்ம வீரம் என்பது அதுவே. அத்தகைய திறம் வாய்ந்தோர் பழந்தமிழ் நாட்டில் பலர் இருந்தனர். அவருள் ஒருவர் திருநாவுக்கரசர். மகேந்திரன் என்ற பல்லவ மன்னன் காலத்தில் வாழ்ந்த ஆன்ம வீரர் அவர். மத வேற்றுமை காரணமாக அவரை ஒறுக்கக் கருதினான், அம்மன்னன்; அவரைக் கொண்டு வரும்படி ஆணையிட்டான். அப் பணி தலைமேற் கொண்ட அமைச்சன் படைத்துணையோடு எழுந்தான்; திருநாவுக்கரசரிடம் போந்தான்; மன்னன் ஆணையைத் தெரிவித்தான். அப்போது அவரது ஆன்ம வீரம் பொங்கி எழுந்தது. “நாம் ஆர்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்ற வீரமொழி பிறந்தது.
வெம்மையை வென்ற செம்மை
அவர் அறைந்த மாற்றம் கேட்ட மன்னன் சீற்ற முற்றான்; வெம்மை சான்ற ஓர் யானையை ஏவி அவரைக் கொல்லப் பணிந்தான். அந்த யானை கூடத்தைக் குத்தி ஒரு குன்றமெனப் புறப்பட்டது. கொம்பன் தம்மை நோக்கி வரக் கண்டார் நாவரசர், சிறிதும் அஞ்சினாரல்லர்; அயர்ந்தாரல்லர்; வெஞ்சின வேழத்தை நோக்கி, “அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை” என்று செஞ்சொற் பாமாலை பாடி நின்றார். வீறுடன் வந்த யானை அடங்கிற்று. ஆன்ம வீரரை வலம் வந்து வணங்கிற்று. வந்த வழியே திரும்பிப் போயிற்று. யானையின் வெம்மையைத் தமது மனச் செம்மையால் வென்றார் திருநாவுக்கரசர் என்று தமிழகம் வியந்து புகழ்ந்தது. அவர் பாடிய வீரப்பாட்டு எங்கும் விரைந்து பரவிற்று. தமிழ்நாட்டுக்குப் புத்துயிர் அளித்தது. மறப்படையை அறப்படையால் வெல்லலாகும் என்னும் கொள்கையைத் திருநாவுக்கரசர் தம் செய்கையால் மெய்ப்பித்தார்.
(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை), தமிழர் வீரம்
++++++++++++++++++++++++
குறிப்பு
1.உண்டால் அம்மஇவ் வுலகம்.
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.” – இளம் பெருவழுதி பாடியது. புறநானூறு 182
2. புறநானூறு, 164.
3. புறநானூறு, 155. பெருந்தலைச் சாத்தனார் பாட்டு.
4. Reminiscences of the Dumb Brother
“I have already” says General Welsh, “rnade mention, but i cannot close this account of horrors. Without a few words, in memory of one of the most extra-ordinary mortals I ever knew. A near relation of Kattabomma Nayaka, who was both deaf and dumb, was well known by the English under the appellation of dumby or dumb brother. “On the 24th May when the fort was wrenched from them and the whole army were retreating, pursued by our cavalry, poor Umai fell covered with wounds, near a small village, about three miles from Panjalamkurichi. As soon as our troops had returned from the pursuit. Colonel Agnew instantly ordered the Ettiapureans to follow them till night, offering rewards for any men of consequence, dead or alive. Our allies, consequently set out with great glee, somewhat late in the evening; and in the meantime an appearance of quiet induced some women of the village to proceed to the field of carnage, in the hope of finding some of the sufferers capable of receiving succour. Amongst the heaps of slain, they discovered the son of one of the party still breathing, and after weeping over him they began to raise him up, when exerting his little remaining strength, he exclaimed, “O ! Mother, let me die, but try to save the life of Swamy, who lies wounded near me.” The word he used fully justifies my assertion of their adoration, as its literal meaning is a deity. The woman, animated by the same feelings, immediately obeyed her dying son, and speedily found Umai weltering in his blood, but still alive; and these extraordinary matrons immediately lifted and carried him to the mother’s house.” – (History of Tinnevelly, Dr. Caldwell – p. 206.}
Leave a Reply