(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)

 

அகம்                                                                                                                                                                பாலை

1         வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல்,

உருவக் குதிரை மழவர் ஓட்டிய

முருகன் நற் போர் நெடு வேள் ஆவி,

அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,

 

5           “சிறு காரோடன் பயினொடு சேர்த்திய

கல் போல் பிரியலம்” என்ற சொல்தாம்

மறந்தனர்கொல்லோ தோழி! சிறந்த

வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப்

பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக,

 

10        அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின்,

நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு,

அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின்,

உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும்

வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய,

 

15           சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை

நார் இல் முருங்கை நவிரல் வான் பூச்

சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று,

உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன்

 

19.          கடல் போல் தோன்றல காடு இறந்தோரே?

 

–          அகநானூறு 1

 

(பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது-மாமூலனார்)

 

பதவுரை

 

வண்டுபட – வண்டுகள் மொய்க்க

ததைந்தகண்ணி – மலர்ந்த பூக்களால் ஆய மாலையினையும்

ஒள்கழல் – ஒளிபொருந்திய கழலினையும் உடைய (கழல்-வீரர் காலில் அணியும் அணி)

உருவ – அஞ்சத்தக்க

குதிரை – குதிரைப் படையினையுடைய

மழவர் ஒட்டிய – மழவர்களை ஒட்டிய

முருகன் – முருகனைப்போன்ற

நற்போர் – நல்லபோர் வெற்றியினையுடைய

நெடுவேள் ஆவி – பெருமையுடைய சிற்றரசனாகிய ஆவியினுடைய

அறுகோட்டுயானை – அறுத்துத் திருத்திய கொம்புகளையுடைய யானைகள் மிக்க

பொதினியாங்கண் – பொதினியாகிய அவ்விடத்திருந்து

சிறுகாரோடன் – கல்வியறிவிற் சிறிய சாணைக்கல் செய்வோன்

பயினோடு சேர்த்திய – அரக்கோடு சேர்த்துச் செய்யப்பட்ட

கற்போல் – கல்லைப்போல

பிரியலம் – இணைந்து பிரியாது இருப்போம்

என்ற சொல்தாம் – என்ற சொற்களைத் தாம்

மறந்தனர் கொல்லோ – மறந்துவிட்டனரோ?

தோழி – தோழி கூறுவாய்

சிறந்த வேய்மருள் – சிறந்த மூங்கிலையொத்த

பணைத்தோள் – அழகாகத் திரண்ட தோள்

நெகிழ – மெலிய (வாட)

சேய்நாட்டு – தொலைவில் உள்ள நாட்டுக்கு

பொலம் கலம் வெறுக்கை – பொன்னும், நகையும், செல்வமும்

தருமார் – தரும்பொருட்டு,

நிழல் பக – நிலம் பிளக்க,

அழல்போல் – நெருப்பைப்போல்

வெங்கதிர் – ஞாயிறு (சூரியன்)

பைது அற – பசுமை நீங்க

தெறுதலின் – காய்தலின்

நிழல் தேய்ந்து வாடிய – நிழல் இல்லையாக வாடிய

மரத்த – மரங்களையுடைய

அறை – பாறைகள்

காய்பு – காய்ந்து, (கொதித்து)

அறுநீர் – (குறையும் நீரினையுடைய) நீரற்ற

பைஞ்சுனை – பசிய சுனைகளிலும்

ஆம் அற – ஈரம் நீங்க

புலர்தலின் – காய்தலின்

உகும் நெல் – விழும் நெல்

பொரியும் வெம்பைய – பொரியும் வெப்பத் திறனுடைய;  ஆதலின்

யாவரும் வழங்குநர் இன்மையின் – வழிச்செல்வோர் யாவரும் இன்மையின்

வௌவுநர் – கள்வர்கள்

மடிய – வேலையின்றிச் (வறுமையால்) சோம்பியிருக்க,

சுரம் – பாலை நிலம்

புல்லென்ற  ஆற்ற – யாரும்  செல்லாத   அழகற்ற  வழியினையுடைய

அலங்குசினை – அசையும் கிளைகளையுடைய

நார் இல் முருங்கை – நாரில்லாத முருங்கையின்

நவிரல் வான் பூ-குலைந்த வெண்மையான பூக்கள்

சூரல் கடுவளி எடுப்ப – சூறாவளியாகிய கடுங்காற்று வீ

ஆர் உற்று – முழங்கி

உடைதிரை – உடைந்த அலையின்

பிதிர்வில் பொங்கி – துளிகளைப்போல் பொங்கிப் பரவிக் கிடத்தலின்

முன் கடல்போல் – கடல்முன்னாகிய கரைபோல

தோன்றல் – தோன்றுவதாகிய

காடு இறந்தோர் – காட்டினைக் கடந்து சென்ற நம் தலைவர்.

 

 

அகம்

 

‘அகம்’ என்றால் என்ன? ஒத்த அன்பினையுடைய தலைவனும் தலைவியும் தனித்துக்கூடுகின்ற காலத்துத் தோன்றி, மன உணர்ச்சியால் நுகரப்படும் (அநுபவிக்கப்படும்) இன்பம், அக்கூட்டத்தின் பின்னர், அவ்வின்பம் இவ்வாறு இருந்தது எனச் சொல்லால் விளக்கிக் கூற முடியாமல் எப்பொழுதும் உள்ளத்தே நிகழும் உணர்ச்சியால் நுகரப்படுவதால் ‘அகம்’ எனப்பட்டது. அகம்-உள், உள்ளம்: அதுபற்றி நிகழும் ஒழுக்கத்தை ‘அகம்’ என்று கூறினர். எளிமையாகக் கூறினால் ‘காதல் இன்பம்’ என்பதாகும். காதலின்பம் உணர்ச்சி வயத்தது; உணர்ச்சி உள்ளத்தைப் பற்றியது.

 பண்டைத்தமிழ்ப் புலவர்கள் இக்காதல் இன்பம்பற்றி உண்டாகும் உள்ள உணர்ச்சிகளைச் சொல்லோவியப்படுத்தி அச்சொல் ஓவியப்பாடல்களை அகப் பாடல்கள் என்று அழைத்தனர். அகப்பாடல்கள் ‘அகம்’ என்ற பெயராலும் அழைக்கப்பட்டன. அவ்வகப்பாடல்களும், பதின்மூன்றடியையும் அதற்கு மேற்பட்ட அடிகளையும் உடைய பாடல்கள் நானூற்றைத் தொகுத்து, ‘அக(ம்) நானூறு’ என்று பெயரிட்டனர். இத்தொகை நூலில் முப்பத்தோரு அடிகட்கு மேற்பட்ட அடிகளையுடைய பாடல்கள் இல்லை.

 மாமூலனார் பாடிய பாடல்கள் முப்பதும் அகப்பொருள் பற்றியனவே, அவற்றுள் இருபத்தேழு அகநானூற்றில் உள்ளன. எஞ்சிய ஒன்று குறுந்தொகையில், இரண்டு நற்றிணையில் சேர்க்கப்பட்டுள்ளன.

 பாலை: காதலின்பம் பற்றிய ஒழுக்கங்களைக் குறிஞ்சி, பாலை முல்லை. மருதம், நெய்தல் என்று ஐவகையாகப் பகுத்தனர்.  அவற்றுள் பாலையைப்பற்றி இங்கு விளக்குவோம். மற்றவை அவ்வவ் ஒழுக்கம் பற்றிய பாடல்கள் வருங்கால் விளக்கப்படும்.

 பண்டைய தமிழ்நாட்டில், தலைவன் தனக்கு ஒத்த தலைவியையோ, தலைவி தனக்கு ஒத்த தலைவனையோ தேர்ந்து மணக்கும் உரிமை பெற்றிருந்தனர். பெற்றோரும் சுற்றமும் அறியாமல் தாமே கணவனும் மனைவியுமாக இருப்பதாக உறுதி செய்து கொள்வதும் உண்டு. அவ்வித உறுதி செய்து கொண்ட பின்னர், பல்லோர் அறியத் திருமணம் நடைபெற்ற பின்னும், நடைபெறுவதற்கு முன்னும் பலவகைக் காரணங்களால் தலைவன், தலைவியைத் தனியே விடுத்துப் பிரிவான்.

 தான் விரும்பிய தலைவனை மணப்பதற்குத் தடையேற்படின், தலைவி பெற்றோரைப் பிரிந்து தலைவனோடு செல்வாள்.

 இவ்வகையான பிரிவுக்காலங்களில், தலைவன், தலைவி, தலைவியின் தோழி, செவிலி, தாய் ஆகியோரின் உள்ளங்களில் தோன்றும் எண்ண அலைகளை எழுத்து வடிவில் காட்டும்  இன் தமிழ்ப் பாடல்கள் பாலை எனப்பட்டன. பாலை என்ற சொல் ‘பகுத்தல்’ என்பதினின்றும் தோன்றியதே. பகுத்தல் – பகல் – பால் +ஐ

 ஏனைய  நால்வகை ஒழுக்கங்களுக்கு நிலம் வகுத்தது போல் பாலைக்கு இன்ன நிலமென வகுக்கவில்லை. முதலில் நான்கு நிலமாகத் தமிழ்நாட்டைப் பகுத்ததனால்தான், நானிலம் (நால் + நிலம்) என்ற சொல் முதலில் தமிழ்நாட்டைக் குறித்துப் பின்னர் உலகத்தைக் குறிக்கும் சொல்லாக உயர்ந்தது.

 பாலை என்ற ஒழுக்கம் பிரிவைக் குறிப்பது; பிரிவு ஏற்படின் பிரிந்தார் துன்புறுவது இயற்கை. அத்துன்ப ஒழுக்கத்தைப் பற்றிக்கூறும் பாடலில் துன்பக்  காட்சியை நல்கும் இயற்கையமைப்பும் வேண்டப்பட்டது. காடும் காடு  சார்ந்த இடமும் மலையும் மலை சார்ந்த இடமும் (முல்லையும் குறிஞ்சியும்) மக்கட்குத் துன்பந்தரும் வெப்பமும் விலங்குகளும் கள்வர்களும் மிகுந்து அவ்விடங்களில் செல்வோர்க்குத் துன்பம் தருவதாகக் கூறப்பட்டுள்ளன, இளங்கோ அடிகள் முல்லையும் குறிஞ்சியும் நாளடைவில் இயற்கையால் மாறுபட்டுப் பாலையாகும் என்றும் கூறியுள்ளனர்.

 மாமூலனார் பாடல்களில் இருபத்தொன்பது பாலையைப் பற்றியனவே; ஒன்று குறிஞ்சியைப் பற்றியது. பாலையைப் பற்றி ஒரு புலவரே பல பாடல்கள் பாடினும், பல புலவர்கள் தனித்  தனியாகப் பல பாடல்கள் பாடினும், ஒரு பாட்டைப்போல் இன்னொரு பாட்டு இராது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்புப்பெற்றுப் படிப்போர் உள்ளத்தை மகிழ்விப்பனவாம். ஆனால் எல்லாம் பாலையைப் பற்றியனவாகவே  இருக்கும். இருப்பினும்  வெவ்வேறுவகையான பொருட் சிறப்பும் சொல் நயமும் வாய்ந்து விளங்கும். மனிதர்களில் ஒரு வரைப்போல் இன்னொருவர் இருக்கக் காண்கின்றோமா? ஆனால் எல்லோர்க்கும் கைகளும் உண்டு; கால்களும்  உண்டு; தலையும் உண்டு; உடலும் உண்டு. ஆனால் அருகில் நெருங்கின், ஒவ்வொருவரும் வெவ்வேறு சிறப்புகளைப் பெற்றிருக்கக் காண்கின்றோம். தந்தையை ஒப்பர் மக்கள் என்றாலும், அவர்களுக்குள்ளும் எவ்வளவோ வேறுபாடுகள். அவ்வாறே பண்டைத் தமிழ்ப் புலவர் பாடிய பாடல்களும் பெயரால் ஒரு துறை பற்றியனவாக இருப்பினும், சிறப்பால் பல திறப்படும். ஆதலால் பாலை என்றதும் பழைய பாடல்தானே என்று கருதிவிடக் கூடாது.

 

(தொடரும்)