koattai_fort01

  தமிழ்வேந்தர்கள் அமைத்த கோட்டைகளின் இயல்பு சங்க இலக்கியங்களிற் குறிக்கப்பட்டுள்ளது. நகரங்களின் புறத்தே காவற்காடும் அதனை அடுத்து, ஆழ்ந்த அகழியும், அதனைச் சார்ந்து வானளாவ ஓங்கிய மதிலும், அரண்களாக கொள்ளப்பட்டன. முற்றுகையிட்ட பகைவர் படையினை உள்ளிலிருந்து எய்தற்குரிய போர்க் கருவிகள் மதிலில் அமைக்கப்பட்டு இருந்தன. கோட்டையில் சிறந்த பகுதி மதிலாகும். சுடுமண்ணாகிய செங்கற்களாற், சுண்ணாம்பு சாந்திட்டு மதில்கள் கட்டப்பட்டன. அங்ஙனம் கட்டப்பட்ட மதில்கள் செம்பினாற் செய்தாற் போன்ற தோற்றமும் திண்மையும் உடையவனாய் அமைந்தன. புறத்தேயுள்ள பகைவர் காணாதபடி உள்ளிருப்பார் மறைந்து நின்று போர் செய்தற்குரிய அறைகள் மதிலில் அமைக்கப்பட்டிருந்தன. ‘ஞாயில்’ என்னும் பெயரால் இலக்கியங்களிற் சொல்லப்படுவன இவ்வகையினவேயாம். இவ்வறைகளில் நின்று வீரர்கள் செலுத்தும் அம்புகள் புறத்தே பகைவர் மேற்படும் படியாகவும், வெளியே நின்ற பகைவர் செலுத்துவன உள்ளே புகாத படியும், உள்ளே அகன்றும் உயர்ந்தும் வெளியே குறுகித் தாழ்ந்தும் அமைந்த துளைகள் மதிலின்கண் அமைக்கப்பட்டன. இவற்றை ‘ஏப்புழை’ என்பர். (ஏ-அம்பு; புழை-துளை; ஏப்புழை-அம்பு செலுத்தும் துளை.

  மக்கள் எல்லாரும் தங்களுடைய அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்றவாறு தொழில் வாழ்தலுக்குரிய முறையில் ஆட்சி முறை நெகிழ்தல் வேண்டும் என்பது தமிழறிஞர் உட்கோளாகும். ‘ஒரு தொழிலுமின்றிப் பிறரிடம் கையேந்தி பிச்சையேற்றுண்பதே ஒரு சிலருடைய தலையெழுத்தாகக் கருதும் நாட்டின் அரசு முறை அமையுமானால் அம்முறையற்ற செயலை வகுத்தவனாகிய அரசியற் தலைவன் அழிந்து ஒழிவானாக’ என வையும் அறிவாற்றல் அக்காலத் தமிழ்ப்புலவர்பால் நிலைபெற்றிருந்தது. தொழிற்றிறமே மக்களது உயிராற்றலாகும். ஒரு தொழிலும் செய்யாத சோம்பர் உயிரற்ற பிணம் போல இழித்துரைக்கப்பட்டனர்.

  தம்நாட்டில் தமக்கு பயன்பட்டு இருந்த பொருளை வெளிநாட்டுக்கு அனுப்பியும், வெளிநாட்டிலிருந்து தமக்கு பயன்படும் பொருளை இந்நாட்டிற்கு கொண்டு வந்தும் வாணிகம் செய்தற்கு இக்கடல் வழி போக்குவரவு மிகவும் பயன்படும் முறையினை முதன்முதல் கண்டு உணர்ந்தவர்கள் நம் தமிழர்களே.

க. வெள்ளைவாரணனார்

vellaivaaranar01