(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 15 : வீரக்கல் -தொடர்ச்சி)

வீரம் – மனத்திண்மை

போர்க்களத்தில் வெற்றி பெறுதற்குப் புயத்திண்மை மட்டும் போதாது; மனத்திண்மையும் வேண்டும். “வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்” என்பது வள்ளுவர் வாய்மொழி. மனத்திட்பமற்றவர் கோழைகள்; பேடிகள். ‘புலியடிக்கு முன்னே பேடியைக் கிலியடிக்கும்‘ என்பது இந் நாட்டுப் பழமொழி.

ஏனாதிப் பட்டம்
மனத்திட்பமுடைய படைத் தலைவரைத் தமிழ் மன்னர் சிறப்பித்தனர்; ஏனாதிப் பட்டமளித்துப் பாராட்டினர். அப் பட்டத்தின் சின்னம் ஓர் அழகிய மோதிரம். அதனை அரசன் கையால் அணியப்பெற்ற படைத்தலைவர் பெருமதிப்புக்கு உரியவராயினர்;
………..போர்க்கெல்லாம் தானாதி யாகிய தார்வேந்தன்
மோதிரம்சேர் ஏனாதிப் பட்டத் திவன்
[1]
என்று நாட்டார் ஏத்தும் நலம் பெற்றனர். சோழ மன்னரால் ஏனாதிப் பட்டம் வழங்கப் பெற்றவர் சோழிய ஏனாதி என்று சிறப்பிக்கப்பட்டார்கள். அன்னவருள் சிலர் பெருமையைப் பழங் கவிதையிற் காணலாம்.

திருக்கிள்ளி
திருக்கிள்ளி என்பவன் சோழிய ஏனாதிகளில் ஒருவன். அவன் சிறந்த போர்வீரன்; எப்பொழுதும் முன்னணியில் நின்று மாற்றாரைத் தாக்கும் மதுகையாளன். அவன் முகத்திலும் மெய்யிலும் கரடுமுரடான தழும்பு நிறைந்திருந்தது. அதனைப் பார்த்துப் பார்த்து அவ்வீரன் பெருமிதமுற்றான்; வீரப் புகழின் சின்னமாகக் கருதி விம்மிதமுற்றான்.

மாடலன் புகழுரை
திருக்கிள்ளியைக் கண்டு பரிசு பெறச் சென்றான் மாடலன் என்ற கவிஞன்; விழுப்புண்பட்ட திருமேனியை வியந்து நோக்கினான். ஒவ்வொரு தழும்பின் வரலாற்றையும் அக் கவிஞனிடம் எடுத்துரைத்தான் வீரன். அது கேட்ட மாடலன் திருக்கிள்ளியின் பெருமையைத் தெள்ளிதின் உணர்ந்தான்; ‘ஏனாதி நாதனே! உன் மேனி கண்ணுக்கினிய தன்று; ஆயினும் உன் புகழ் செவிக்கு இனிது. உன் முன்னே புறங்காட்டி ஓடிய பகைவரோ காட்சிக்கு இனியர்; ஆனால், மாட்சியற்றவர்” என்று மகிழ்ந்து பாடினான்.(2)


குட்டுவன்

குட்டுவன் என்பவன் மற்றொரு சோழிய ஏனாதி. அவனையும் புகழ்ந்து பாடினான் மாடலன். அப்போது குட்டுவன் முக மலர்ந்தான்; ஒரு யானையைத் தருவித்துப் பரிசளித்தான்; அவ்விலங்கைக் கண்டு அஞ்சிய மாடலன் மெல்லப் பின்வாங்கினான் “கொடுத்த பரிசு போதாது போலும்!” என்று எண்ணி அதனினும் பெரியதோர் யானையை வருவித்துக் கொடுத்தான் குட்டுவன். அந் நிலையில் அவன் கொடைத் திறத்தினை இகழ்வது போலப் புகழ்ந்து பாடினான் மாடலன்; “வயிறு காயும் புலவருக்கு இவன் களிறு தருவான். பசித்து வரும் கவிஞர்க்குப் பகடளிப்பான். ஆதலால் அறிஞரே! இவன் நாட்டை அணுகாதீர்” என்று நயம்பட உரைத்து நல்ல பரிசு பெற்றுச் சென்றான்.(3)

பாண்டிய ஏனாதி
மதுரை மாநகரில் மாறன் சடையன் என்ற பாண்டியன் அரசாண்டபோது எட்டி என்னும் வீரன் ஏனாதிப்பட்டம் பெற்று விளங்கினான். மாறனுக்கும் சேரனுக்கும் இடையே பகை மூண்டது. மலை நாட்டின்மீது படையெடுத்தான் மாறன். பாண்டிய ஏனாதி படைத் தலைமை பூண்டான்; மலைநாட்டு மன்னனது அருவியூர்க் கோட்டையை முற்றுகையிட்டான். பாண்டிப் பெரும்படை கோட்டையின் அகழியைத் தூர்த்தது; மதிலை இடித்துத் தகர்த்தது. அவ்வழியாக மண்டிற்று ஏனாதியின் சேனை. அதை மறித்துத் தடுத்து மானப் போர் புரிந்தனர் மலைநாட்டு வீரர். இரு திறத்தார் படையிலும் பொருது வீழ்ந்தவர் பலர். ஆயினும் ஏனாதியின் சேனை நெரித்தேறி வெற்றி பெற்றது; கோட்டையைக் கைப்பற்றியது. அன்று முன்னணியில் நின்று அரும்போர் புரிந்த வீரர் இருவர். அவர் எனாதியின் மாளிகைச் சேவகர்; ஒருவன் பெயர் சாத்தன்; மற்றவன் பெயர் சூரன். அவ் விருவரும் போர்க் களத்தில் விழுப்புண் பட்டு வீழ்ந்து மடிந்தனர். அவர் “கோட்டையை அழித்து நன்றுசெய்து பட்டார்” என்று பாராட்டினான் ஏனாதி நாதன்; உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட இருவர்க்கும் வீரக்கல் நாட்டிப் போற்றினான்.[4]
மாராயப் பட்டம்
மன்னர் வழங்கிய மற்றொரு பட்டம் மாராயம் என்பது. தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே இப் பட்டம் தமிழ்நாட்டில் வழங்கிற்று.[5] இராசராசசோழன் தஞ்சையில் அரசாண்டபோது மாராயப் பட்டம் பெற்ற சேனாதிபதி ஒருவன் சிறந்து விளங்கினான்; அவன் மலைநாட்டின்மேற் படையெடுத்தான்; சேர பாண்டியரைச் செருக்களத்தில் வென்றான்; விழிஞம் என்னும் துறைமுகத்தைக் கைக் கொண்டான். [6] கீர்த்தி வாய்ந்த அச் சேனாதிபதிக்குப் பஞ்சவன் மாராயன் என்ற பட்டம் வழங்கினான், வீர மன்னனாகிய இராசராசன்; அவனை வேங்கை நாட்டுக்கும் கங்க நாட்டுக்கும் மகா தண்ட நாயகனாக நியமித்தான். மாராயம் என்னும் பெயருடைய ஊர்கள் தமிழகத்தில் உண்டு. [7]


தளவாய் அரியநாதர்
அரியநாதர்
பேராண்மை வாய்ந்த படைத் தலைவருக்குத் தளவாய் என்ற பட்டமும் அளித்தனர் பெருவேந்தர். தமிழ் நாட்டில் நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே அப் பட்டம் பெற்று விளங்கியவர் அரியநாதர். காஞ்சி மாநகர்க்கு அருகேயுள்ள மெய்ப்பேடு என்னும் சிற்றூரில் ஓர் எளிய வேளாண் குடியிற் பிறந்தவர் அவர்; வாழ்தல் வேண்டி வடக்கே சென்றார்.
தளவாய்ப் பட்டம்
அந் நாளில் துங்கபத்திரை யாற்றங்கரையில் விசயநகரப் பேரரசு தலைசிறந்து விளங்கிற்று. அத் திருநகரில் கிரட்டிண தேவராயர் அரசு வீற்றிருந்தார். மதிநலம் வாய்ந்த அரியநாதர் அவர் அன்புக்கும் ஆதரவுக்கும் உரியராயினார்; படைக்கலப் பயிற்சி பெற்றார்; வட நாட்டினின்றும் போந்த பேர் பெற்ற மல்லன் ஒருவனை மற்போரில் வென்று மன்னன் மனத்தை மகிழ்வித்தார்; கணிதப் புலமையால் அவன் உள்ளம் கவர்ந்தார்; போர்க் களங்களில் கண்ணுங் கருத்துமாய் நின்று வெற்றி மேல் வெற்றி பெற்றார்; மன்னன் மனம் உவந்து அவர்க்குத் தளவாய்ப் பட்டமும் வரிசையும் அளித்தான்.

அரியநாதர் சேவை
விசயநகரப் பெருவேந்தரின் கருத்தாக்களாக நாயக்கர் தமிழ்நாட்டை ஆளத் தலைப்பட்டார்கள். அவர் ஆட்சிக்கு அடிப்படை கோலியவர் விசுவநாதர் என்னும் நாயக்கர். அவரும் அரியநாதரும் ஆருயிர் நண்பர்கள். இருவரும் தமிழ்நாட்டில் அரும்பணி ஆற்றினர்; குழப்பத்தை ஒழித்தனர்; வளப்பத்தைப் பெருக்கினர்; பாளையங்களை வகுத்தனர்; பயிர்த்தொழிலை வளர்த்தனர். அவர் முயற்சியால் அமைதியும் ஆக்கமும் பெற்றது தமிழகம்.

அரிய நாயகபுரம்

இத்தகைய நலம் புரிந்த அரியநாதருடைய கைவண்ணமும், மெய்வண்ணமும் இன்றும் தென்னாட்டில் விளங்கக் காணலாம். திருநெல்வேலிக்கு அருகே பொருனை யாற்றங்கரையில் அமைந்துள்ள அரிய நாயகபுரம் என்ற வளமார்ந்த சிற்றூர் அவர் பெயர் தாங்கி நிலவுகின்றது. மதுரையம்பதியில் குதிரையின்மீது அமர்ந்த கோலத்தில் அவர் உருவச்சிலை இன்றும் காட்சியளிக்கின்றது.

(தொடரும்)

++++++++++++++++++++++++

[1]. பெருந்தொகை, 455.
[2]. புறநானூறு, 167.
[3]. புறநானூறு, 394.
[4]. பாண்டியர் வரலாறு (நீலகண்ட சாத்திரியார்), ப.86.
[5]. தொல்காப்பியம், பொருள், 63.
[6]. முதல் இராசராசசோழன் (உலகநாத பிள்ளை). ப. 30.
[7]. கீழ்மாராயம் என்னும் ஊர் தஞ்சை நாட்டுக் கும்பகோண வட்டத்தில் உள்ளது