(தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 2/4 தொடர்ச்சி)

தலைப்பு-தமிழ்நூல்கள் எவ்வாறு அழிந்தன?-மயிலை சீனி. ; thaliappu_marainthupona_thamizhnuulgal_mayilaiseeni

தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 3/4

செல் அரித்தல்

  நமது நாட்டுக்குச் சாபக்கேடாக இயற்கையில் அமைந்துள்ள சிதல் என்னும் பூச்சிகள், ஏட்டுச் சுவடிககளுக்குப் பெரும்பகையாக இருக்கின்றன. வன்மீகம் என்றும், செல் என்றும் பெயர்பெற்ற எறும்பு இனத்தைச் சேர்ந்த இப்பூச்சிகள் துணிமணிகள், மரச்சாமான்கள் முதலியவற்றை அரித்துவிடுவது போலவே, ஏட்டுச் சுவடிகளையும் தின்று அழித்துவிட்டன. இப்படி அழித்த சுவடிகளுக்குக் கணக்கில்லை. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூன்று சிவனடியார்கள் இயற்றிய தேவாரப் பதிகங்களில் நூறாயிரம் பதிகங்களுக்குமேல் செல்லரித்து விட்டன: இப்போதுள்ள தேவாரப் பாடல்கள் அவற்றில் எஞ்சி நின்ற சிறு பகுதியே.

  தேவாரப் பதிகங்கள் எழுதிய ஏட்டுச்சுவடிகள், தில்லைச் சிற்றம்பத்திலே ஓர் அறையிலே வைக்கப்பட்டிருந்ததை அநபாய சோழ மகாராசன் அறிந்து, அவ்வேடுகளை எடுக்கச் சென்றான். சென்று அறையின் கதவைத் திறந்து பார்த்தபோது, வன்மீகம் (சிதல்) அரித்து மண்மூடிக் கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டு மனம் வருந்தினான். பிறகு, குடங்குடமாக எண்ணெயை ஊற்றிக் கிளறிப் பார்த்தபோது, சில ஏடுகள் மட்டும் எஞ்சியிருந்தன. இவ்வாறு எஞ்சி நின்ற பகுதிதான் இப்போதுள்ள தேவாரப் பதிகங்கள், தேவாரத்தின் பெரும்பகுதி மறைந்துபோயின. தேவாரப் பதிகங்களைச் சிதல் தின்ற செய்தியைத் திருமுறை கண்ட புராணம் இவ்வாறு கூறுகிறது:

ஐயர்நட மாடும்அம் பலத்தின் மேல்பால்
     அருள்பெற்ற மூவர்தம் அருள்சேர் செய்ய
கையதுவே யிலச்சினையா யிருந்த காப்பைக்
     கண்டவர்கள் அதிசயிப்பக் கடைவாய் நீக்கிப்
பொய்யுடையோர் அறிவுதனைப் புலன்கள் மூடும்
     பொற்பதுபோல் போதமிகும் பாடல் தன்னை
நொய்யசிறு வன்மீகம் மூடக் கண்டு
     நொடிப்பளவி னிற்சிந்தை நொந்த வேந்தன்.

பார்த்ததனைப் புறத்துய்ப்ப வுரைத்து மேலே
     படிந்திருந்த மண்மலையைச் சேரத் தள்ளிச்
சீர்த்ததில தயிலமலி கும்பங் கொண்டு
     செல்லுநனை யச்சொரிந்து திருவே டெல்லாம்
ஆர்த்தஅரு ளதனாலே யெடுத்து நோக்க
     அலகிலா ஏடுபழு தாகக் கண்டு
தீர்த்தமுடிக் கணிபரனே பரனே என்னச்
     சிந்தைதளர்ந் திருகணீர் சோர நின்றான்.

  இவ்வாறு செல்லரித்து அழிந்துபோன நூல்கள் இன்னும் பலப்பல. இக்கறையான்கள் இன்னும் தமது அழிவு வேலைகளைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன.

மயிலை சீனி வேங்கடசாமி :mayilaiseenivenkadasamy

மயிலை சீனி.வேங்கடசாமி: மறைந்துபோன தமிழ்நூல்கள்

(தொடரும்)