(பங்குனி 23, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி)

கச. மொழிபெயர் தேயத்தராயினும்  நல்குவர் – தோழி

– சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

 ( பிரிவின்கண் வேறுபட்டுள்ள தலைவியும் தோழியும்)

thalaivi-thozhi+1

 தோழி: ஏடி! இவ்விதம் வாட்டமுற்று வருந்துகின்றாய். மேனி பொலிவு அழிந்துவிட்டதே.

 தலைவி: நீகூட இதன் காரணத்தைக் கேட்டுத்தான் அறிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளாயோ?

 தோழி: இல்லையம்மா! சென்றவர் திரும்பும் வரையில் ஆற்றியிருத்தல்தானே நமக்கு அழகு.

 தலைவி: ஆமாம். அவர் எந்த நாட்டுக்குச் செல்வதாகக் கூறினார்.

 தோழி: கடலைத்தாண்டி செல்லவில்லை.

 தலைவி: திரைகடல் தாண்டியும் தேடுவது நல்லதுதானே.

 தோழி: நல்லதுதான். அதற்குரிய காலம் வேறு. இப்பொழுது அவ்விதம் செல்லுதல் கூடாது.

 தலைவி: பின்னர் எங்குப் போவதாகக் கூறினார்.

 தோழி: தமிழ்நாட்டிற்கு வடக்கேயுள்ள நாடுகட்குச் செல்வதாகக் கூறினார்.

 தலைவி: இப்பொழுது தமிழ்நாட்டின் வடஎல்லை எது.

 தோழி: ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் வடஎல்லை இமயமலையாக இருந்தது. இப்பொழுது திருவேங்கடமலைதான் வட எல்லை.

 தலைவி: திருவேங்கட மலைக்கு வடக்கேயுள்ள நாடு?

 தோழி: அம்மலைக்கு வடக்கேயுள்ள நாடு இப்பொழுது வேறு மொழி வழங்கும் நாடாகக் கருதப்படுகின்றது.

 தலைவி: அதன் காரணம் என்ன?

 தோழி: என்ன? அதற்கு வடக்கேயுள்ள தமிழ்மக்களுக்கும், தெற்கேயுள்ள தமிழ் மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இல்லாமல் போய்விட்டது. தெற்கேயாண்ட தமிழ் அரசர்கள் வடக்கேயுள்ள தமிழ் மக்கட்கு நல்ல செந்தமிழ்க் கல்வியை அளிக்கத் தவறிவிட்டனர். வடபகுதிகளில் தமிழ்ப்புலவர்கள் தோன்றி தமிழை வளர்க்கப் பாடுபடவில்லை. இச்சமயத்தில் ஆரியமொழி பேசும் இனத்தார்  அப்பகுதியில் குடியேறினர். அவர்கள்  சென்ற இடயெல்லாம் தம் மொழியையும், வழக்க ஒழுக்கங்களையும் பரப்பி நிலைநிறுத்துவதில் கண்ணும் கருத்துமாயிருந்து தொண்டாற்றினர். அப்பகுதியிலிருந்த தமிழர்கள், தம் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டதோடு, தம் மொழியையும் சிதைத்து வழங்கினர். பின்னர் ஆரியமொழியைப் படித்து, அதன் இலக்கணத்தை ஏற்றுக்கொண்டனர். ஆகவே இன்று, அவர்கள் பேசும் தமிழ் நம் தமிழினின்றும் வேறுபடுகின்றது.

 தலைவி: பிறமொழிச் சொற்களைக் கலந்து பிறமொழி இலக்கணத்தை மேற்கொண்டதனால் அல்லவா இந்நிலைமை ஏற்பட்டுவிட்டது?

 தோழி: ஆம் அம்ம! அப்பகுதியில் வழங்கும் மொழி நம் மொழியினின்றும் வேறுபட்டதாகக் காணப்படுகின்றது.

 தலைவி: இப்பொழுது என்ன பெயர் பெற்றுளது?

 என்ன பெயர்? ஒரு பெயரும் கிடையாது. தமிழ் என்று சொல்லுவதற்கும் தகுதியுடையதில்லை. வேறு மொழியாயும் இல்லை.

 தலைவி: ஆமாம்: ஊரார் கூறும் பழியைக் கேள்வியுற்றாயா?

 தோழி: ஆம். வெண்மணிக்குப் பக்கத்தில் கடல் முழங்குவது போல் பழிச்சொல் முழங்குகின்றது.

 தலைவி: வெண்மணியா?

 தோழி: ஆம்: அங்கேயுள்ள கோட்டை வாயிலின் கதவில் தான் எழினி என்பவனின் பல் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

 தலைவி: ஏன்?

 தோழி: நம் சோழவேந்தன் அவனைப் படைத்துணைக்கு வருமாறு அழைத்திருந்தான். அவன் யானை வேட்டையாடுவதில்  பொழுது போக்கிக் கொண்டு இருந்துவிட்டான்.

 தலைவி: அரசன் என்ன செய்தான்.

 தோழி: சீற்றம் கொண்டு மத்தி என்னும் படைத்தலைவனை அனுப்பினான். அவனுடைய முன்னணிப்படையால் எழினி பிடிக்கப்பட்டான். பிறகு அவன் பல் பிடுங்கப்பட்டது. அவ்வளவுதான்.

elephant-yaanai01

 தலைவி: யானை வேட்டை என்றாய்? அஃது எப்படி?

 தோழி: ஆழமான குழிகளை வெட்டுவர்.

அவற்றின்மேல் குறுக்கும் நெடுக்கும் கோல்களைப் போடுவர். பின்னர்

அவற்றின்மேல், தழைகளையும் சருகுகளையும் பரப்பிக் குழியுள்ள இடமாகத் தெரியாமல் மறைத்து விடுவர். யானைக் கூட்டம் அதை அறியாது அங்குவரின் குழியில் விழுந்துவிடும். பின்னர் பிடிக்கும் வழிகளை நாடிப் பிடித்துப் பழக்குவர்.

 தலைவி: வேங்கடமலைப் பகுதி எல்லாம் எப்படியிருக்குமோ?

 தோழி: குளிர்ந்த இடந்தான். பனி மிகுதியும் உண்டு. மரச்சோலைகள் நிறைய அடர்ந்திருக்கும். வெண்கடப்பமரங்கள் வெண்மையாகப் பூத்துக் காட்சியளிக்கும். யானைகள் அங்குச் செல்லுங்கால் அம்மரங்களில் உடலைத் தேய்க்கும். அப்பொழுது அம்மரங்கள் ஆடுவதனால் பூக்கள் எல்லாம் உதிரும். மழை பெய்யும்போது பனிக்கட்டிகள் விழுவது போல காணப்படும். உதிர்ந்த பூக்கள் பாறைகளில் கிடந்துவாடுவது. உழவர்கள் நல்ல நெல்விதையை வெயிலில் காயவைத்திருப்பதுபோல் தோன்றும்.

 தலைவி: அப்படியா? இவையெல்லாம் எப்படி அறிந்தாய்.

 தோழி: என்ன அம்மா? தலைவர் தங்கட்குக் கூறியபொழுது தான் அறிந்தேன்.

 தலைவி: ஓ ஓ அப்படியா? நான் மறந்தேபோனேன்.

 தோழி: தங்கட்கு நினைவு எல்லாம் அவரிடம். அவர் இடம் பெற்ற உள்ளத்தில் மற்றச் செய்திகளுக்கு இடமேது?

 தலைவி: ஆமாம். அவர் பிரியவேண்டியதும் நாம் வருந்த வேண்டியதும் என்ன வாழ்க்கை.

 தோழி: வருந்தாதே அம்ம. விரைவில் வருவர். இழந்த நலனைத்தருவார்.

 கஉ பாடல்

 அகநானூறு  211  பாலை

 கேளாய் எல்ல! தோழி! வாலிய

 சுதை விரிந்தன்ன பல்பூ மராஅம்

 பறை கண்டன்ன பாவடி நோன்தாள்

 திண்ணிலை மருப்பின் வயக்களிறு உரிஞுதொறும்

 தண்மழை ஆலியின் தாஅய் உழவர்

 வெண்நெல் வித்தின் அறைமிசை உணங்கும்

 பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்

 மொழிபெயர் தேஎத்தராயினும் நல்குவர்.

 குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெருநிரை

 பிடிபடு பூசலின் எய்தாது ஒழியக்

 கடுஞ்சின் வேந்தன்  ஏவலின் எய்தி

 நெடுஞ்சேண் நாட்டில் தலைத்தார்ப்பட்ட

 கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய

 வன்கண் கதவின் வெண்மணி வாயில்

 மத்தி நாட்டிய கல்கெழு பனித்துறை

 நீர் ஒலித்து அன்ன பேஎர்

 அலர் நமக்கொழிய அழப்பிரிந்தோரே

 

பொருள் முடிவுறுதல்

 1. கேளாய் எல்ல தோழி!

 2. குழியிடை……பிரிந்தோரே

 3. வாலிய…….நல்குவர்

 சொற்பொருள்

 க. (அடி க)

 எல்ல -கடி, தோழி – தோழியே, கேளாய் – கேட்பாயாக

 ****

 உ. (அடிகள்  கூ – கஎ)

 குழியிடைக் கொண்ட – பள்ளத்தில் அகப்படுத்திக் கொண்ட, கன்றுடைப் பெருநிறைப்பிடி – கன்றுகளையுடைய பெரிய கூட்டமாக உள்ள பெண்யானைகளை, படுபூசலின் – அகப்படுத்தும் ஆரவாரச் செயலில் ஈடுபட்டிருந்தால், எய்தாது – (எழினிஎன்பான்) வாராது, ஒழிய – நீங்க, கடுஞ்சினவேந்தன் – (அதனால்) மிகுந்த சினங்கொண்ட சோழ அரசன், ஏவலின் – ஆணையால், எய்தி – சென்று, நெடும் சேண் – மிகுந்த தொலைவில் உள்ள, நாட்டில் நாட்டின் கண், தலைத்தார்ப்பட்ட – முதன்மையான முன் அணிப்படையில் பிடிபட்ட, கல்லா எழினி – அரசியல் முறைகளை அறியாத எழினி என்பானின், பல்எறிந்து – பல்லைப்பிடுங்கி, அழுத்திய – பதித்த, வன்கண் – வலிமைபொருந்திய, கதவின் – கதவினையுடைய வெண்மணிவாயில் – வெண்மணி என்னும் ஊரின் கோட்டை வாயிலிடத்தே, மத்தி – சோழனுடைய படைத் தலைவன், நாட்டிய – நிலைநிறுத்திய, கல்கெழு – வெற்றியைக்காட்டும் கல் பொருந்திய, பனித்துறை – குளிர்ந்த துறையின் கண்ணே, நீர் ஒலித்து அன்ன – கடல்நீர் முழங்குவதைப் போன்ற, பேர் அலர் ஊரார் கூறும் பெரும்பழி, நமக்கு ஒழிய நம்மிடத்தே உண்டாகித் தங்கவும், அழ – நாம்வருந்த பிரிந்தோர் – பிரிந்துபோன நம்தலைவர்.

 ங . அடிகள் க – அ

 வாலிய – வெண்மையான, சுதை – சுண்ணாம்பு, விரிந்து அன்ன பரந்துள்ளதைஒத்த, பல்பூ – நிறைந்த பூக்கள் பொருந்திய, மராஅம் – வெண்கடப்ப மரத்தை, பறைகண்டு அன்ன- சிறியபறையினைக் கண்டால் ஒத்த, பரவு அடி – வட்டமாகப்பரந்த அடியினையுடைய, நோன்தாள் – வலிய காலினையும் திண்நிலை – வலிமைபொருந்திய, மருப்பின் – கோட்டினையும் (தந்தத்தினையும்) உடைய, வயக்களிறு – வலிய ஆண்யானை, உரிஞு தொறும் உரசும்தொறும், (அதன் பூக்கள்) தண்மழை ஆலியின்-குளிர்ந்தமழையோடு விழும் பனிக்கட்டிகள் போலதாஅய் உதிர்ந்துபரவி, உழவர் – உழவர்களின், வெண்நெல்வித்தின் வெண்மையான நெல்லின் விதைபோல, அறைமிசை- பாறையின்மீது, உணங்கும்- காயும், பனிபடு சோலை – பனிநீர் தங்கும், சோலை – மரத்தோப்புகள் மிக்க, வேங்கடத்து உம்பர் வேங்கடமலைக்கு அப்பால் உள்ள, மொழிபெயர் மொழிவேறுபட்ட, தேஎத்தராயினும் – தேசத்தின்கண்ணே சென்று இருந்தாராயினும், நல்குவர் – விரைந்திரும்பிவந்து நாம் இழந்த அழகைத்தருவர்:

 ஆராய்ச்சிக் குறிப்பு:

 வரலாறு:  எழினி சிற்றரசன். சோழன் ஆணைக்கு உட்பட்டவன். (சோழன் இன்னான் என்று தெரியவில்லை) சோழன் ஆணைக்குக் கீழ்ப்படிந்து வராமல் யானை வேட்டையில் பொழுது போக்கிக்கொண்டு இருந்துள்ளான். சோழன் சீற்றமுற்றான். தனது படைத் தலைவனாம் மத்தி என்பவனை ஏவினான். மத்தி சென்று எழினியை வென்றான். அவன் பல்லைப் பிடுங்கினான். அப்பல்லை வெண்மனி  என்னும் ஊரின் கோட்டைவாயில் கதவில் பதித்துக்கொள்ளுதல் அக்காலவழக்கம் போலும். வெற்றியைக்குறித்த கல்லும் நாட்டியுள்ளான். இவ்வரலாறெல்லாம் அறியமுடியாத புதை பொருளாகவே இருக்கின்றது.

 யானைவேட்டை: பள்ளம் தோண்டி அப்பள்ளத்தின் மீது குறுக்கும் நெடுக்குமாகக் குச்சிகளைப்போட்டு இலையாலும் தழையாலும் மூடிவைப்பர். யானைக்கூட்டம் அதை அறியாது, தரையென நினைத்துச் செல்லும்; குழியில் வீழ்ந்துவிடும்; பிறகு காலம்பார்த்து அவற்றைப் பிடித்துப் பழக்குவர்.

venkatampuu01

 உவமை: வெண்கடப்பமரத்தில் யானை உரசும்போது பூக்கள் விழுகின்றன. அவை விழுகின்ற தோற்றம். மழைபெய்தால் பனிக்கட்டி விழுகின்றதுபோல் தோன்றுகின்றது என்கிறார். விழுந்த பூக்கள் வாடிக்கிடப்பது நல்ல வெண்மையான நெல்விதைகள் காய்வதை ஒக்கின்றது என்கின்றார். யானை அடிக்குப் பறையை  ஒப்பிடுகின்றார். வெண்கடப்பமரங்கள் பூத்திருப்பது சுண்ணாம்பு பூசப்பட்டதுபோல் காணப்படுகின்து என்கிறார். ஆதலின் மாமூலனார் இயற்கையைக் கூர்ந்து நோக்கும் ஆற்றல் மிக்கவர் என்று அறியலாம்.

 மொழிபெயர்தேஎம்: தமிழினின்றும் மாறுபட்ட மொழி வழங்கிய  இடம், மாமூலனார் காலத்தில் திருவேங்கடத்திற்கு (திருப்பதிக்கு) அப்பால் உள்ள இடம் தமிழ்வழங்காத இடம் என்பதனால். மாமூலனார் காலத்திலேயே வேங்கடத்தின் வடக்கே வழங்கிய தமிழ் உருமாறி வேற்றுமொழியாய் விட்டது என்றும் தமிழ்நாட்டின் வடக்கு எல்லை திருவேங்கடமாய் இருந்தது என்றும் அறியலாம்.

 *****