(தமிழக வரலாறு 2/5 – மா.இராசமாணிக்கனார் தாெடர்ச்சி)

தமிழக வரலாறு  3/5 – மா.இராசமாணிக்கனார்

 

  வாணிகம்

  கிறித்துவிற்கு முன்பு பல நூற்றாண்டுகளாகத் தமிழர், மேல் நாடுகளுடனும் கீழ்நாடுகளுடனும் கடல் வாணிகம் செய்து வந்தனர். மிக மெல்லிய ஆடைகள், மிளகு, யானைத்தந்தம், மணப்பொருள்கள் முதலியன வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பலவகைப் பொறிகள், கண்ணாடிப் பொருள்கள் முதலியன இறக்குமதியாயின. தமிழர் கடல் கடந்து சென்று வெளிநாடுகளில் தங்கி, வாணிகம் செய்தனர்; பல நாடுகளுடன் பழகினர்; அவர்தம் மொழிகளைக் கற்றனர். இங்ஙனம் அயலாரோடு நெருங்கிய உறவு கொண்ட காரணத்தால், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, என்று கூறலாயினர். சங்கக் காலத்தில் முசிறி, கொற்கை, காவிரிப்பூம் பட்டினம் முதலியன தமிழ் நாட்டுத் துறைமுக நகரங்களாய் விளங்கின. பிற்காலத்தில் நாகப்பட்டினம், காயல்பட்டினம்,  காந்தளூர்ச்சாலை, மாமல்லபுரம், மயிலை முதலியன துறைமுக நகரங்களாய் இருந்தன சீனப் பேரரசர் தமிழகத்துடன் வாணிக உறவு கொண்டிருந்தனர். உள்நாட்டு வாணிகமும் சிறப்புற நடந்தது. கடல் வாணிகத்தால் தமிழகத்துப் பொருளாதார நிலை உயர்ந்து காணப்பட்டது.

தொழில்கள்

பயிர்த் தொழிலுக்கு அடுத்தபடி நெசவுத்தொழில் சிறப்பாகக் கருதப்பட்டது. பருத்திநூல், பட்டு நூல், எலிமயிர் இவைகளால் ஆடைகள் நெய்யப் பட்டன. முப்பதுக்கு மேற்பட்ட ஆடைவகைகள் சிலப்பதிகார காலத்தில் இருந்தன என்பது அடியார்க்கு நல்லார் உரையால் அறியப்படும். பொது மக்களுக்குத் தேவையான பலதிறப்பட்ட பொருள்கள் கைத்தொழில்களால் வளம் பெற்றன. பொற். கொல்லத் தொழில் மிகவுயரிய முறையில் அமைந்திருந்தது.

  பயிர்த்தொழில் நாட்டின் உயிர்நாடி. ஆதலால், தமிழரசர் அதனைக் கண்ணுங்கருத்துமாகக் காத்து வந்தனர். ஆற்றுவசதி இல்லாத இடங்களில் பெரிய ஏரிகளும், குளங்களும், கிணறுகளும் எடுப்பிக் கப்பட்டன. மகேந்திர தடாகம் முதலிய பெயர்கள் பல்லவ வேந்தரை நினைவூட்டின. சோழப் பேரரசர், வீரசோழன் ஆறு, முடிகொண்டான் ஆறு என்னும் ஆறுகளையும், இராசராசன் வாய்க்கால் முதலிய வாய்க்கால்களையும் வெட்டுவித்தனர். திருமலைராயன் ஆறு என்பது பின்நூற்றாண்டுகளில் வெட்டப்பட்டது. இவ்வாறு நாடாண்ட மன்னர்கள் ஆறுகளைத் தோற்றுவித்தும், வாய்க்கால்களைப் படைத்தும், ஏரி குளங்களை ஏற்படுத்தியும், ஆற்றின் கரைகளை உயர்த்தியும் பயிர்த் தொழிலைப் பாதுகாத்து வளர்த்தனர்.

அளவைகள்

 நிறுத்தலளவை, நீட்டலளவை, முகத்தலளவை, எண்ணலளவை என்பன வழக்கில் இருந்தன. இராசகேசரி மரக்கால், ஆடவல்லான் மரக்கால், அருண்மொழி நங்கை மரக்கால் என முகத்தலளவைக் கருவிகள், கடவுள், அரசன், அரசியின் பெயர்கள் பெற்று விளங்கின. பொன், வெள்ளி, செம்பு நாணயங்களும் வழக்கிலிருந்தன.

சமுதாய வரலாறு

சங்க காலத்தில் தொழில் பற்றிய பிரிவுகளே சமுதாயத்தில் இருந்தன. பின்பு, கொல்லன் மகன் கொல்லனாகவும், பறையன் மகன் பறையனாகவும் கருதத்தகும் முறையில் சாதிகள் ஏற்பட்டுவிட்டன. வடநாட்டு வருண பேதங்கள் இந்நாட்டிலும் நுழைக்கப்பட்டன. இவ்வேறுபாடுகளால் சமுதாயத்தில் இருந்த ஒற்றுமை சிதறடிக்கப்பட்டது. ஒருவன ஒருவன் உயர்ந்தவனாகவும் தாழ்ந்தவனாகவும் கருதினமையால், உயர்வு மனப்பான்மையும் இழிவு மனப்பான்மையும் மக்களிடையே வேரூன்றின. சமுதாயத்தில் ஏறத்தாழ மூவாயிரம் பெருஞ்சாதியிலும் 3 முதல் 12 வரை உட்பிரிவுகளும் ஏற்பட்டுவிட்டன. மநுதர்ம சாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு சமுதாயம் வகுக்கப்பட்டது. அம்முறைப்படி நாடாண்டதாக மன்னர்களும் வெட்கமின்றிப் பன்ற சாற்றிஞர்கள். இவ்விழி நிலையால், சங்க காலத்தில் ஒன்றுபட்டிருந்த தமிழ்ச் சமுதாயம், பின் நூற்றாண்டுகளில் சின்னாபின்னப்பட்டது. சோழப் பேரரசில் இச்சாதிக் கொடுமைகள் தலைவிரித்தாடின. இன்ன வகுப் பார் தெருக்களில் செருப்பணிந்து போகலாகாது, இன்ன வகுப்பார் மாடிவீடு கட்டலாகாது, இன்ன வகுப்பார் மாடிவீடு கட்டினாலும் இத்துணைச் சன்னல்களுக்குமேல் வைக்கக்கூடாது என்று மன்னனது ஆணை இருந்தது. இத்தகைய கொடுமைகள் சமுதாய ஒற்றுமையைக் குலைத்துவிட்டன , சித்தர்களும், இராமலிங்கர் போன்ற பெரியாரும் சாதிகளையும் அவற்றை வற்புறுத்தும் பாழான சாத்திரங்களையும் வன்மையாகக் கண்டித்தனர். காந்தியடிகளாலும் பெரியாரது பெருந்தொண்டினுலும் அரசாங்கத்தின் சட்டத்தினாலும் இன்று இவ்வேறுபாடுகள் மறைந்து வருகின்றன. சங்ககாலச் சமுதாய வாழ்க் கையை நோக்கி இன்றைய தமிழ்ச் சமுதாயம் போய்க் கொண்டிருக்கிறது என்று கூறலாம். ஆயினும், இப்போக்கில் விரைவு வேண்டும்; யாவரும் தமிழர் என்ற எண்ணம் வேண்டும்; கலப்பு மணங்கள் மிகுதல் வேண்டும்; சாதிகள் அறவே ஒழிதல் வேண்டும்; தமிழ்ச் சமுதாயத்திற்கு ஏற்ற முறையில் புதிய சட்டம் வகுக்கவேண்டும். ஒரு குலத்திற்கு ஒரு நீதி கூறும் சட்டம் மாய்ந்தொழிதல் வேண்டும்.

(தொடரும்)

முனைவர்மா.இராசமாணிக்கனார்

இலக்கிய அமுதம்