தலைப்பு-பாட்டின் இயல்பு, மறைமலையடிகள் ; thalaippu_paatin_iyalbu_maraimalaiadigal

பாட்டின் இயல்பு என்ன?

1/3

  முல்லைப்பாட்டு என்பதைப் பற்றித் தெரிய வேண்டுவன எல்லாம் ஆராயும்முன், பாட்டு என்பது எத்தகையது? என்று ஆராய்ந்து அறிந்து கொள்ளல் வேண்டும். பின்றைக் காலத்துத் தமிழ்ப் புலவர் பாட்டென்பது இன்னதென்றே அறியாராய்ப் புதுப்புது முறையாற் சொற்களைக் கோத்துப் பொருள் ஆழமின்றிச் செய்யுள் இயற்றுகின்றார். பண்டைக் காலத்துத் தண்டமிழ்ப் புலவரோ பாட்டு என்பதன் இயல்பை நன்கறிந்து நலமுடைய செய்யுட்கள் பலப்பல இயற்றினார். இங்ஙனம் முற்காலத்தாராற் செய்யப்பட்ட பாட்டின் இயல்பொடு மாறுபட்டுப் பிற்காலத்தார் உண்மை பிறழ்ந்து பாடிய செய்யுட்களைக் கண்டு மாணாக்கர் பாட்டினியல்பு அறியாது மயங்குவாராகலிற், பாட்டு என்பது இன்னதென்பதனை ஒரு சிறிது விளக்குவாம்.

  உலக இயற்கையிற் கண் முதலான புலன்களுக்கு விளங்கித் தோன்றும் அழகை யெல்லாந் தன்னகத்தே நெருங்கப் பொதிந்துவைத்துப், பின் அவற்றை நம் அறிவினிடத்தே புலப்படுவண்ணந் தோற்றுவித்துப், பொருள் நிகழ்ச்சியொடு மாறுபடுதல் இல்லா இனிய ஓசையுடன் இசைந்து நடைபெறும் இயல்பினை உடையதுதான் பாட்டென்று அறிதல் வேண்டும். இன்னும் எங்கெங்கு நம் அறிவைத் தம்வயப் படுத்துகின்ற பேரழகும் பேரொளியும் பெருந்தன்மையும் விளங்கித் தோன்றுகின்றனவோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்றே அறிதல்வேண்டும். இதனை விளக்கிக் காட்டுமிடத்துப், பேரழகாற் சிறந்த ஓர் அரசி தான் மேற்போர்த்திருந்த நீலப்பட்டு ஆடையினைச் சிறிது சிறிதாக நீக்கிப், பின் அதனைச் சுருட்டிக் கீழே எறிந்து விட்டுத் துயில் ஒழிந்து, ஒளிவிளங்கு தன் நளிமுகங்காட்டி எழுந்ததை யொப்ப, இருட்கூட்டஞ் சுருண்டு மடங்கி அலைகடலிற் சென்று அடங்கிவிடுமாறு இளைய ஞாயிறு உருக்கித் திரட்டிய பசும்பொற் றிரளைபோலத் தளதளவெனக் கீழ்த் திசையில் தோன்றவும், அத்திசையின் பரப்பெல்லாம் பொன் உரைத்த கற்போற் பொலிந்து திகழவும், பசுமை பொன்மை நீலம் சிவப்பு வெண்மை முதலான நிற வேறுபாடுள்ள பொன் வெள்ளிகள் உருகி ஓடுகின்ற நிலம் போல வான் இடமெல்லாம் பலவண்ணமாய் விரிந்து விளங்கவும், கரியமுகில்க ளெல்லாஞ் செவ்வரக்கு வழித்த அகன்ற திரைச் சீலைகள் போலவும் ஆங்காங்குச் சொல்லுதற் கரிய பேரொளியடு திகழவும் உலகமங்கை நகைத்தாற் போலப் புதுமையுற்றுத் தோன்றும் விடியற்கால அழகெல்லாம் பாட்டென்றே அறிதல்வேண்டும். ஆ! இங்ஙனந் தோன்றும் அவ் விடியற்கால அழகினைக் கண்டுவியந்த வண்ணமாய் மீன்வலையடு கடற்கரையில் நிற்குஞ் செம்படவனைக் காட்டினுஞ் சிறந்த புலவன் யார்?

  அவ் விடியற்காலையிலே முல்லை நிலத்து மேய்ப்பர்கள் ஆண்கன்றுகளைத் தொழுவத்திலே தாம்பினாற் கட்டிவைத்து ஆன்நிரைகளை அடுத்துள்ள மலைச்சாரலிற் கொண்டுபோய்ப் பசிய புல் மேயவிட்டுத் தாம் மரநழலிற் சாய்ந்திருந்து கொண்டு, தமக்கெதிரே பச்சிலைப் போர்வை மேற்கொண்டு கரிய முகில்கள் நெற்றி தழுவிக் கிடப்பப் பெருந்தன்மையடு வான் அளாவித் தோன்றும் மலையினை அண்ணாந்து பார்த்தவராய் அவர்கள் அச்சமும் மகிழ்ச்சியும் அடையும் போது அங்கும் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும்.

  காதலினாற் கட்டுண்ட இளைஞரும் மகளிரும் நெகிழாத காதலன்பின் மிகுதியால் தோளடு தோள் பிணையத் தழுவிக்கொண்டு, மலையடிவாரத்தில் உள்ள பூஞ்சோலைகளிற் களிப்பாய் உலவுந்தொறுந் தூங்கணங் குருவிகள் மரக்கிளைகளில் வியப்பான கூடு கட்டுதலையும்; மரப் பொந்துகளி லிருந்து மணிப்புறாக்கள் கூவுதலையும்; ஆண்மயில்கள் தம் அழகிய தோகையினை விரித்துப் பெடைமயில் கண்டுகளிப்ப ஒருபுறம் ஆடுதலையும்; மலையிலிருந்தொழுகும் அருவிநீர் கூழாங் கற்படையின்மேற் சிலுசிலுவென்று ஓடிவந்து அச்சோலையின் ஒரு பக்கத்துள்ள ஆழ்ந்த குட்டத்தில் நிரம்பித் துளும்ப, அதன்கண் உள்ள செந்தாமரை முகிழ்கள் அகன்ற இலைகளின்மேல் இதழ்களை விரித்து மிகச் சிவப்பாய் அலர் தலையும் விரும்பிக்கண்டு, நறுமணங் கமழும் பூக்களை மரங்களினின்றுந் தாவிப் பறித்துக் கரிய கூந்தலில் மாறிமாறி அணிந்துஞ், சிவக்கப் பழுத்த கொவ்வைக்கனி போன்ற தம் இதழ்கள் அழுந்த முத்தம் வைத்துக்கொண்டுந், தேன் ஒழுகினாலென இனிய நேயமொழிகள் பேசிக்கொண்டும் அவர்கள் செல்லுமிடத்து அங்கும் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும்.

(தொடரும்)

– மறைமலையடிகள் : முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை