சங்க இலக்கியப் பயிற்சிப் பட்டறை (வட கரொலினா)

chera chozha pandiyar01

சங்க இலக்கியத்தை ஏன், எப்படிப் படிக்க வேண்டும் எனும் ஐயத்திற்கான விடை தேடுமுகமாக, வட கரொலினாவில் திருமதி. வைதேகி அவர்கள் நடத்திய ‘சங்க இலக்கியம் படிப்பது எப்படி’ என்கிற பயிற்சிப் பட்டறை தொடங்கியது. எளிமையான தோற்றம், செழுமையான இலக்கிய அறிவு, கற்பவர் உள்ளம் கவர கற்பிக்கும் திறன் என அனைத்தும் ஒருங்கே அமைந்த தமிழ்ப் பெண் திருமதி. வைதேகி என்றால் அது மிகையாகாது.

முதல் நாள் பட்டறை:

சங்க இலக்கியத்தை அவர் எப்படிப் படிக்கத் தொடங்கினார் என்ற விளக்கத்தோடு முதல் நாள் பட்டறை தொடங்கியது. தனது சங்க இலக்கிய ஆசான் திருமதி. உருக்குமணி இராமச்சந்திரன் அவர்களிடம் கற்று கொண்டது, மேலும் அவர்களின் நட்பு, செயற்பாடுகள் பற்றியும் பகிர்ந்துகொண்டார். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் யாவை? அவை இயற்றப்பட்ட காலம், தொகுக்கப்பட்ட காலம் எது என்பது பற்றிப் பேசினார். தொகுக்கப்பட்ட நூல்களைப் படிக்கும்போது அதில் உள்ளதை அப்படியே ஏற்று பொருள் புரிந்துகொள்ளவேண்டும் என்று கூறினார்.

ஐந்துத் திணைகள் பற்றி நாம் படித்திருந்த போதிலும், திருமதி. வைதேகி அவர்கள் விவரித்த போது, ஒவ்வொரு திணையிலும் நாம் இப்போதும் நடந்து செல்வது போன்ற உணர்வைத் தந்தது. எடுத்துக்காட்டாக, குறிஞ்சி என்றால் மலையும் மலைசார்ந்த இடமும் என்று மட்டுமே நினைவில் இருந்தது. ஆனால் அவர்கள் சொல்லும்போது மலை, அருவி, மலை சார்ந்த பூக்கள், முருகன், தலைவன் – தலைவி இணைவது என்று அனைத்தையும் நினைவுகொள்ளுங்கள் என்றார். ஒவ்வோரு  திணைப் பற்றிக் கூறும்போது நிலம், அந்த நிலத்தில் வாழும் உயிரினம், மனிதர்களின் உணர்வு, வாழ்வியல் முறை அனைத்தையும் சுருக்கமாகவும் நேர்த்தியாகவும் கூறினார்.

மூவேந்தர்களும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தார்கள் எனும் வரலாற்றை அனைவரும் அறிவோம். மூவேந்தர்களைவிட குறுநில மன்னர்கள் அன்புள்ளம் கொண்டவர்களாகவும், மக்களின் வாழ்வு குறித்து அக்கறை உடையவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்ற செய்தி புதிதாகவும் நெஞ்சை நெகிழச் செய்வதாகவும் இருந்தது. புறப்பாடல்களில் வரும் பாசறைக் கூடாரம் பற்றி படிக்கும் போது அவைகளை நேரில் காண்பது போல விவரித்தார்.

முதல் நாள் பட்டறையின் இறுதியில் நெஞ்சில் பசுமரத்தாணியாய் நின்றது, “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சம உரிமையுடன் வாழ்ந்திருக்கிறார்கள்” எனும் செய்தியே.

இரண்டாம் நாள் பட்டறை:

எட்டுத்தொகையில் முதன்மையாகக் கூறப்படும் ஐங்குருநூறு, புறனானூறு, குறுந்தொகைப் பாடல்களில் வரும் சில எளிமையானப் பாடல்களைத் தெரிவு செய்து சிறந்த வழிகாட்டுதலில் படித்தோம்.
அகப்பாடல்களில் இருக்கும் முதல், கரு, உரி என்பவை பற்றிய விளக்கமும் தந்தார்.
எளிமையாக நினைவில் நிறுத்த:
முதல்: இடம், பருவகாலம், பொழுது
கரு: உருவானது, மரம், செடி, மக்கள், விலங்குகள், திசை
உரி: உணர்வு
aynthinai puu01மேலும் அகப்பாடல்களில் உள்ள உள்ளுறை பற்றி விவரித்தபோது இன்றைய சூழலில் பேசப்படும் இரு பொருளுடைய சொல்லாடல்கள் பற்றிய கேள்வி   நெஞ்சில் நிழலாடின. மன்னர்களின் வீரம், காதல் என்று சுவைக் குறையாமல் நாள் முழுக்கப்பேசி எங்களை வியப்பில் ஆழ்த்தினார். தலைவி தோழியிடம் பேசும்படியான பாடல்களைப் படிக்கும்போது, தலைவனுக்கு தோழன் இல்லையா என்று பங்கேற்பாளர்கள் வினா எழுப்பினார்கள்.
கேட்போரின் ஆர்வம் குறையாமல் இருக்க குறைவான வரிகள் உள்ள பாடல்களைக் கற்பித்தார். அதே வேளை பலவிதமான சூழல்களைக் காட்டும் பாடல்களை தெரிவுசெய்து கற்பித்தது சுமை தெரியாமல் படிக்க எளிதாக இருந்தது.
இன்று நடைபெரும் திருமண நிகழ்வுகளைக் கண்டு களிக்கிறோம். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திருமணம் முறை பற்றிய பாடல்  வியப்பில் ஆழ்த்தியது. மேலும் ஒவ்வொரு பாடல்களையும், அதன் இயற்கை அழகையும் அப்படியே கண்முன் காட்சியாகக் கொண்டுவந்த திறமை பாராட்டுதலுக்குரியது.
தமிழர் வாழ்வு மதம், சாதி, பால் சாற்பற்ற வாழ்வு என்பதை குறுந்தொகைப் பாடல் எண் நாற்பதில் தலைவன் தலைவியிடம் சொன்னதன் மூலம் தெளிவுப்படுத்தினார். ஐந்தே வரிகளில் எவ்வளவு நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்கள்.

sanga kaatchi03

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தயும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புளப் பெயல் நீர்ப்போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

என் தாயும் உன் தாயும் எவ்விதம் உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்கள்? நானும் நீயும் எந்தக் குடி வழியில் அறிந்தவர்கள்? ஆனால் இன்று செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் போல அன்புடைய நமது நெஞ்சங்கள் கலந்தனவே.
பெரும்பாலன தமிழ் குடும்பங்களில், கணவனை மனைவி எதிர்த்துப் பேசக்கூடாது என்பதான ஒரு கருத்து பிள்ளைகளுக்கு, அதிலும் பெண் பிள்ளைகளுக்குச் சொல்லப்படுகிறது. ஆனால் சங்க காலத்தில் பெண்கள் எவ்வளவு துணிவுடன் தன் கணவனுடன் உரையாடினார்கள் என்பதற்கு ஐங்குறுநூற்றுப் பாடல் எண் எழுபதில் தலைவி தலைவனிடம் சொன்னது:

பழனப் பன் மீன் அருந்த நாரை
கழனி மருதின் சென்னிச் சேக்கும்
மா நீர்ப் பொய்கை யாணர் ஊர!
தூயர் நறியர் நின் பெண்டிர்
பேஎய் அனையம் யாம் சேய் பயந்தனமே.

sanga kaatchi01

மற்ற பெண்களோடு பொழுது போக்கி வந்த தலைவனிடம்  தலைவி வருந்திச் சொல்லியது. ‘நீர் நிலையில் உள்ள மீன்களை உண்ண, உயரமான மருத மரத்தின் மேல் நாரை அமர்ந்திருக்கும். பெரிய நீர்ப்பொய்கைகள் உடைய பெருமைக்குரிய  ஊரின் தலைவன் உனது  பெண் தோழிகள் அழகானவர்கள், நறுமணமுடையவர்கள் ஆனால் உனக்குப் பிள்ளை பெற்றுத்தந்தவள் நான் பேயைப் போன்றுள்ளேன் ” என்கிறாள்.

சங்க காலத்தில் தமிழ்ப் பெண்கள் திட்டியதிலும் எத்தனை இலக்கிய அழகு!
இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த தமிழர்களின் வீரம், காதல், அன்பு, அழகு போன்றவற்றை விவரிக்கும் விதம் பெருமை கொள்ளச் செய்கிறது. நாம் பிள்ளைகளைப் பற்றி பேசும்போது அறிவு, அழகு பற்றி பேசுகிறோம். ஆனால் சங்க காலத்து தாய்மார்கள் பிள்ளைகளின் வீரம் பற்றியே பெரும்பாலும் பேசியிருக்கிறார்கள். புறநானூற்றுப் பாடல் எண் எண்பத்தாறு:

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவோ
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே

சிறிய இல்லத்தில் உள்ள தூணைப் பற்றி நின்றுகொண்டு உன் மகன் எங்கே உள்ளான் என்று கேட்டால் எங்கு இருக்கிறானோ எனக்குத் தெரியாது. புலி இருந்த பெரிய குகை போல அவனை ஈன்ற வயிறு இது. அவன் போர்களத்தில் தோன்றுவான்.

பிள்ளையை பெற்ற வயிற்றை புலி இருந்த குகையோடு ஒப்பிட்டு தன் மகனின் வீரத்தையும், அவன் போர்களத்தில் தோன்றுவான் என்பதின் மூலம் போருக்குச்  செல்ல வேண்டும் என்பதை அவன் அறிவான், நான் சொல்ல வேண்டியதில்லை என்பதையும்  எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்கள்.

இரண்டாம் நாள் பட்டறை முடிவில் ”சங்க இலக்கியத்தை அணைத்து தமிழர்களும் படிக்க வேண்டும், எங்கு, எப்படி துவங்குவது என்ற கேள்விக்கான விடை அம்மா வைதேகியின் இலக்கிய பட்டறை மற்றும் அவரது நூல்கள்” என்ற எண்ணத்தை எங்களுக்குள் விதைத்திருந்தார்.

மூன்றாம் நாள் பட்டறை:

முல்லைப்பாட்டு முழுப்பாடலையும் எப்படிப் பொருள் புரிந்துப் படிப்பது எனக் கற்றுத்தந்தார். பாடல் வரிகளைப் பிரித்து ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் சொல்லிப் படிக்கும்போது விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருந்தது. அதே வேளை எங்களைப் படிக்கச்சொல்லி அவர்கள் பொருள் கேட்டபோது தடுமாறியதும், பொருள் புரிந்தும் அதைக் கோர்வையாகச்  சொல்லத்தெரியாமல் திகைத்ததும்,  அம்மா வைதேகி அவர்கள் நாள் முழுதும் எப்படிச் சிறிது தடுமாற்றமும் இன்றிப் பேசினார்கள் என்ற வினா எங்கள் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் எழுந்தது.

sanga kaatchi02திரு.திருமூர்த்தி அவர்கள், அம்மா வைதேகியின் நூல் வெளியீட்டுக்கு செய்யும் உதவி பாராட்டுக்குரியது. அவர்களைக் காணவேண்டி பதினான்கு மணி நேரம்  இடெட்ராய்டில் இருந்து தனியாக மகிழுந்தில் பயணித்து வந்தார். அவர் நமது சங்க இலக்கியத்தைப் பலாப் பழத்தோடு ஒப்பிட்டார். முழுப் பழத்தைக் கண்டு திணறிக் கொண்டிருந்த நமக்கு, அதை பிரித்து அதில் இருக்கும் சுளைகளைச் சுவைப்பதற்கான வழிகளை அம்மா வைதேகி அவர்கள், சங்க இலக்கியப் பட்டறை, நூல்கள் வழியாகத் தருகிறார் என்று சொன்னது மிகவும் பொருத்தமானது. இரண்டரை நாள் பட்டறையில் வைதேகி அவர்கள் பல முறை உச்சரித்தப் பெயர் கமில் சுவெலபில் (Kamil Zvelebil). அவரை இறுதிவரை சந்திக்க இயலவில்லை என்று மிகவும் வருந்தினார். அவர் எழுதிய “The Smile of Murugan” படிக்கவேண்டிய நூல் என்று கூறினார். வைதேகி அவர்கள், தன்னுடைய சங்க இலக்கிய ஆசான் திருமதி உருக்குமணி இராமச்சந்திரன் அவர்கள் எழுதிய கோளங்களை நூலாக வெளியிட்டுள்ளார். மேலும் வாழ்த்து அட்டைகளில் (Hallmark Cards) இலக்கியப் பாடல்களை வாழ்த்துச் செய்தியாக வெளியிட முயற்சி செய்யலாம் என்றார்.

நமது தமிழ் சமூகம் சாதி, சமய வேறுபாடுகள் இல்லாது சிறப்பாக வாழ்ந்த சமூகம். வீரம், காதல், அன்பு, நட்பு என்று வாழ்ந்த செழுமையான வாழ்வு நமது வாழ்வு. சங்ககாலத்தில் பெண்கள் சம உரிமையுடனும் பெரும் மதிப்போடும் வாழ்ந்திருக்கிறார்கள். சங்க இலக்கியத்தை நம் போன்ற அனைவரும் படிக்க இயலும் என்ற தன்னம்பிக்கையையும் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் அளித்த அம்மா வைதேகி அவர்கள் “நடமாடும் தமிழ் மன்றம்” என்றால் அது மிகையாகாது.

பட்டறை முடிந்த போது,  சங்க இலக்கியம் அனைத்தையும் படிக்க வேண்டும், அதை மற்றவர்களும் படிக்கத் தூண்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அத்துடன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த அறிவும், சம உரிமையும், அன்பு பாராட்டும் நற்குணமும் கொண்டிருந்த தமிழரது வாழ்வும், நாடும் எங்கே என்ற வினாவும்,  இழந்த அனைத்தையும் விரைவில் மீட்போம் என்ற நம்பிக்கையும் பிறந்தது.

நன்றி சிறகுகள் [http://siragu.com/]