மாமூலனார் பாடல்கள் 3 – எனது மகள் அவனோடு சென்ற வழி?”
– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)
எனது மகள் அவனோடு சென்ற வழி?”
– செவிலி.
ஆ! எனது அன்பிற்குரிய மகளே! நானும் உனது தோழிகளும் இப்பொழுது நீயில்லாது தனித்திருந்து வருந்த விடுத்துச்சொன்றாயே! எப்படிச் சென்றாய்? நமதுவீடு எவ்வளவு பாதுகாவலையுடையது. நன்னன் தலைநராகிய பாழியைப்போல் மிகுந்த காவல் உடையதல்லவா? இக்காவலைக் கடந்து எவ்விதம் சென்றாய்? நீ சென்ற வழியின் தன்மையை முன்பே அறிந்திருந்தாயா? அவ்வழிகளில் கரடிகள் மிகுதியும் உண்டே. இனிய துணைவனைப் பின்பற்றிச் செல்லுதலே சிறந்த கொள்கை என்று கருதிச் சென்றதனால் வழியைப்பற்றிய அச்சத்தை விட்டாய்போலும், மூங்கில் போல் திரண்டுள்ள தோள்களையுடைய என் தாயே! நான் இப்பொழுது விரும்புவது ஒன்றே ஒன்று தான். நீ செல்லும் வழியில் உள்ள ஊர்கள் நிறைந்த தெருக்களை யுடையன; பொருளற்று வரும் புதியவர்களைக் காப்பாற்றும் பெரும் சிறப்புடையன. அவை, புதிதாக வந்தவர்களுக்கு உதவிபுரிவதில் கோசரின் துளு நாட்டை ஒத்தன.
ஆதலின் அவ்வூர்களின் தெருவிலுள்ள மக்கள் எனது ஆருயிர் மகளாகிய நீ செல்லும் வழியில் உன்னைக் கண்டால், உனக்கு முன்பு அறிமுகமானவர்கள்போல் வேண்டிய உதவியைச் செய்வார்களாக! இதுவே எனது பெருவிருப்பம் அது நிறைவேறுவதாகுக! எனது மகள் சென்ற வழியெல்லாம் அவளுக்கு அறிமுகமானவர்களேபோல் உதவுபவர்களே நிறைந்திருப்பார்களாக! வாழிய என் மகள்! வாழ்க அவள் காதலன்!
2. பாடல்
அகநானுறு : பாலை
1. எம் வெம் காமம் இயைவதாயின்
மெய்ம்மலி பெரும்பூண் செம்மல் கோசர்
கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த
பாகலார்க்கைப் பறைக்கண் பீலித்
5 தோகைக் காவின் துளுநாட்டன்ன
வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பில்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்
அறிந்த மாக்கட்டு ஆகுக! தில்ல
தோழி மாரும் யானும் புலம்பச்
10 சூழியானைச் சுடர்ப்பூண் நன்னன்
பாழி அன்ன கடியுடை வியன் நகர்ச்
செறிந்த காப்பு இகந்து அவனொடு போகி
அத்த இருப்பை ஆர்கழல் புதுப்பூத்
துய்த்தவாய துகள் நிலம் பரக்கக்
15. கொன்றை அஞ்சினைக் குழல் பழம் கொழுதி
வன்கை எண்கின் வயநிரை பரக்கும்
இன்துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்குக்
குன்றவேயில் திரண்ட என்
19 மென்றேள் அஞ்சை சென்ற ஆறே.
இது மகளைப் பிரிந்த தாய் சொல்லியது. தாய் என்றால் அக்காலத்தில் செவிலியைத்தான் குறிக்கும். செவிலி – வளர்ப்புத் தாய். பெற்ற தாயை நற்றாய் என்று அழைத்தனர்.
பதவுரை
எம் – எமது
வெம் – வருத்தம்
காமம் – விருப்பம்
இவையதாயின் – நிறைவேறுவதாய் இருந்தால்,
மெய்ம்மலி – மெய்ம்மொழியால் சிறந்த
பெரும்பூண் – பெரிய அணிகளையுடைய
செம்மல் – தலைமை மிக்க
கோசர் – கோசர்களது
கொம்மை – திரண்ட
அம்பசுங்காய் – அழகிய பசுமையான காயின்
குடுமி – மேற்புறத்து முட்போல் உயர்ந்து தோன்றும் தோல்
விளைந்த – பழுத்து முற்றின்
பாகல் – பாகல் பழத்தை
ஆர்கை – தின்னுதல் உடைய
பறைக்கண் – பறைபோன்ற வட்டமான கண்கள் கொண்ட
பீலி – இறகினையுடைய
தோகை – தோகைகளைக் கொண்ட மயில்கள் மிக்க
காவின் – சோலையினையுடைய
துளுநாட்டு அன்ன – துளுநாட்டை ஒத்த,
வறுங்கை – பொருளில்லாத
வம்பலர் – புதியவர்களை
தாங்கும் – ஆதரித்துக் காப்பாற்றும்
பண்பில் – பண்பாட்டில்
செறிந்த – மிகுந்த
சேரி – தெருக்களையுடைய
செம்மல் – பெருமை மிகுந்த
மூது ஊர் – பழைய ஊர்களில்
அறிந்த – தெரிந்த
மாக்கட்டு – மக்களைஉடையது
ஆகுக – ஆகுக
(தில்ல – விருப்பத்தைக்காட்டும் அசைச்சொல்)
தோழிமாரும் – தோழிகளும்
யானும் – நானும்
புலம்ப – தனித்திருந்து வருந்த
சூழி – முகபடாத்தினையுடைய
யானை – யானைப்படை மிகுந்த
சுடர்ப்பூண் – ஒளிமிக்க அணிகள் தரித்துள்ள
நன்னன் – நன்னன் என்னும் அரசனின்
பாழி அன்ன – பாழி என்னும் பதியை ஒத்த
கடியுடை – காவல் பெற்றுள்ள
வியன் நகர் – பெரிய வீட்டின்
செறிந்த – மிகுந்த
காப்பு – காவலை
இகந்து – கடந்து
அவனொடு – தலைவனொடு
போகி – புறப்பட்டு
அத்தம் – அரியபாலையின் வழியில் உள்ள
இருப்பை – இருப்பை மரத்தின்
ஆர்கழல் – ஆர்க்குக்கழன்ற
புதுப் பூ – புதிய பூக்களை
துய்த்த – தின்ற
வாய – வாயினை உடையவாய்
துகள் – தூளி
நிலம் – நிலத்தில்
பரக்க – எழும்ப
கொன்றை அம்சினை – கொன்றைமரத்தின் அழகிய கிளைகளில் உள்ள
குழல்பழம் – குழல்போன்ற பழங்களை
வன்கை – வலிய கைகளையுடைய
எண்கின் – கரடிகளின்
வயநிரை – பெருங்கூட்டம்
பரக்கும் – பரவிச்செல்லும் (ஆறு)
இன் துணை – இனிய வாழ்க்கைத் துணைவனை
படர்ந்த – நினைத்த
கொள்கையொடு – குறிக்கோளால்
ஒராங்கு – ஒருங்கு கூடி
குன்றவேயில் – குன்றின் கண் உள்ள மூங்கில் போல
திரண்ட – திரட்சி பெற்றுள்ள
எம்மென்றோள் அஞ்ஞை – மெல்லிய தோள்களையுடைய எனது தாய்
சென்ற ஆறே – சென்றவழியே
பொருத்தம்: எம் வெம் காமம் இயைவதாயின், அவனொடு போகி, என் அஞ்ஞை சென்ற ஆறு துளுநாட்டு அன்ன செம்மல் மூதூரில் அறிந்த மாக்கட்டு ஆகுக.
வரலாறு: இப்பாட்டில் கோசர்களைப்பற்றியும் அவர்களது துளுநாட்டைப்பற்றியும் குறிப்பிடுகின்றார். கோசர்கள் சங்க இலக்கியங்களில் ஆங்காங்கு குறிப்பிடப்படுகின்றனர். அவர்கள் மெய்ம்மொழியிற் சிறந்தவர்கள் என்று கூறப்படுகின்றனர். சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் கோசர்களை வீரர்கள் என்று குறிப்பிடுகின்றார். இப்பாட்டிலிருந்து இவர்கள் துளுநாட்டை ஆண்டு வந்த தமிழ் வீரர்களில் ஒரு வகையினர் என்று அறியலாம். அசோகன் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சத்திய புத்திரர்கள் இக் கோசர்கள்தாம் என்று திரு. இராமச்சந்திர தீட்சதர் கருதுகின்றார்(The Silappadikaram P.33). நன்னன்: இவன் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்டவனாதல் வேண்டும், இவனைப்பற்றி மதுரைக்காஞ்சியிலும் மலைபடுகடாத்திலும் சிறிது அறியலாம். இவன் தலை நகர் ‘பாழி’ என்பதாகும். இப்பொழுது அது எப்பெயரால் வழங்குகின்றது என்று தெரியவில்லை. நன்னன்வேண்மா, பெண்கொலை புரிந்த நன்னன், நன்னன், சேய் நன்னன் என்றெல்லாம் சங்க இலக்கியப்பாக்களில் குறிப்பிடப்படுகின்றவர்கள் இவனின் வேறாவர் என்று கருத வேண்டியுள்ளது. இஃது ஆராயதற் பாலது.
நாகரிகம்: தலைமகள் தான் விரும்பிய காதலுடன் செல்லுகின்ற ஒழுக்கம் குறிப்பிடப்படுகின்றது. இதை உடன் போக்கு என்றும் ‘கொண்டுதலைக் கழிதல்’ என்றும் குறிப்பிடுகின்றார் தொல்காப்பியர். விரும்பிய காதலனை மணப்பதற்குப் பெற்றோர் உடன்படாவிடின் இது நிகழும்.
சொல் ஆராய்ச்சி
நகர்: இச் சொல் பண்டைநாளில் பெரிய வீட்டைக் குறித்தது. இதனடியாகவே ‘நகரம்’ என்றசொல் தோன்றி, பெரிய வீடுகள் அடங்கிய பேரூரைக் குறிக்கின்றது. ஆகவே நகரம் என்பது தனித் தமிழ்ச் சொல்லே.
அஞ்ஞை: தாயைக்குறிக்கும் இச்சொல் இன்று வழக்கில் இல்லை. மகளை அஞ்ஞை (தாய்) என்பது அன்பு பற்றி.
மாக்கட்டு: மாக்கள்+து: மாக்கட்டு; ‘மாக்கள்’ என்ற பெயரினின்றும் தோன்றிய குறிப்பு வினைமுற்று.
(தொடரும்)
Leave a Reply