செவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை 3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆடி 24, 2046 / ஆக 09, 2015 தொடர்ச்சி)
3
பதவிப்பெயர்கள் அல்லாமல் வேலைத் தேர்ச்சி அடிப்படையிலும் வகைப்பாடு கொண்டு நாம் தொழிலாளிகளைப் பிரிக்கிறோம். வேலையில் முழுமையான தேர்ச்சி அல்லது அரைகுறை தேர்ச்சி அல்லது தேர்ச்சியின்மை என்ற மூன்றின் அடிப்படையில் தேர்ச்சிநிலையையும் தேர்ச்சி நிலைக்குரிய தொழிலாளர்களையும் குறிப்பிடுவர். skilled labour அல்லது skilled worker – செயல்திற வேலையாள், தேர்ச்சியுடைத் தொழிலாள், திறமிகு தொழிலாளர், தேர்ச்சியுற்ற தொழிலாள், திறமையான தொழிலாளர், திறமிகு பணியாளர் எனப்பலவகையாக இப்பொழுது குறிப்பிடுகின்றனர். (skilled person என்பதற்குத் திறமையுள்ள ஆள் என்கின்றனர்.
semi-skilled worker அல்லது semi-skilled labour என்பதற்குப் பகுதி-தேர்ச்சியுள்ள பணியாள், அரைகுறைத் திறமை கொண்ட பணியாள், பகுதி திறமைக்குரிய வேலையாள், பகுதிநுட்பத் தொழிலாளி, பயிற்சிக்குறைவான தொழிலாளி, குறைதிறத் தொழிலாளி என்று வெவ்வேறு வகையாகக் குறிப்பிடுகின்றனர்.
unskilled labour என்பதற்குத் திறன்பெறாத வேலையாள், திறனில்லாத தொழிலாளி, திறன்பெற்றிரா தொழிலாளி, திறனற்ற தொழிலாளர், திறமையற்ற தொழிலாளர், திறமையற்ற தொழிலாளி என்று சீர்மையின்றிக் குறிப்பிடுகின்றனர்.. செவ்வியல் இலக்கியங்கள் வழி ஏற்ற சொல்லைப் பார்ப்போம்!
திறவோர் புகழ்ந்த திண்ணன் – உறையூர் கண்ட பொத்தியார் : புறநானூறு 221.4
திறவோர் காட்சியின் தெளிந்தனம் -கணியன் பூங்குன்றன் : புறநானூறு 192.10-11
திறவோர் செய்வினை அறவது ஆகும் – சேந்தம்பூதன் : குறுந்தொகை 247.2
எனத் திறனாளர்கள் குறிக்கப்பெறுகின்றனர். எனவே இச்சொல்லையே நாம் கையாளலாம். இதற்கிணங்கப் பின்வருமாறு குறிப்பிடலாம்.
திறவோர் / நிறை திறவோர் – skilled person
அடுத்த நிலையினரைச் சரியாகப் பாதியளவு திறனுடையவோர் எனக் குறிப்பிட இயலாது. எனவே, வளர் திறவோர் – semi skilled person எனலாம்.
மூன்றாம் நிலையினரை ஒன்றும் திறமையற்றவர் எனக் குறிக்க இயலும். ஏதாவது சிறிதளவாவது திறமை இருக்காதா எனச்சிலர் கேட்பதுண்டு. புதியதாகப் பணியில் சேர்ந்துள்ளனர். இப்பொழுதுதான் குறிப்பிட்ட தொழில் பிரிவில் திறமை பெற வேண்டும். எனவே, திறமையற்றவர் எனக் கூறுவதில் தவறில்லை இவர்களைச் சுருக்கமாக திறனிலர் – unskilled persons எனலாம். எனினும், பொதுவாக இவர்கள் பயில்நிலைத் தொழிலாளிகள்(apprentice). எனவே, பயில் திறவோர் என்றும் கூறலாம்.
செவ்வியல் இலக்கியங்களில் ஆற்றல்வலிவுடையவர்களை எப்படிக் குறிப்பிடுகின்றனர் எனப் பார்ப்போம்.
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், உறையூர் முதுகண்ணன் சாத்தனார் ஆகியோர், இருவரும் வல்லார்
ஆயினும் வல்லுநர் ஆயினும் (புறநானூறு 7.15 / 57.1) என்கின்றனர்.
கயமனார், யாங்கு வல்லுநள்கொல் (குறுந்தொகை 356.5) என்கிறார்.
பெயர் அறியப்படாத புலவர் ஒருவர்,
“வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே” (குறுந்தொகை 395:3) என்கிறார்.
மாங்குடி மருதனார், “வல்லுநர் வாழ்ந்தோர் என்ப” (புறநானூறு 24:34) என்கிறார்.
மதுரைக்காஞ்சிப் புலவர், சேரமான் இளங்குட்டுவன் ஆகியோர்
வல்லுநள்கொல்லோ (அகநானூறு 89.19 / 153.13 ) என்கின்றனர்.
அரிது வல்லுநர் – ஓதலாந்தையார் : ஐங்குறுநூறு 338.5
வாழ்தல் வல்லுநர் ஆயின் : உறையூர் முதுகூத்தனார் (அகநானூறு 329 .3)
யாங்கு வல்லுநள்கொல் – பூதனார்: நற்றிணை 29.6
யாங்கு வல்லுநையோ – கபிலர் : ஐங்குறுநூறு 231.1 & 285.5 / காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் : பதிற்றுப்பத்து 52.27
யாங்கு வல்லுநள்கொல் – தாயங்கண்ணனார்: அகநானூறு 105.4
வல்லுநர் என்னும் சொல் சங்க இலக்கியங்களில் மட்டும் 6 பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றைக்கு வல்லுநர் என்னும் சொல் பின்வருமாறு பயன்பாட்டில் உள்ளது.
எந்திரவல்லுநர் – mechanical expert
ஒளிப்படவியல் வல்லுநர் கூட்டுக் குழு jpeg – joint photographic experts group
கையெழுத்தியல் வல்லுநர் – handwriting expert
கையெழுத்து ஆய்வு வல்லுநர் – expert, handwriting
தொழில்நுட்ப வல்லுநர் – technical expert
பசுமை வேதி வல்லுநர் அமைப்பு – green chemistry expert system
பாடப்பொருள் வல்லுநர் – subject matter expert
புல வல்லுநர், துறை வல்லுநர் – field expert
வல்லுநர் – expert
வல்லுநர் அமைப்பு – expert system
வல்லுநர் அமைப்பு உறைவகம் – expert system shell
வல்லுநர் கருத்து – expert opinion
வல்லுநர் குழு – expert committee
வல்லுநர் சான்று – expert witness
வல்லுநர் சான்றுரைஞர் – expert witness
வல்லுநர் திறம் – expert power
வல்லுநர் துணை அமைப்பு – expert support system
வல்லுநர் – expert
வல்லுநர்களின் கருத்து – opinion of experts
விரல் வரிப் பதிவு வல்லுநர் – expert, finger print
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply