அகரமுதல 127, பங்குனி 21, 2047 / ஏப்பிரல் 03, 2015 தொடர்ச்சி

தலைப்பு-புறநானூற்று அறிவியல் வளம், திரு : thalaippu_puranaanuurtr_ariviyalvalam_thiru

புறநானூற்று அறிவியல் வளம்

2

காற்றறிவியல்

   பஞ்ச பாண்டவர்களில் பீமன் குந்திக்கும் வாயுக்கும் பிறந்தவன் என்பதும் வாயுக்கும் அஞ்சலைக்கும் பிறந்தவன் அனுமான்  என்பதும் ஆரியப் புராணம்.  ஆரியர்கள் வாயு எனப்படும் காற்றை, இயற்கையாக எண்ணாமல் அறிவியல் உணராதவர்களாகவே இருந்துள்ளனர்.

  கிரேக்கர்கள் ஆதித்தெய்வங்களுள் ஒன்று காற்று எனக் கருதினர்.  அவர்களின் தொன்மைக் கதைகளின்படி, இருளுக்கும் (Erebus) இரவுக்கும்(Night) பிறந்த மகன் காற்று; இவன்  பகலின் (Hemera) உடன்பிறப்பு என்றும் விண்கடவுளின் (Uranus) மகன் என்றும்  உரோமர்கள் துயரத்திற்கும்(Chaos) இருளிற்கும் (Caligo) பிறந்த மகன் என்றும்  கருதினர்.   இவ்வாறு காற்றினை ஒவ்வொரு நாட்டினரும் கடவுள்களின் அல்லது தேவதைகளின் குழந்தையாகக் கருதினர். காற்றினை இயற்கையாக மேனாட்டார் கருதாக் காலத்திலேயே காற்றின் பல் வேறு தன்மைகளைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர்.

காற்றோடு எரி நிகழ்ந் தன்ன செலவின்

எனக் காற்று கலந்தால் தீ விரைவாக எரியும்  அறிவியல் உண்மையை உவமையாகக் கூறுகிறார் ஆசிரியர் கோவூர் கிழார்.

  அண்மை நூற்றாண்டுகளில்தான் காற்றின் அடிப்படையில் விண்மண்டிலத்தைப் பிரித்தனர் பிற நாட்டு அறிவியலாளர்கள்.   மேலே செல்லச்  செல்லக் காற்றின் அளவு குறைவதைக் கொண்டு அடிவளி மண்டிலம்(troposphere), மீவளி மண்டிலம்(Stratosphere), இடைவளி மண்டிலம்(mesosphere), வெப்பவளி மண்டிலம்(thermosphere),  மேல்வளி மண்டிலம்(exosphere) எனப் பகுத்தனர். நம் தமிழ் முன்னோரும், காற்று வழங்கும் பரப்பிற்கேற்ப, கொண்மூ, கணம், செல், மை, கார், விண்டு, முதிரம், மஞ்சு, விசும்பு, எழிலி எனக் காற்றை வகைப்படுத்திப் பெயரிட்டனர். காற்று இல்லாத மண்டிலமும் இருந்ததை உணர்ந்தனர்.

  அண்மைக்கால அறிவியலின் வளர்ச்சியாகக் காற்றில்லா மண்டிலத்தைக் கண்டறிந்தது  குறித்து உலகம் மகிழ்கிறது. ஆனால், உண்மையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விண்வெளியில் காற்று  இல்லாதபகுதி உள்ளதை நம் தமிழ்முன்னோர் நன்கு அறிந்துள்ளனர் என்பது அவர்களின் அறிவியல் முன்னோடித் திறனை உணர்த்துகிறது அல்லவா?

   வரி விதிப்பை நீக்குவதற்கு அறிவுரை கூறும்  புலவர் வெள்ளைக்குடி நாகனார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்னும் வேந்தனிடம்  வரி விதிப்பை நீக்குமாறு வேண்டினார். அப்பொழுது அவர்,  பழந்தமிழ்நாட்டு எல்லையையும் மூவேந்தர் சிறப்பையும் குறிப்பிடும் வகையில், கடல்களால்  சூழப்பெற்று, காற்று வழங்காத வானத்தின் கீழ் உள்ள நிலத்தை ஆளும் மூவேந்தர் என்கிறார்.

நளிஇரு முந்நீர் ஏணி யாக,

வளியிடை வழங்கா வானம் சூடிய

மண்திணி கிடக்தைக் தண்தமிழ்க் கிழவர்  (புறநானூறு: 35: 1-3)

என்னும் பாடலடிகளில்தான் புலவர், இவ்வாறு, காற்று  பயன்பாட்டில் இல்லாத வான் மண்டிலத்தைக் குறிப்பிட்டுள்ளார். (நளி இரு – நீர் செறிந்த; முந்நீர் – கடல்; ஏணி- எல்லை)

 மார்க்கண்டேயனார் என்னும் மற்றொரு புலவர்,  இடம்  விட்டு இடம் பெயரும் காற்று இல்லாத வானம் என்பதை,

மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக

இயங்கிய இருசுடர் கண்எனப் பெயரிய

வளியிடைவழங்கா வழக்கரு நீத்தம்

எனக் கூறுகிறார். (புறநானூறு : 365: 1-3)

 ” நில மண்டிலமும் நீர் மண்டிலமும் தீ மண்டிலமும் வளி மண்டிலமும் கடந்து நிற்கும் விசும்பு நீத்தம் எனப்பட்டது. …. … …இதன்கண் வளி வழங்குதலின்மையின் வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம் எனப்படுவதாயிற்று” என உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் விளக்குகிறார்.

 வளிமண்டிலம் சூழ இருப்பது ஞாலம் ஆதலின் அதனைக்கடந்து நிற்கும் விசும்பை நீத்தம் என்றார்   என நீத்தம் என்பதற்கான விளக்கத்தையும் அளிக்கிறார்.  எனவே, காற்று இல்லாத பகுதியை விசும்பு என அழைத்துள்ளனர் என்பதையும் காற்று நீங்கி இருத்தலால் நீத்தம் எனப் பெயர் பெற்றது என்பதையும் அறியலாம்.

  விண்ணறிவியலிலும் காற்றறிவியலிலும் சிறந்திருந்த தமிழ் முன்னோர், உயரச் செல்லச் செல்லக் காற்றின் பயன்பாடு குறைந்து செல்வதை உணர்ந்திருந்தனர். இதனையே புறநானூற்றுப்பாடல்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன.

புலவர் குறுங்கோழியூர்க்கிழார்வளிவழங்கு திசை ( புறநானூறு 20:3) எனக் காற்று வழங்கும் திசை பற்றிக் குறிப்பிடுகிறார். புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

வளி திரிதரு திசை(புறநானூறு 30.4) பற்றி அறிந்தவர் பண்டுதொட்டே இருப்பதைக் குறிப்பிடுகின்றார்.

புலவர் மாங்குடி மருதனார், கப்பலை இயக்கும் ஆற்றலைக் காற்று பெற்றிருந்ததை,

வளிபுடைத்த கலம் போல (புறநானூறு 26.2.) என்னும் உவமையில் குறிப்பிடுகின்றார்.

புலவர்  ஐயூர் முடவனார், வளிமிகின், வலியும் இல்லை(புறநானூறு 51.3) எனக் காற்றுப் புயலாக மிகும் பொழுது அதன் வலிமையைத் தடுக்க இயலாது எனக் குறிப்பிடுகின்றார்.

புலவர் மதுரை மருதன் இளநாகனார்

கடுவளி தொகுப்ப ஈண்டிய

வடுஆழ் எக்கர் மணலினும் பலவே! (புறநானூறு 55.22-23)

என மணலினும் பலவாக வாழுமாறு வாழ்த்தும் பொழுது, காற்று மணலைக் கொண்டுவந்து கொட்டும் அளவு வலிமையாகக் கடற்காற்று வீசுவதைக் குறிப்பிடுகின்றார்.

 புலவர் வெண்ணிக் குயத்தியார், வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! (புறநானூறு 66.2.) என வாழ்த்தும் பொழுது காற்றின் இயல்பையும் இயக்கத்தையும் அறிந்து, ஆளுமை பெற்ற மரபில் வந்த மன்னன் எனத் தொன்மைக்காலத்திலிருந்தே காற்றறிவியலைத் தமிழர்கள்அறிந்திருந்த உண்மையைக் குறிப்பிடுகின்றார்.

புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், வரைவளி(புறநானூறு  133.4) என மலைக்காற்று பற்றிக் குறிப்பிடுகின்றார்.

புலவர் கழாத் தலையார், வளிவழக் கறுத்த வங்கம் போல(புறநானூறு 368.9) என்னும் உவமையில் கடற்பகுதியில் காற்று இயங்கா நிலை உள்ளதையும் குறிப்பிடுகின்றார்.

புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர், விண்ணில் உழலும் காற்றையும்  தீயைப் பற்றிப் பரவச் செய்யும்  அதன் ஆற்றலையும்

விசும்பு தைவரு வளியும்

வளித் தலைஇய தீயும், (புறநானூறு 2.4-5) என்னும் அடிகளில்

குறிப்பிடுகின்றார்.

புலவர் கோவூர் கிழார், காற்று நெருப்புடன் இணைந்து அழிக்கும் ஆற்றலைக்,

காற்றோடு

எரிநிகழ்ந் தன்ன செலவின்(புறநானூறு 41.16-17)

என்னும் அடிகளில் குறிப்பிடுகின்றார்.

இவற்றால், காற்றறிவியல் பழந்தமிழர் நன்கு அறிந்த ஒன்று என உணரலாம்.

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

 இலக்குவனார் திருவள்ளுவன்

ilakkuvanar Thiruvalluvan