(தமிழக வரலாறு  3/5 தொடர்ச்சி)

தமிழக வரலாறு  4/5

கல்வி நிலை

  சங்கக் காலத்தில் சாதியற்ற சமுதாயத்தில் எல்லோரும் கல்வி கற்று வந்தனர். குறமக்கள், குயத்தி, பாடினி, வளமனையைக்காத்த காவற் பெண்டு முதலிய பெண்மணிகளும், கொல்லன் முதலிய பலதிறப்பட்ட தொழிலாளர்களும் கவிபாடும் ஆற்றல் பெற்றுவிளங்கினர் என்பது சங்க நூல்களால் அறிகின்றோம். இத்தகைய கல்விநிலை 2000 ஆண்டுகளாக இல்லாமற் போய்விட்டது. பின் நூற்றாண்டுகளில் வடமொழிக் கல்லூரிகள் வளம் பெற்றன என்பதற்குத்தான் சான்றுகள் கிடைக்கின்றனவே தவிர, ஒரு தமிழ்க் கல்லூரியாவது இருந்தது என்பதற்குச் சான்று கிடைக்கவில்லை. காலப் போக்கில் தொழிலாளர்கள் கல்வியை இழந்தார்கள். கற்கும் உரிமை ஒரு சில வகுப்பினர்க்கே இருந்து வந்தது. சாதி வேறுபாட்டாலும் தீண்டாமையினாலும் பல வகுப்பினரும் சேர்ந்து படிக்க வசதி ஏற்படவில்லை. இந்த அவல நிலையில், அரசியல் போர்களும் குழப்பங்களும் கொள்ளைகளும் சமயப் போர்களும் சமுதாய அமைதியைக் கெடுத்தன. நாம் செய்த நற்பேற்றின் பயனாக, சாதி வேறுபாட்டைப் பெறாத வெள்ளையர் ஆட்சி இந்நாட்டில் ஏற்பட்டது. யாவரும் கல்வி கற்க முற்பட்டனர். ஏழைகள் பணவசதியின்றி அல்லற்பட்டார்கள். தமிழன்னையின் தவப்புதல்வரான காமராசர் ஆட்சியில் ஏழைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. இப்பொழுது தமிழ் உணர்ச்சியும் தமிழ் நாட்டுப் பற்றும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகின்றன.

சமய வரலாறு

 தொல்காப்பியர் காலத்திற்கு முற்பட்ட தமிழர் பலவகைக் கடவுளரை வணங்கிவந்தனர். குறிஞ்சி நில மக்கள் முருகனையும், முல்லை நில மக்கள் கண்ணனையும், பாலைநில மக்கள் கொற்றவையையும், மருதநில மக்கள் மன்னனையும், நெய்தல்நில மக்கள் கடலையும் வழிபட்டு வந்தனர். வடநாட்டு மக்கள் தமிழகத்தில் குடியேறிய காரணத்தால் தொல்காப்பியர் காலத்தில் கடல், வருணனாகவும், மன்னன் இந்திரனாகவும் உருவகப்படுத்தப்படும் நிலைமை உண்டாயிற்று என்று கூறலாம். வடவர் கூட்டுறவால் முருகன் சுப்பிரமணியனானான்; கொற்றவை துர்க்கையானாள்; இவ்வாறே பல மாற்றங்களும் சேர்க்கைகளும் சமயத்துறையில் உண்டாயின. இந்திரனுக்கும் அவன் வாகனமான வெள்ளையானைக்கும், பலதேவனுக்கும் மன்மதனுக்கும் தமிழகத்தில் கோவில்கள் ஏற்பட்டன. சமணராலும் பெளத்தராலும் ஏற்பட்ட கோவில்கள் பல. வைதிகரின் நுழைவால் வடமொழி மந்திரங்கள் தமிழகத்தில் நுழைந்தன. சுருங்கக் கூறின், சங்க இறுதிக் காலத்தில் பழந்தமிழ்ச் சமயம், வைதிகர் சமயத்தோடு கலப்புண்டது. தமிழர்தம் சிவன் உருத்திர-சிவனாக்கப்பட்டான். வடவர் சமயக்கலைகள் யாவும் தமிழகத்தில் பரவின. கண்ணன் வழிபாடு விட்டுணு வழிபாடாக மாறியது. இவ்வாறு உண்டான மாறுதல்கள் பல.

  பல்லவர் காலத்தில் சைவ வைணவ சமயங்கள் பெளத்த சமண சமயங்களைத் தாக்கி வெற்றி பெற்றன. அப்போது நாட்டில் பல நூறு கோவில்கள் தோற்ற மெடுத்தன. நாயன்மார்களும் ஆழ்வார்களும் தலந்தோறும் சென்று அருட்பாடல்களைப் பாடினர்கள். நாயன்மார் பாடியவை திருமுறைகள்‘ என்றும், ஆழ்வார்கள் பாடியவை ‘அருளிச் செயல்‘ என்றும் பெயர் பெற்றன. பல்லவர்கள் மலைச்சரிவுகளைக் குடைந்து கோவில்களை அமைத்தார்கள்;. பாறைகளையே கோவில்களாக மாற்றினர்கள்; கற்களை உடைத்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கோவில் கட்டினார்கள்; பல்லவ மன்னர் சைவ வைணவ சமயங்களுக்குப் பெரிதும் ஆக்கமளித்தனர்; மறையவர்களுக்குப் பல புதிய ஊர்களையும் நிலங்களையும் வழங்கினர்; வடமொழிக் கல்லூரிகளை ஏற்படுத்தினர். இவற்றால் வைதிகர் செல்வாக்கு நாட்டில் மிகுதிப்பட்டது.

 சோழர் காலத்தில் இக் கோவில்களெல்லாம் சிறப்புற்றன. பல கோவில்கள் கற்றளிகளாய் மாறின. தஞ்சைப் பெரிய கோவில் போன்ற புதிய கற்கோவில்களும் தோற்றமெடுத்தன. சைவசித்தாந்த சாத்திரங்களும் புராணங்களும் தோன்றின. வைதிகர் செல்வாக்கும் மிகுதிப்பட்டது. வைணவமும் வளர்ந்தது. ஆழ்வார் அருட்பாடல்கட்கு மணிப்பிரவாள நண்டயில் விளக்கவுரை எழுதப்பட்டது. வடநாட்டுச் சான்றோர் சோழர்க்கு அரசகுருமாராய் அமர்ந்தனர். முசுலிம் படை யெடுப்பினால் சமயநிலை பெரிதும் தளர்ந்தது; ஆனால், நாயக்கர் ஆட்சியிலும் மகாராட்டிரர் ஆட்சியிலும் புத்துயிர் பெற்றது. அக்காலத்திய குமரகுருவரர், சிவப்பிரகாசர் முதலியோர் சைவத்தை வளர்த்தனர். வெள்ளையர் ஆட்சியில் சமயம் ஒரளவு நலம் பெற்றது.

  சைவத்திலும் வைணவத்திலும் சாதிவேறுபாடுகளின் கொடுமையால் வாடி வதங்கிய மக்கள், சாதி வேறுபாடு அற்ற இசுலாத்தையும், கிறித்துவத்தையும் தழுவித் தங்கள் மனக்கவலையை மாற்றிக் கொண்டனர். மேனாட்டுப் பாதிரிமார் தமிழகம் போந்து கல்வியறிவையும் மருத்துவ உதவியையும் அளித்தனர். இவ்வருந்தொண்டால் தமிழர் பலர் கிறித்தவராயினர். இங்ஙனம் கி. பி.14-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகத்தில் இசுலாமும் கிறித்தவமும் தோன்றி வளர்ந்தன. சுருங்கக் கூறின், சைவர் வைணவர் கொடுமைகளே இச் சமயங்களின் வளர்ச்சிக்கு ஒரு காரணம் என்னலாம்.

(தொடரும்)

மா.இராசமாணிக்கனார்

 இலக்கிய அமுதம்