(தமிழ்நாடும் மொழியும் 10 தொடர்ச்சி)

தமிழ்நாடும் மொழியும்

கடைச்சங்கக் காலம் தொடர்ச்சி

கல்வி முறை

சங்கக்காலக் கல்விமுறை மிகவும் சிறந்த முறையிலே அமைந்திருந்தது. சாதிமத பேதமின்றி ஆடவரும் பெண்டிரும் கல்வி கற்றிருந்தனர். இதனை வெண்ணிக்குயத்தியார் முதலிய பெண்டிர்தம் பாடல்கள் நன்கு தெளிவுறுத்தும். சங்ககாலத்திலே கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு இருந்தது. கற்றுத் துறைபோய நற்றமிழ் வல்லார்க்குக் காவலனும் கவரி வீசினான்; கைகூப்பினான்.

‘உற்றுளி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே
………………………………………………………..
அறிவுடை யோனாறு அரசுஞ் செல்லும்’

என்னும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூற்றால் சங்ககாலக் கல்விமுறை நன்கு விளங்கும். அதுமட்டுமின்றி அங்கங்கே வரும் வானநூற் கருத்தும், மருத்துவமுறைக் குறிப்பும் பண்டைக்காலக் கல்வி முறையை நன்கு தெளிவுறுத்தும்.

பண்டு மன்னருட் பலர் பெரும் புலவர்களாகத் திகழ்ந்தனர். பெண்பாலரும் கல்வியிற் சிறந்து விளங்கினர். பெருங் காக்கை பாடினியார், சிறு காக்கை பாடினியார், நச்செள்ளையார், குறமகள் இளவெயினியார், ஒளவையார் போன்ற பல பெண்பாற் புலவர்கள் இருந்தனர். சங்கமிருந்து தமிழ் வளர்த்த புலவர்கள் நாற்பத்தொன்பதின்மர் ஆவர். இவர்கள் பற்பல நூல்களியற்றிப் புகழ்பெற்றனர். சுருங்கக் கூறின் அக்காலத்தில் கல்வியின் உயர் நிலை நன்கு உணரப்பட்டது.

பொருளாதாரம்

சங்ககாலப் பொருளாதாரம் ஓரளவு நல்ல நிலையிலேயே இருந்தது. பெரும்பாலும் பண்டமாற்றே வழக்கத்தில் இருந்துவந்தது. உள் நாட்டு வாணிகம் வண்டியின் மூலமாகவும், வெளிநாட்டு வாணிகம் கலத்தின் மூலமாகவும் நடைபெற்றன. குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய நால்வகை நிலப்பொருட்களும் வந்து குவியுமிடம் மருதமாகும். குறிஞ்சி நில மக்கள் தமது தேன், சந்தனம், அகில் முதலியனவற்றையும், முல்லை நிலத்தார் பாலையும் மோரையும் தயிரையும், நெய்தல் நிலத்தார் உப்பு முதலியவற்றையும், மருத நில மக்களுக்குக் கொடுத்து நெல்லைக் கொண்டு செல்லுவர். எனவே சங்ககாலத்திலே பொருளியல் வளம் செறிந்த நிலம் மருதநிலமாகும்.

போர் முறை

இக்காலத்திலே நடக்கும் போர் அறம் திறம்பிய போராகும். ஆனால் சங்ககாலத்திலோ போர் அறவழியிலேயே நடைபெற்றது, முன்னறிவுப்புடனேயே போர் நடைபெற்றது. போர் செய்ய விரும்புவோர் முதலிலே பகைவர் நாட்டகத்தே சென்று பறையறைவர். பிள்ளை பெறாதவரும், பிணியுடையோரும், பார்ப்பனரும், பிறரும் தத்தம் புகலிடம் நோக்கிப் போகுமாறு கூறி, அங்குள்ள ஆநிரைகளைக் கவர்ந்து வருவர். இஃதறிந்த பிற நாட்டார் ஆநிரைகளை மீட்கப் போருக்கு வருவர். உடனே போர் தொடங்கும். போரிலே புறமுதுகிட்டோடலும், அவ்வாறு ஓடுவார் மீது படை ஓச்சலும் தவறு எனக் கருதப்பட்டன. ‘போர்க் குறிக் காயமே புகழ்க்குறி காயம்’ என்பது பன்டைத்தமிழ் வீரர்களின் இதய நாதமாகும். போரில் இறந்தோருக்கு நடுகல் நடுவது வழக்கமாம். போரில் புண்பட்டோர் வடக்கிருந்து உயிர் நீத்தலும் அக்காலத்தில் உண்டு.

கலைகள்

சங்ககாலத் தமிழகம் கலை நலத்தால் கவினுற விளங்கியது. சிற்பத்தால் சிறந்தும், ஓவியத்தால் உயர்ந்தும், இசையால் இனிமை பெற்றும் தமிழ் மக்கள் வாழ்ந்தனர். முத்தமிழ் முழக்கம் வீதிதோறும் கேட்டது. இசைத்தமிழ் சங்க காலத்தில் நன்கு போற்றப்பட்டது. பெருநாரை, இசை நுணுக்கம் முதலிய இசைத்தமிழ் இலக்கண நூல்களும், சிலப்பதிகாரம் போன்ற இசைத்தமிழ்ச் செய்யுள் நூல்களும் சங்க காலத்தில் எழுந்தன. குரல், துத்தம், கைக்கிளை, உழை, கிளி, விளரி, தாரம் என்னும் ஏழு சுரங்களும், குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் பண் வகைகளும், தோற் கருவிகள், துளைக் கருவிகள், நரம்புக் கருவிகள், கஞ்சக் கருவிகள் என்ற நால்வகை இசைக் கருவிகளும், பேரி யாழ், மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ் முதலிய யாழ்களும் சங்க காலத்தில் வழக்கில் இருந்தன. இசைக் கலையில் வல்லவராயிருந்த பாணர் , பாடினியர் முதலியவர்களை மக்களும், மன்னரும் பெரிதும் போற்றினர்.

அக்காலத்தில் கோவில்கள் செங்கல், மரம் இவற்றால் கட்டப்பட்டன. சுவர்மேல் கண்ணைக் கவரும் வகையில் சுண்ணம் பூசப் பெற்றிருந்தது. இதனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனாரது கீழ்வரும் பாடலால் அறியலாம்.

“இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென
மணிப்புறாத் துறந்த மரஞ்சோர் மாடத்து
எழுதணி கடவுள் போகலிற் புல்லென்று
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்றிணை” (அகம்-167)

சோழர் பெருநகராகிய காவிரிப்பூம்பட்டினத்து மாளிகைகளிலே மக்களை மயக்கும் சுதையினால் செய்யப்பட்ட சிற்ப உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்பதை,

“சுடுமண் ஒங்கிய நெடுநிலை மனைதொறும்
மையறு படிவத்து வானவர் முதலா
எவ்வகை உயிர்களும் உவமங் காட்டி
வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
கண்கவர் ஓவியம்”

என மணிமேகலை கூறுவதிலிருந்து அறியலாம். மேலும் அக்காலத்தில் மண்ணினும், கல்லினும், மரத்தினும் சுவரினும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன.

சிற்பத்தில் சிறந்து விளங்கிய செந்தமிழ் நாடு, ஓவியத்திலும் உயர்ந்து விளங்கியது. சுவர், மரம், துணிச் சீலை, முதலியவற்றில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ஓவியங்களைத் தமிழ் மக்கள் எழுதி மகிழ்ந்தனர். அரண்மனை, கோவில் மண்டபம் இவற்றின் சுவர்களில் நல்ல நல்ல ஓவியங்களை எழுதி அழகுபடுத்தினர். அரண்மனையின் ஒரு பகுதி சித்திர மாடமாக விளங்கியது. பாண்டிய மன்னனது சித்திர மாடத்தை ,

“வெள்ளி யன்ன விளங்குஞ் சுதையுரீஇ
மணிகண் டன்ன மாத்திரட் டிண்காழ்ச்
செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்
உருவப் பல்பூ வொரு கொடி வளை இக்
கருவொடு பெரிய காண்பின் நல்லில்

என நெடுநல் வாடையும்,

“கயங்கண்ட வயங்குடை நகரத்துச்
செபியன் றன்ன செஞ்சுவர் புனைந்து”

என மதுரைக் காஞ்சியும் போற்றிப் புகழ்கின்றன. பாண்டியன் நன்மாறன் சித்திர மாடத்தில் உயிர்நீத்த காரணத்தால் பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் எனப் புலவர்களால் அழைக்கப்பட்டான். சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடல் மூலம் திருப்பரங்குன்றத்தில் ஒரு சித்திரமாடம் இருந்தது எனவும், முருகனை வணங்கிய பின்னர் மக்கள் இம்மாடத்திற்குச் சென்று அங்கு எழுதப்பட்டிருந்த காமன், ரதி, அகலிகை முதலிய பலவகைப்பட்ட ஓவியங்களைக் கண்டு மகிழ்ந்தனர் எனவும் தெரிய வருகின்றது.

“நின் குன்றத்து
எழுதெழில் அம்பலங் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர்” (பரி-18
‘)

“இரதி காமன் இவள் இவன் எனாஅ
விரகியர் வினவ வினாவிறுப் போரும்
இந்திரன் பூசை இவளகலிகை இவன்
சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு
ஒன்றியபடி யிதென் றுரைசெய் வோரும்
இன்ன பலபல வெழுத்து நிலை மண்டபம்” (பரி-19)

இதுவரை கூறியவாற்றான் சங்ககாலம் தமிழக வரலாற்றில் ஒரு பொற்காலம் என்பது வெள்ளிடை மலை. இக்காலத்தில்தான் தமிழன் நாகரிகமிக்கவனாய் வாழ்ந்தான். பற்பல வகை உணவுண்டு, பட்டினும், நூலினும் ஆடை உடுத்து, கோட்டையையும் கொத்தளமும் கொண்டு வாழ்ந்தான். மேலும் நல்லரசாட்சி கொண்டு நல்லறிவு கொளுத்தும் கலை நலம் பல பெற்று, உயர் வாழ்க்கை நடாத்தினான். நஞ்சு பெய்வதைக் கண்டும் அதனை உண்டு அமைவர் நனி நாகரிகம் வேண்டுபவர் என்று கூறுகிறது தமிழ் வேதம்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றுரைத்தான் நற்றமிழ்ப் புலவன் ஒருவன். இவ்வுணர்ச்சி இன்றிருக்குமாயின், உலகப்பேரச்சம் நீங்குமன்றோ? “தீதும் நன்றும் பிறர்தர வரா” என்று உலக உண்மையை உயர்முறையில் விளக்கினான் அதே தமிழன். உலகம் உய்ய, உயர்வாழ்வு பெறத் தமிழர்தம் பண்டைப்பண்பாடு பெரிதும் உதவும் என்பதும் இதனால் பெறப்படுகிறதன்றோ?

பயனைக் கருதாது ஒருவன் நல்வினைகளைச் செய்தல் சிறந்தது என அக்கால மக்கள் எண்ணினர். இதனை,

‘தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுந ருண்மை யானே’ (புறம். 182)
 ‘இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வணிக னாயலன்’ (புறம், 134)

‘தனக்கென வாழாப் பிறர்க்குரிய யாள’ (அகம். 54)
‘பிறர்க்கென வாழ்தி நீ’ (பதிற். 38)

என்ற சங்ககாலப் பாடல் வரிகள் மூலம் நன்கு அறியலாம். செய் நன்றி மறத்தல் பெரிய பாவமாகக் கருதப்பட்டது என்பதைப் பின்வரும் பாடல் எடுத்துக் காட்டுகின்றது.

‘ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச் சிதைத் தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென
நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்
செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென’ (புறம். 34)

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்