இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 03 – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 02 – தொடர்ச்சி)
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 03
- முன்னுரை
`இலக்கியம்’ என்பது தூய தமிழ்ச்சொல். இதனை ‘இலக்கு+இயம்’ எனப் பிரிக்கலாம். இது ‘குறிக்கோளை இயம்புவது’ என்னும் பொருளைத் தருவது. வாழ்வின் குறிக்கோளை வகையுற எடுத்து இயம்புவதே இலக்கியமாகும். ஆகவே, இலக்கியத்தின் துணை கொண்டு அவ் விலக்கியத்திற்குரிய மக்களின் வாழ்வியலை அறிதல் கூடும். தமிழிலக்கியத்தின் துணை கொண்டு தமிழ் மக்களின் வாழ்வியலை அறியலாம்.
தமிழ் மக்களின் வரலாற்றை அறிவதற்குத் துணைபுரிவனவற்றுள் முதன்மை இடம் பெறுவதும் தமிழ் இலக்கியமேயாகும். தமிழ் இலக்கியம் தொன்மை நலம் சான்றது. அதன் தோற்றுக் காலம் யாதென அறுதியிட்டுரைத்தல் எவராலும் இயலாது.
பலவகையாலும் அழிந்தன போக எஞ்சியனவாய் நமக்குக் கிடைத்துள்ளனவற்றுள் முழுமை நூலாய் இலங்குவது தொல்காப்பியம் ஒன்றேயாகும்.
தொகை நூல்களாம் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனப்படுவனவற்றுள் சில, தொல்காப்பியத்திற்கு முற்பட்டனவாகவும் இருக்கலாம்.
தொல்காப்பியத்தின் காலம், கி.மு. பத்தாம் நூற்றாண்டுக்கு முற்படாமலும் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்குப்பிற்படாமலும் இடைப்பட்டதாக இருக்கலாம்; கி.மு. ஏழாம் நூற்றாண்டு என வரையறுக்கலாம். ஆகவே, கி.மு. ஏழாம் நூற்றாண்டு முதல் இற்றைநாள் வரை உருவாகியுள்ள தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கைப் பின்வருமாறு வகைப்படுத்தி அறியலாம்
- தொல்காப்பியம்
- சங்க இலக்கியங்கள்
- காப்பியங்கள்
- அறநூல்கள்
- கடவுள் அன்பு நூல்கள்
- காதைகள்
- சமய மெய்ந்நூல்கள்
- சிற்றிலக்கியங்கள்
- சீர்திருத்த நூல்கள்
இவ்வகைப் பிரிவுகள் தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கினையும், அதன்கண் ஏற்பட்ட திருப்பங்களையும் உணர்த்துவனவாகும்.
‘தொல்காப்பியம்’ ஓர் இலக்கணம் எனக் கருதப்பட்ட போதினும் அது தமிழர் வாழ்வை அறிவதற்குப் பெரிதும் துணைபுரிகின்றது. எழுத்து, சொல், பொருள் எனப்படும் அதன் முப்பிரிவுகளுள், பொருள் இலக்கிய இலக்கணமாக இருப்பதோடு தமிழர் வாழ்வியல் உரைக்கும் வரலாறாகவும் அமைந்துள்ளது. இலக்கியம் என்பது மக்கள் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தோன்ற வேண்டுமென்பது மேனாட்டு இலக்கிய ஆராய்ச்சியாளர் கூற்றாகும். இக் கூற்றுக்கு ஏற்பவே தொல்காப்பியத்தில் இலக்கிய இலக்கணம் கூறப்பட்டுள்ளன.
‘தொல்காப்பியம்’ எனும் பெயர் நூலுக்கு இடப்பட்டதேயாகும். இப்பெயர் ‘பழமையானவற்றைக் காப்பது’ எனும் பொருளைத் தருவதாகும். தமிழரின் வாழ்வியல் மரபுகளையும் இலக்கிய மரபுகளையும் காப்பதற்கெனவே இந் நூல் எழுதப்பட்டதெனத் தெளிதல் வேண்டும். தொல்காப்பியத்தை இயற்றியதனால் அதன் ஆசிரியர் தொல்காப்பியர் எனப்பட்டார். பின்னர் அவரின் இயற்பெயர் மறக்கப்பட்டு மறைந்துவிட்டது.
‘தொல்காப்பியம்’ எனும் நூலின் பெயரிலிருந்து ‘தொல்காப்பியர்’ எனும் ஆசிரியரின் பெயர் தோன்றியுள்ளதேயன்றித் ‘தொல்காப்பியர்’ எனும் ஆசிரியர் பெயரிலிருந்து ‘தொல்காப்பியம்’ எனும் நூலின் பெயர் தோன்றிலது. இவ்வாறு ஆசிரியர் பெயரிலிருந்து நூலின் பெயர் தோன்றுவது தமிழ் மரபு அன்று; வடமொழி மரபாகும். வடமொழி மரபையறிந்த பிற்காலத்தார் ‘தொல்காப்பியம்’ எனும் பெயர் ‘தொல்காப்பியர்’ எனும் பெயரிலிருந்து தோன்றியது எனப் பிறழ நினைத்தனர்.
தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலத்தில் வடமொழியாளர் தமிழ்நாட்டில் குடியேறத் தொடங்கிவிட்டனர். வடமொழிச் சொற்கள் தமிழில் எடுத்தாளப்படுவதற்குத் தொல்காப்பியத்தில் விதி கூறப்பட்டுள்ளது. ஆனால், வடவர் வாழ்வியல் முறையைத் தமிழர் ஏற்றுக்கொண்டனர் என்று கூறுவதற்குச் சான்று இன்று. ஆதலின், தொல்காப்பியத்தில் கூறப்படும் வாழ்வியல் முறை முழுவதும் தமிழருடையதே எனக் கொள்ளுதல் பொருந்தும்.
சங்க இலக்கியங்கள் என்பனவற்றுள் பெரும்பாலானவை தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டனவே. தமிழை வளர்க்கச் சங்கம் தோன்றியதே தொல்காப்பியத்திற்குப் பின்னர்தான் என்பதில் ஐயமின்று.
மொழியைப் பேணிப் புரந்து வளர்ப்பதற்கெனப் புலவர்கள் கழகம் அமைத்த சீர்மிகு செயல் உலகிலேயே தமிழகத்தில்தான் முதல் முதல் நிகழ்ந்துள்ளது. அந்நிகழ்ச்சியும் கிறித்து பிறப்பதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்பட்டுள்ளது.
(தொடரும்)
சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்
அருமை