(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 14 : வீர மாதர்-தொடர்ச்சி)

வீரரை வியந்து போற்றிய நாடு தமிழ்நாடு. போர் முனையில் விழுப்புண் பட்டு விழுந்தவர்க்கும், கடும்புலியைத் தாக்கி வென்ற காளையர்க்கும், இன்னோரன்ன வீரம் விளைத்தவர்க்கும் வீரக்கல் நாட்டிச் சிறப்பைச் செய்தனர் தமிழ்நாட்டார்.

நடுகல்
வீரருக்கு நாட்டுதற்கேற்ற கல்லை முதலில் தேர்ந்தெடுப்பர்; எடுத்த கல்லைப் புனித நீராட்டுவர்; வீரனுடைய பீடும் பேரும் அதில் எழுதுவர்; உரிய இடத்தில் அதனை நாட்டுவர்; மாலையும் மயிற் பீலியும் சூட்டுவர். இவ்வாறு நட்ட கல்லைத் தெய்வமாகக் கொண்டு வணங்குதலும் உண்டு.[1]

பத்தினிக் கோயில்
மதுரை மாநகரில் கற்பென்னும் திண்மையால் வீரம் விளைத்தாள் கண்ணகி. அப்பெருமாட்டியை “மாபெரும் பத்தினி” என்றும், “வீர பத்தினி” என்றும் வியந்து புகழ்ந்தது தமிழுலகம்.[2] சேர நாட்டை யாண்ட செங்குட்டுவன் என்னும் வீர மன்னன் அதையறிந்து விம்மிதமுற்றான்; வீரருக்குரிய சிறப்புகளை அக் கற்பரசிக்குச் செய்ய முற்பட்டான்;[3] மலைகளில் உயர்ந்த இமய மலையிற் சிலையெடுத்தான்; நதிகளிற் சிறந்த கங்கையில் நீராட்டினான்; பத்தினியின் வடிவத்தை அச்சிலையில் வடித்தான்; வஞ்சி மாநகரில் கட்டிய கோட்டத்தில் அப் படிமத்தை நிறுவினான். பத்தினிக் கோட்டம் என்று பெயர் பெற்ற அந் நிலையம் கற்புக் கோயிலாகக் காட்சியளித்தது.

உறந்தைச் சோழன்
உள்ளத்தில் உறைத்தெழுந்த உயரிய கொள்கையால் உண்ணாவிரதம் பூண்டு உயிர் துறந்த உரவோரும் ஆன்ம வீரராகத் தமிழ்நாட்டிற் போற்றப்பட்டார்கள். அன்னவருள் ஒருவன் கோப்பெருஞ் சோழன். உறந்தை என்னும் தலைநகரில் சிறந்து விளங்கினான் அம் மன்னன். சான்றோர் பலர் அவன் நண்பராக அமைந்தனர்.[4]

உண்ணா நோன்பு
செல்வமும் வீரமும் சீலமும் உடையவனாயினும் தன் மக்களின் தொல்லையால் அவன் மனம் மிக்க துன்பம் அடைந்தது. தன் கருத்துக்கு மாறாக நடந்த மக்களை ஒறுத்துத் திருத்தலாம் என்றெண்ணினான் அவன்; ஆனால்
“ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றும் துணையும் புகழ்”
என்ற பொய்யா மொழியை நினைத்து சீற்றம் தீர்ந்தான்; உலக வாழ்வை வெறுத்தான். உறந்தையை விட்டு அகன்றான்; வடக்கு நோக்கி நடந்தான்; ஓர் ஆற்றின் இடைக் குறையில் அமர்ந்தான்; உண்ணா நோன்பிருந்தான்.
அவன் வீரத்தோள் மெலிந்தது; பொன்னிற மேனி பொலிவிழந்தது. பசிப்பிணியைப் பொறுத்துப் புன்னகை பூத்த முகத்தினனாய் விளங்கிய புரவலன் நிலை கண்டு மனம் உருகினர் சான்றோர். சில நாளில் அவன் நல்லுயிர் உடலை விட்டுப் பிரிந்தது.[5] அப்போது உடனிருந்த அன்பர்கள் அந்த ஆன்ம வீரனுக்குக் கல் நாட்டினர்; கண்ணீர் வடித்தனர்; கல்லிலே நின்ற காவலனைத் தமிழ்ச் சொல்மாலை அணிந்து போற்றினர். அந் நடுகல்லைக் கண்டார் ஒரு கவிஞர்; அடக்க முடியாத துயரத்தால் வாய்விட்டு அரற்றினார். “ஐயோ, நடுகல் ஆயினான் நல்லரசன்! கவிஞரை ஆதரித்த காவலன்! கூத்தரைக் கொண்டாடிய கொற்றவன்! அறநெறி வழுவாத புரவலன்! ஆன்றோரிடம் அன்பு வாய்ந்தவன்! மெல்லிய லாரிடம் மென்மையுடையவன்! வல்லியலாரிடம் வன்மை யுடையவன்! அறவோர்க்குப் புகலிடம்! இத்தகைய மேதையின் உயிரைக் கவர்ந்தானே கண்ணற்ற கூற்றுவன்! மாசற்ற புலவீர்! அவனை ஏசுவோம், வாரீர்!” என்று தம் ஆற்றாமையை அறிவித்தார் கவிஞர்.[6]

வேங்கையைக் கொன்ற வீரன்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே பாலாற்றங்கரையில் ஒரு பெரும்புலியைக் கொன்ற வீரன் இன்றும் கல்லிலே நின்று காட்சி தருகின்றான். தலையிற் குட்டையும் இடையில் ஆடையும் கட்டிய ஆண் மகன் புலியோடு போர் செய்யும் பான்மையில் அமைந்துள்ளது அவ்வடிவம். புலி, முன்னங் கால்களைத் தூக்கி அவனைத் தாக்குகின்றது; இடக் கையைப் பற்றிக் கடிக்கின்றது; அந்த நிலையில் அவனது வலக்கையில் அமைந்த வாள் அதன் வயிற்றினூடே பாய்கின்றது. இவ்வாறு வாளாண்மையால் வேங்கையைக் கொன்ற வீரனுக்கு வீரக்கல் நாட்டினர் தமிழர்.[7]

ஆநிரை மீட்ட வீரர்
இன்னும், வட ஆர்க்காட்டில் உள்ள ஆம்பூரில் அகளங்கன் என்பவன் ஒரு தலைவனாக விளங்கினான். ஒரு நாள் நுளம்பைப் பல்லவர் படை ஆம்பூரிற் புகுந்தது; பசு நிரைகளைக் கவர்ந்தது. அதைக் கண்டனர் இருவர். ஒருவன் அகளங்கன் மைந்தன்; இன்னொருவன் அவன் மருகன். இருவரும் போந்து மாற்றாரைத் தடுத்தனர்; வெம்போர் தொடுத்தனர்; பசுக்களை மீட்டனர்; ஆயினும் போர் முனையில் விழுந்து பட்டனர். உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட இருவரும் வீரக்கல்லில் இன்றும் விளங்குகின்றார் கள். வலக்கையில் வாளும், இடக்கையில் வில்லும் கொண்டு போர் புரியும்போது, மாற்றார் விடுத்த அம்புகள் அவர மார்பில் பாயும் பான்மையைக் காட்டுகிறது அக் கல். [8] இத்தகைய நடுகல் நூற்றுக்கணக்காகத் தமிழகத்தில் உண்டு.

வள்ளுவர் காட்டும் வீரக்கல்

வீரக்கல்லின் மாட்சியை ஒரு நாடகக் காட்சியாகக் காட்டினார் திருவள்ளுவர். ஒரு போர்க்களம், இரு திறத்தார் படையும் அணிவகுத்து நிற்கின்றது. அப்பொழுது முன்னணியில் உள்ள ஒரு வீரன் தற்று முன்னே வந்து, “மாற்றாரே!” என்று இடிபோல் முழங்குகின்றான். எல்லாக் கண்களும் அவனையே நோக்குகின்றன; எல்லாச் செவிகளும் அவன்பால் திரும்புகின்றன. அப்போது அவன் பேசுகின்றான்; “போர் புரியப் போந்த வீரரே! உமக்குக் காலில் நிற்க விருப்பமா? கல்லில் நிற்க விருப்பமா? காலில் நிற்க விரும்பினால் என் தலைவன் முன்னே நில்லாதீர்! இதற்கு முன் அவன் எதிர் நின்றோர் எல்லாம் இன்று கல்லிலே நிற்கின்றார்கள். ஆதலால் போர்க்களத்தை விட்டு ஓடுங்கள்” என்று உறுதியாகப் பேசுகின்றான். அவன் பேச்சின் பொருள் என்ன? “உயிரோடிருக்க ஆசைப் பட்டால் என் தலைவனை எதிர்க்க வேண்டா. போரில் அடிபட்டு, உயிர் விட்டு, வீரக் கல்லில் நிற்க ஆசைப்பட்டால் படிக்கலாம் எடுக்கலாம்; போர் தொடுக்கலாம்” என்பது அவன் கருத்து.(9) எனவே, புகழே உயிரினும் பெரிதெனக் கருதிய தமிழ் வீரர் எந்நாளும் படைக்குப் பிந்தியவரல்லர் என்பதும், அன்னாரைத் தமிழகம் போற்றிப் புகழ்ந்து வழிபட்டது என்பது நடுக்கல்லால் நன்கு விளங்கும்.

(தொடரும்)

++++++++++++++++++++++++

[1]. “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தல்” – தொல்காப்பியம்: புறத்திணை 5.
[2]. “ஆரஞர் உற்ற வீரபத்தினி” – சிலப்பதிகாரம்: பதிகம், 24.
[3]. தொல்காப்பியம் கூறுமாறே காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், வாழ்த்து என்பன சிலப்பதிகாரத்தில் ஐந்து காதைகளாக அமைந்துள்ளன. – வஞ்சிக்காண்டம், காதை 25-29
[4]. புறநானூறு, 218.
[5]. “……………..இமயத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே” – கோப்பெருஞ்சோழன் பாட்டு – புறநானூறு, 214.
[6]. “வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர் நனந்தலை உலகம் அரந்தை தூங்கக் கெடுவில் நல்லிசை சூடி நடுகல் ஆயினன் புரவலன் எனவே.”

  • பொத்தியார் பாட்டு: புறநானூறு, 221.
    [7]. EP. Ind, Vol, IV., P. 179.
    [8]. EP. Ind. Vol, IV., P. 180.
  • (9) “என்ஐமுன் நில்லன்மின் தெய்விர்; பலர்என்ஐ முன்நின்று கல்நின றவர்” – திருக்குறள், 771.